நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.017.திருவாரூர் - அரநெறி

4.017.திருவாரூர் - அரநெறி
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - முல்லைவனேசுவரர்.
தேவியார் - கரும்பனையாளம்மை.
166 | எத்தீ புகினு மெமக்கொரு தீதிலை தெத்தே எனமுரன் றெம்மு ளுழிதர்வர் முத்தீ யனையதொர் மூவிலை வேல்பிடித் தத்தீ நிறத்தா ரரநெறி யாரே. |
4.017.1 |
உலகம் அறிந்த தீயின் நிறத்தவராகிய அரநெறிப் பெருமானார் முத்தீக்களைப் போன்று, மூன்று இலைவடிவாக அமைந்த வேலினை ஏந்தித் தெத்தே என்ற பண் ஒன்றினை நுணுகிப் பாடிக் கொண்டு எம் உள்ளத்தில் கூத்து நிகழ்த்துகின்றார். ஆதலின் எமக்கு எந்தத் தீயினிடைப் புக நேரினும், அத்தீயினால் தீங்கு யாதும் நிகழாது.
167 | வீரமும் பூண்பர் விசயனொ டாயதொர் தாரமும் பூண்பர் தமக்கன்பு பட்டவர் பாரமும் பூண்பர்நற் பைங்கண் மிளிரர வாரமும் பூண்ப ரரநெறி யாரே. |
4.017.2 |
அரநெறிப் பெருமான் நல்ல பசிய கண்கள் ஒளிவீசும் பாம்பினை மாலையாக அணிபவர். தம்மிடம் அன்புடையவருடைய பொறுப்புக்களைத் தாமே ஏற்று அருளுபவர். பார்வதியையும் உடன் அழைத்துச் சென்று அருச்சுனனோடு நிகழ்த்தப்பட்ட போரில் வீரச் செயல்களை நிகழ்த்துவர்.
168 | தஞ்ச வண்ணத்தர் சடையினர் தாமுமொர் வஞ்ச வண்ணத்தர் வண்டார்குழ லாளொடும் துஞ்ச வண்ணத்தர் துஞ்சாதகண் ணார்தொழும் அஞ்ச வண்ணத்த ரரநெறி யாரே. |
4.017.3 |
அரநெறிப் பெருமானார் தம்மைத் தஞ்சம் என்று அடைந்தவருக்குத் தாம் அடைக்கலம் நல்கும் இயல்பினர். சடை முடியை உடையவர். அடியவர் அல்லாதாருக்கு வஞ்சனையான இயல்பினர். வண்டுகள் பொருந்திய கூந்தலை உடைய பார்வதியோடும் பொருந்தும் இயல்பினர். இமையாக் கண்களை உடைய மேலோர் தொழும் அம்சமந்திர ஜபயோகம் புரிபவர்.
169 | விழித்தனர் காமனை வீழ்தர விண்ணின் றிழித்தனர் கங்கையை யேத்தினர் பாவம் கழித்தனர் கல்சூழ் கடியரண் மூன்றும் அழித்தன ராரூ ரரநெறி யாரே. |
4.017.4 |
ஆரூர் அரநெறிப் பெருமானார் காமன் பொடியாய் விழுமாறு அவனை நெற்றிக் கண்ணால் நோக்கியவர். வானத்திலிருந்து கங்கையைத் தம் சடையில் இறங்கச் செய்தவர். தம்மை வழிபடுபவருடைய தீவினைகளைப் போக்குபவர். கற்களால் சூழப்பட்ட காவல் பொருந்திய மும்மதில்களையும் அழித்தவர்.
170 | துற்றவர் வெண்டலை யிற்சுருள் கோவணம் தற்றவர் தம்வினை யானவெ லாமற அற்றவ ராரூ ரரநெறி கைதொழ உற்றவர் தாமொளி பெற்றனர் தாமே. |
4.017.5 |
மண்டையோட்டில் பிச்சைவாங்கி உண்பவரும், சுருண்ட கோவணத்தை இறுக்கிக் கட்டியவரும், இயல்பாகவே வினையின் நீங்கியவருமாய் உள்ள எம்பெருமானாருடைய ஆரூர் அரநெறிக் கோயிலைத் தம் வினைகளாயின எல்லாம் நீங்குமாறு கையால் தொழும் வாய்ப்புப் பெற்றவர், ஞான ஒளி பெற்றவராவர்.
171 | கூடர வத்தர் குரற்கிண் கிணியடி நீடர வத்தர்முன் மாலை யிடை யிருள் பாடர வத்தர் பணமஞ்சு பைவிரித் தாடர வத்த ரரநெறி யாரே. |
4.017.6 |
ஆரூர் அரநெறிப் பெருமானார் திருவடிகளிலே அரிபெய்சிலம்பினராய் ஒலிக்கும், கிண்கிணியால் ஏற்படும் நீண்ட ஒலியினை உடையவராய், மாலையின் முற்பட்ட பகுதியில் இருளிலே பாடும் ஒலியினராய், படம் விரித்து ஆடும் பாம்பை அணிந்தவராய் உள்ளார்.
172 | 172,கூடவல்லார்குறிப் பில்லுமை யாளொடும் பாடவல் லார்பயின் றந்தியுஞ் சந்தியும் ஆடவல் லார்திரு வாரூ ரரநெறி நாடவல் லார்வினை வீட வல்லாரே. |
4.017.7 |
உமாதேவியின் குறிப்பறிந்து அவளோடு இணைந்திருத்தலில் வல்லவராய், நண்பகல் அந்தியிலும் காலை மாலைச் சந்திகளிலும் பலகாலும் பாடவல்லவராய், கூத்து நிகழ்த்துதலில் வல்லவராய் உள்ள பெருமானார் உறையும் திருவாரூர் அரநெறியை விரும்பித் தொழவல்லவர்கள் வினைகளைப் போக்கிக் கொள்ளும் ஆற்றலுடையவராவர்.
173 | பாலை நகுபனி வெண்மதி பைங்கொன்றை மாலையுங் கண்ணியு மாவன சேவடி காலையு மாலையுங் கைதொழு வார்மனம் ஆலைய மாரூ ரரநெறி யார்க்கே. |
4.017.8 |
ஆரூர் அரநெறிப் பெருமானாருக்குப் பாலை ஒத்த வெண்ணிறமுடைய குளிர்ந்த பிறையும் பசிய கொள்றை மாலையும் முடிமாலைகள் ஆகும். அவர் திருவடிகளைக் காலையும் மாலையும் கைதொழவல்ல அடியவர் உள்ளங்களே அவருக்கு உறைவிடமாகும்.
174 | முடிவண்ணம் வானமின் வண்ணந்தம் மார்பின் பொடிவண்ணந் தம்புக ழூர்தியின் வண்ணம் படிவண்ணம் பாற்கடல் வண்ணஞ்செஞ் ஞாயி றடிவண்ண மாரூ ரரநெறி யார்க்கே. |
4.017.9 |
திருவாரூர் அரநெறியார்க்கு முடியின் நிறம் மேகத்தின் மின்னலின் நிறமாகும். அவர் மார்பில் அணிந்த திருநீற்றின் நிறம் அவர் வாகனமான காளையின் நிறமாகும். அவருடைய திருமேனியின் நிறம் பாற்கடல் நிறமாகும். அவர் திருவடியின் நிறம் சிவந்த காலை ஞாயிற்றின் நிறமாகும்.
175 | பொன்னவில் புன்சடை யானடி யன்னிழல் இன்னருள் சூடியௌ காதுமி ராப்பகல் மன்னவர் கின்னரர் வானவர் தாந்தொழும் அன்னவ ராரூ ரரநெறி யாரே. |
4.017.10 |
ஆரூர் அரநெறியார் பொன்போன்ற சிவந்த முறுக்கேறிய சடையை உடையவர். அவர் அவருடைய திருவடி நிழலிலே இனிய அருளைச் சூடி வழிபடுதலை வெறுக்காது இரவும் பகலும் அரசர்களும் கின்னரர் என்ற தேவகணத்தாரும் வானவர்களும் தொழும் அத்தன்மையை உடையவர்.
176 | பொருண்மன் னனைப்பற்றிப் புட்பகங்கொண்ட மருண்மன் னனையெற்றி வாளுட னீந்து கருண்மன்னு கண்டங் கறுக்கநஞ் சுண்ட அருண்மன்ன ராரூ ரரநெறி யாரே. |
4.017.11 |
ஆரூர் அரநெறியார், குபேரனைப் பிடித்து அவனிடமிருந்து புட்பக விமானத்தைக் கைப்பற்றிக்கொண்ட, உள்ள மயக்கம் கொண்ட அரசனாகிய இராவணனை முதலில் வருத்திப்பின் அவனுக்கு வாளும் உடனே அளித்து, கழுத்துக் கறுக்குமாறு கருமை பொருந்திய விடத்தை உண்ட அருள் வடிவான தலைவராவார்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.017.திருவாரூர் - அரநெறி , ரரநெறி, யாரே, அரநெறிப், ஆரூர், அவர், திருவாரூர், பெருமானார், ராரூ, நிறம், நிறமாகும், உடையவர், திருமுறை, இயல்பினர், உள்ள, தொழும், பொருந்திய, அரநெறி, வண்ணத்தர், யார்க்கே, பதிகங்கள், மாலையும், பாற்கடல், தேவாரப், கின்னரர், அரநெறியார், சிவந்த, அவருடைய, நான்காம், மாரூ, காலை, உடைய, பசிய, அடியவர், தாமே, பூண்பர், கூத்து, வல்லவராய், வத்தர், திருச்சிற்றம்பலம், பாலை