நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.021.திருவாரூர்திருவாதிரைப்பதிகம்

4.021.திருவாரூர்திருவாதிரைப்பதிகம்
பண் - குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
பண் - குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - முல்லைவனேசுவரர்.
தேவியார் - கரும்பனையாளம்மை.
208 | முத்துவிதான மணிப்பொற்கவரி முறையாலே பத்தர்களோடு பாவையர்சூழப் பலிப்பின்னே வித்தகக்கோல வெண்டலைமாலை விரதிகள் அத்தனாரூ ராதிரைநாளா லதுவண்ணம். |
4.021.1 |
எம்பெருமானுக்கு விழாக்காலத்திற் கொண்டு செல்லப்படும் நிவேதனப் பொருள்களின் பின்னே முறைப்படி பத்தி மிக்க ஆடவரும் மகளிரும் மாவிரதியரும் சூழ்ந்துவர, வெள்ளிய தலை மாலையை அணிந்த திருவாரூர்த் தலைவன் முத்துக்களால் அமைக்கப்பட்ட மேற்கட்டியின் நிழலிலே அழகிய பொற்காம்பினை உடைய கவரி வீசப்பெறச் சிறப்பான செயற்கையழகோடு திருஆதிரைத் திருநாளில் வழங்கும் காட்சி அது. அது என்று எப்பொழுதும் அடியவர் மனக்கண் முன் நிற்பதாகும்.
209 | நணியார் சேயார் நல்லார் தீயார் நாடோறும் பிணிதான் றீரு மென்று பிறங்கிக் கிடப்பாரும் மணியே பொன்னே மைந்தா மணாளா வென்பார்கட் கணியா னாரூ ராதிரை நாளா லதுவண்ணம். |
4.021.2 |
திருவாரூருக்கு அண்மையில் உள்ளவர், தூரத்தில் உள்ளவர், நல்லவர்கள், தீக்குணம் மிக்கவர்கள், நாடோறும் தங்கள் பிணிகள் தீரவேண்டும் என்று மிகுதியாக வந்து வழிபடுபவர்கள் ஆகிய யாவரும் 'மணியே பொன்னே வலியவனே தலைவனே' என்று வாய்விட்டு அழைப்ப, அவர்கள் கருத்துக்கு அணியனாய் இருக்கும் ஆரூர்ப் பெருமானுடைய திரு ஆதிரை நாள் திருக்கோலம் அது அது என்று அடியவர் மனக்கண்முன் எப்பொழுதும் நிற்பதாகும்.
210 | வீதிகடோறும் வெண்கொடியோடு விதானங்கள் சோதிகள்விட்டுச் சுடர்மாமணிக ளொளிதோன்றச் சாதிகளாய பவளமுமுத்துத் தாமங்கள் ஆதியாரூ ராதிரைநாளா லதுவண்ணம். |
4.021.3 |
வீதிகள் தோறும் வெண் கொடிகளும் மேற்கட்டிகளும் சிறந்த பவளங்களாலும் முத்துக்களாரும் புனையப்பட்ட மாலைகளும் தம்மிடையே பதிக்கப்பட்ட மணிகளால் பேரொளியை வெளிப்படுத்த, எல்லாப் பொருள்களுக்கும் முதல்வனாகிய ஆரூரனுடைய திருவாதிரைத் திருநாளின் பெருவனப்பு எப்பொழுதும் அது அது என்று அடியவர்கள் நினைக்குமாறு உள்ளது.
211 | குணங்கள்பேசிக் கூடிப்பாடித் தொண்டர்கள் பிணங்கித்தம்மிற் பித்தரைப்போலப் பிதற்றுவார் வணங்கிநின்று வானவர்வந்து வைகலும் அணங்கனாரூ ராதிரை நாளா லதுவண்ணம். |
4.021.4 |
நாள்தோறும் தேவர்கள் வந்து வணங்கி நிற்க, தெய்வத் தலைவானகிய எம்பெருமானுடைய பல பண்புகளையும் பேசிக்கொண்டு ஒன்று சேர்ந்து அவனைப்பற்றிப் பாடி அடியார்கள் அவனுக்குத் தொண்டு செய்வதில் ஒருவருக்கு ஒருவர் முற்பட்டுப் பித்தரைப்போல அடைவு கெடப் பலவாறு பேசும் ஆரூர் ஆதிரைத் திருநாள் அழகு என்றும் அவர்கள் உள்ளத்தில் நிலை நிற்பதாகும்.
212 | நிலவெண்சங்கும் பறையும்மார்ப்ப நிற்கில்லாப் பலருமிட்ட கல்லவடங்கள் பரந்தெங்கும் கலவமஞ்ஞை காரென்றெண்ணிக் களித்துவந் தலமராரூ ராதிரைநாளா லதுவண்ணம். |
4.021.5 |
நிலாப் போன்று வெள்ளிய சங்குகளும் பறைகளும் ஒலிப்பவும் நின்ற இடத்தில் மீண்டும் நில்லாமல் கூத்தாடும் பலரும் காலில் கட்டிக் கொண்ட சதங்கை முதலியவற்றின் ஒலி பரவவும் அவற்றின் ஒலிகளை மேகத்தின் ஒலி என்று கருதித் தோகைகளை உடைய ஆண் மயில்கள் மகிழ்வோடு வந்து ஆடிச்சுழலும்படியாக ஆரூர்த் திருவாதிரைத் திருவிழாவின் அழகு என்றும் உள்ளத்தில் நிலைபெறுவதாகும்.
213 | விம்மாவெருவா விழியாத்தெழியா வெருட்டுவார் தம்மாண்பிலராய்த் தரியார் தலையான் முட்டுவார் எம்மானீச னெந்தையெ னப்ப னென்பார்கட் கம்மானாரூ ராதிரைநாளா லதுவண்ணம். |
4.021.6 |
பொருமி, வாய்வெருவி விழித்து உரத்துக்கூறி மற்றவர்களை அஞ்சி ஒதுங்கச் செய்பவராய்த் தமக்கு என்று எந்த நற்செயல்களையும் பண்பையும் கொள்ளாமல் எல்லாம் ஈசன் செயல் என்று மகிழ்ச்சியால் தலையை மோதிக்கொண்டு 'எம்மான் எம்மை அடக்கி ஆள்பவன்; எம் தலைவன்' என்று பெருமான் புகழ் ஓதும் அடியவர் தலைவனாகிய ஆரூர்ப் பெருமானின் திருவாதிரைத் திருநாளின் அழகு என்றும் உள்ளத்தில் நிலைபெறுவதாகும்.
214 | 214செந்துவர்வாயார் செல்வனசேவடி சிந்திப்பார் மைந்தர்களோடு மங்கையர்கூடி மயங்குவார் இந்திரனாதி வானவர்சித்த ரெடுத்தேத்தும் அந்திரனாரூ ராதிரைநாளா லதுவண்ணம். |
4.021.7 |
இந்திரன் முதலிய தேவர்களும் சித்தர்களும் பலவாறு துதிக்கும் தனியனாகிய ஆரூர்ப் பெருமானுடைய திருவாதிரைத் திருவிழாவில் செம்பவளம் போன்ற வாயை உடைய ஆடவரோடு மகளிரும் கூடி அவன் திருவடிகளைச் சிந்தித்து ஈடுபடுபவருடைய அழகிய காட்சி என்றும் உள்ளத்தில் நிலை பெறுவதாகும்.
215 | முடிகள்வணங்கி மூவாதார்கண் முன்செல்ல வடிகொள் வேய்த்தோள் வானரமங்கையர் பின்செல்லப் பொடிகள்பூசிப் பாடும்தொண்டர் புடைசூழ அடிகளாரூ ராதிரைநாளா லதுவண்ணம். |
4.021.8 |
தலையால் வணங்கித் தேவர்கள் முன்னே செல்லவும் செப்பமான மூங்கில்போன்ற தோள்களை உடைய தேவருலகப் பெண்கள் பின்னே செல்லவும் திருநீற்றைப் பூசிய அடியவர்கள் நாற்புறமும் சூழ்ந்து நிற்கவும் எம்பெருமான் ஆரூரில் திருவாதிரைத் திருவிழாவில் காணப்படும் அழகு என்றும் உள்ளத்து நிலை பெறுவதாகும்.
216 | துன்பநும்மைத் தொழாதநாள்க ளென்பாரும் இன்பநும்மை யேத்துநாள்க ளென்பாரும் நும்பினெம்மை நுழையப்பணியே யென்பாரும் அன்பனாரூ ராதிரைநாளா லதுவண்ணம். |
4.021.9 |
எல்லோருக்கும் அன்பனாகிய ஆரூர்ப் பெருமானுடைய திருவாதிரைத் திருவிழாவில் அடியார்கள் பெருமானாரே! உம்மை அடியேங்கள் வழிபடாத நாள்கள் துன்பம் தரும் நாள்கள்; ஆதலின் நும் திருவடித் தொண்டில் ஈடுபட்டு அடியேங்கள் நும்பின் எப்பொழுதும் வருமாறு எங்களைச் செயற்படுத்துவீர் என்று வேண்டும் காட்சி என்றும் உள்ளத்து நிலை பெறுவதாகும்.
217 | 217பாரூர்பௌவத் தானைபத்தர் பணிந்தேத்தச் சீரூர்பாட லாடலறாத செம்மாப்பார்ந் தோரூரொழியா துலகமெங்கு மெடுத்தேத்தும் ஆரூரன்ற னாதிரைநாளா லதுவண்ணம். |
4.021.10 |
உலகைச் சூழ்ந்து நிற்கும் கடல்போல எல்லை காண ஒண்ணாத பெருமானை அடியார்கள் வணங்கித் துதித்தலால் சிறப்பு மிகுந்த பாடல்கள் ஒலித்தல் நீங்காத பெருமிதத்தை நுகர்ந்தவாறு அப்பகுதியிலுள்ள ஊர்களைச் சேர்ந்தவர்கள் யாவரும் எஞ்சாது எங்கும் எம்பெருமான் புகழை எடுத்துக் கூறித் துதிக்கும் ஆரூர்ப் பெருமானுடைய திருவாதிரைத் திருநாளின் வனப்பு என்றும் அது அது என்று நினைக்குமாறு உள்ளத்தில் நிலைபெறுவதாகும்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.021.திருவாரூர்திருவாதிரைப்பதிகம் , லதுவண்ணம், ராதிரைநாளா, திருவாதிரைத், என்றும், ஆரூர்ப், உள்ளத்தில், நிலை, பெருமானுடைய, அழகு, உடைய, எப்பொழுதும், திருநாளின், நிலைபெறுவதாகும், பெறுவதாகும், திருமுறை, நிற்பதாகும், அடியவர், திருவிழாவில், திருவாரூர்திருவாதிரைப்பதிகம், காட்சி, அடியார்கள், வந்து, நாள்கள், பலவாறு, உள்ளத்து, அடியேங்கள், செல்லவும், வணங்கித், துதிக்கும், சூழ்ந்து, எம்பெருமான், யாவரும், பின்னே, மகளிரும், வெள்ளிய, திருச்சிற்றம்பலம், பதிகங்கள், நான்காம், தேவாரப், தலைவன், அழகிய, அடியவர்கள், நினைக்குமாறு, உள்ளவர், நாளா, பொன்னே, ராதிரை, தேவர்கள்