நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.018.விடந்தீர்த்ததிருப்பதிகம்

4.018.விடந்தீர்த்ததிருப்பதிகம்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
இது அப்பூதிநாயனார் புத்திரரைத் தீண்டியவிடம் நீங்கும்படி அருளிச்செய்தது.
177 | ஒன்றுகொ லாமவர் சிந்தை யுயர்வரை ஒன்றுகொ லாமுய ரும்மதி சூடுவர் ஒன்றுகொ லாமிடு வெண்டலை கையது ஒன்றுகொ லாமவ ரூர்வது தானே. |
4.018.1 |
எம்பெருமானுடைய உள்ளத்தைப்போல உயர்ந்த கயிலை மலையும், அவர் சூடும் உயர்ந்த பிறையும் அவர் பிச்சை எடுக்குமாறு கையில் ஏந்திய மண்டையோடும், அவர் இவரும் காளையும் எண்ணிக்கையில் ஒன்று ஒன்றே போலும்.
178 | இரண்டுகொ லாமிமை யோர்தொழு பாதம் இரண்டுகொ லாமிலங் குங்குழை பெண்ணாண் இரண்டுகொ லாமுரு வஞ்சிறு மான்மழு இரண்டுகொ லாமவ ரெய்தின தாமே. |
4.018.2 |
தேவர்களும் தொழும் எம்பெருமானுடைய பாதங்களும், விளங்கும் அவருடைய காதணிகளும் பெண்ணும் ஆணுமாகிய அவர் உருவமும். அவர் ஏந்திய மான்குட்டியும் மழுவாயுதமும் இரண்டு என்ற எண்ணிக்கையுடையனபோலும். ஏந்தின தாமே - பாடம்.
179 | மூன்றுகொ லாமவர் கண்ணுத லாவன மூன்றுகொ லாமவர் சூலத்தின் மொய்யிலை மூன்றுகொ லாங்கணை கையது வின்னாண் மூன்றுகொ லாம்புர மெய்தன தாமே.; |
4.018.3 |
எம்பெருமானுடைய நெற்றிக்கண்ணோடு சேர்த்துக் கண்கள் மூன்று. அவர் ஏந்திய சூலத்தில் இலை வடிவான பகுதி மூன்று. அவர் கையிலுள்ள வில், நாண், கணை என்பன மூன்று. அவர் அம்பு எய்து அழித்த பகைவர்களின் மதில் மூன்று போலும்.
180 | நாலுகொ லாமவர் தம்முக மாவன நாலுகொ லாஞ்சன னம்முதற் றோற்றமும் நாலுகொ லாமவ ரூர்தியின் பாதங்கள் நாலுகொ லாமறை பாடினதாமே.; |
4.018.4 |
எம்பெருமானுடைய திருமுகங்கள் நான்கு. அவரால் படைக்கப்பட்ட படைப்பு-நிலம், கருப்பை, முட்டை, வியர்வை, இவற்றிலிருந்து தோன்றும் நால்வகையது. அவர் வாகனமாகிய காளையின் பாதங்கள் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பன. அவர் பாடிய வேதங்கள் இருக்கு, யசுர், சாமம், அதர்வம் என்ற நான்கு போலும்.
181 | அஞ்சுகொ லாமவ ராடர வின்படம் அஞ்சுகொ லாமவர் வெல்புல னாவன அஞ்சுகொ லாமவர் காயப்பட் டான்கணை அஞ்சுகொ லாமவ ராடின தாமே. |
4.018.5 |
எம்பெருமான் ஆட்டுகின்ற பாம்பின் படங்கள் ஐந்து, அவர் வென்ற புலன்களும் ஐந்து. அவரால் வெகுளப்பட்ட மன்மதனுடைய பூ அம்புகளும் ஐந்து. அவர் அபிடேகம் செய்வன பசுவினிடத்திலிருந்து தோன்றும் பஞ்சகவ்வியம் என்ற ஐந்து போலும்.
182 | ஆறு கொ லாமவ ரங்கம் படைத்தன ஆறுகொ லாமவர் தம்மக னார்முகம் ஆறுகொ லாமவர் தார்மிசை வண்டின்கால் ஆறுகொ லாஞ்சுவை யாக்கின தாமே. |
4.018.6 |
அவர் வேதத்துக்கு அங்கங்களாகப் படைத்தன ஆறு. அவருடைய மகனாகிய முருகனுடைய முகங்கள் ஆறு. அவர் மாலைமிசை அமர்ந்துள்ள வண்டின் கால்களும் ஆறு. அவர் உணவுச் சுவையாக அமைத்தனவும் ஆறுபோலும்.
183 | ஏழுகொ லாமவ ரூழி படைத்தன ஏழுகொ லாமவர் கண்ட விருங்கடல் ஏழுகொ லாமவ ராளு முலகங்கள் ஏழுகொ லாமிசை யாக்கின தாமே. |
4.018.7 |
அவர் படைத்த படைப்புக்கள் எழுவகையன. அவர் படைத்த கடல்கள் ஏழாகும். அவர் ஆளும் உலகங்களும் மேல் உலகம் ஏழும் கீழ் உலகம் ஏழும். அவர் படைத்த இசைகளும் ஏழு போலும்.
184 | எட்டுக்கொ லாமவ ரீறில் பெருங்குணம் எட்டுக்கொ லாமவர் சூடு மினமலர் எட்டுக்கொ லாமவர் தோளிணை யாவன எட்டுக்கொ லாந்திசை யாக்கின தாமே. |
4.018.8 |
அவருடைய அழிவில்லாத பெருங்குணங்களும் எட்டு. அவர் சூடும் மலர்களில் இனங்களும் எட்டு. அவருடைய ஒன்றற்கொன்று இணையான தோள்களும் எட்டு. அவர் படைத்த திசைகளும் எட்டும் போலும்.
185 | ஒன்பது போலவர் வாசல் வகுத்தன ஒன்பது போலவர் மார்பினி னூலிழை ஒன்பது போலவர் கோலக் குழற்சடை ஒன்பது போலவர் பாரிடந் தானே. |
4.018.9 |
இவ்வுடம்பில் அவர் வகுத்த துவாரங்கள் ஒன்பது. அவர் மார்பில் அணிந்த பூணூலின் இழைகள் ஒன்பது. அவருடைய அழகிய சுருண்ட சடை ஒன்பதாக வகுக்கப்பட்டது. அவர் படைத்த நிலவுலகம் ஒன்பது கண்டங்களை உடையது போலும்.
186 | பத்துக்கொ லாமவர் பாம்பின்கண் பாம்பின்பல் பத்துக்கொ லாமெயி றுந்நெரிந் துக்கன பத்துக்கொ லாமவர் காயப்பட் டான்றலை பத்துக்கொ லாமடி யார்செய்கை தானே. |
4.018.10 |
அவர் அணிந்த ஐந்தலைப் பாம்பின் கண்களும் உயிரைப் போக்கும் பற்களும் பத்து. அவரால் கோபிக்கப்பட்ட இராவணனுடைய தலைகளும் பத்து. அவர் அழத்தியதால் நொறுங்கிய அவன் பற்களும் பத்து. அப்பெருமானுடைய அடியார்களுடைய தசகாரியம் என்னும் செயல்களும் பத்துப் போலும்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.018.விடந்தீர்த்ததிருப்பதிகம் , அவர், லாமவர், லாமவ, போலும், தாமே, படைத்த, அவருடைய, ஐந்து, போலவர், ஒன்பது, மூன்று, எம்பெருமானுடைய, திருமுறை, விடந்தீர்த்ததிருப்பதிகம், அவரால், யாக்கின, தானே, பத்து, ஏந்திய, எட்டு, ஏழும், அணிந்த, பற்களும், உலகம், நான்காம், தேவாரப், காயப்பட், என்பன, திருச்சிற்றம்பலம், சூடும், நான்கு, தோன்றும், பாம்பின், உயர்ந்த, பதிகங்கள்