பாடல் 983 - இராமேசுரம் - திருப்புகழ்

ராகம் - ஆனந்த பைரவி தாளம் - சது.ரத்ருவம் - கண்டநடை - 35
- எடுப்பு - /4/4/4 0
தானதன தானதன தானதன தானதன தானதன தானதன தானதன தானதன தானதன தானதன தானதன தானதன ...... தனதான |
வாலவய தாகியழ காகிமத னாகிபணி வாணிபமொ டாடிமரு ளாடிவிளை யாடிவிழல் வாழ்வுசத மாகிவலு வாகிமட கூடமொடு ...... பொருள்தேடி வாசபுழு கேடுமல ரோடுமன மாகிமகிழ் வாசனைக ளாதியிட லாகிமய லாகிவிலை மாதர்களை மேவியவ ராசைதனி லேசுழல ...... சிலநாள்போய்த் தோல்திரைக ளாகிநரை யாகிகுரு டாகியிரு கால்கள்தடு மாறிசெவி மாறிபசு பாசபதி சூழ்கதிகள் மாறிசுக மாறிதடி யோடுதிரி ...... யுறுநாளிற் சூலைசொறி யீளைவலி வாதமொடு நீரிழிவு சோகைகள மாலைசுர மோடுபிணி தூறிருமல் சூழலுற மூலகசு மாலமென நாறியுட ...... லழிவேனோ நாலுமுக னாதியரி யோமெனஅ தாரமுரை யாதபிர மாவைவிழ மோதிபொரு ளோதுகென நாலுசிர மோடுசிகை தூளிபட தாளமிடு ...... மிளையோனே நாறிதழி வேணிசிவ ரூபகலி யாணிமுத லீணமக வானைமகிழ் தோழவன மீதுசெறி ஞானகுற மாதைதின காவில்மண மேவுபுகழ் ...... மயில்வீரா ஓலமிடு தாடகைசு வாகுவள ரேழுமரம் வாலியொடு நீலிபக னோடொருவி ராதனெழு மோதகட லோடுவிறல் ராவணகு ழாமமரில் ...... பொடியாக ஓகைதழல் வாளிவிடு மூரிதநு நேமிவளை பாணிதிரு மார்பனரி கேசன்மரு காஎனவெ யோதமறை ராமெசுர மேவுகும ராவமரர் ...... பெருமாளே. |
கட்டிளமை வயதை அடைந்து, அழகு நிரம்பப்பெற்று, மன்மதன் போல் விளங்கி, ஊதியம் தரும் பல வாணிபப் பணிகளை மேற்கொண்டு நடத்தி, மயக்க அறிவைப்பெற்று காம விளையாட்டுக்கள் ஆடி, பயனற்ற வாழ்க்கையையே நிலையானது என்று கருதி, அதிலேயே மனம் உறுதிபெற்று, மாட கூடம் கொண்ட செல்வனாயப் பொருளைத் தேடி, நறு மணம் உள்ள புனுகு, மற்றும் இதழ்களோடு கூடிய மலர்கள் இவற்றில் மனத்தைச் செலுத்தியவனாக, மகிழ்ச்சியுடன் வாசனைப் பொருள்கள் முதலியவற்றை அணிந்தவனாய், காமப் பற்றைக்கொண்டு பொது மகளிரை விரும்பி அவர்கள் மீது மோகம் கொண்டு அவர்கள் பின் சுழல, (அங்ஙனம்) சில நாட்கள் கழிய, உடலில் தோல் சுருங்கலுற்று, மயிர் வெண்ணிறம் பூண்டு, கண்கள் பார்வை இழந்து, இரண்டு கால்களும் தடுமாற்றம் அடைந்து, காதுகள் கேட்கும் தொழில் அற்று, உயிர், தளை, கடவுள் என்னும் முதற் பொருள்களைப் பற்றிய அறிவு யாவும் மறைதலுற்று, சுகமெல்லாம் கெட்டு, கையில் தடி ஏந்தித் திரிகின்ற முதுமைப் பருவத்தில், சூலை நோய், சொறி நோய், கோழை, இழுப்பு, வாயு மிகுதலால் வரும் பிணிகள், நீரிழிவு, இரத்தமின்மையால் வரும் சோகை, கண்ட மாலை, காய்ச்சல் இவைகளுடன் சேர்ந்துள்ள கக்குவான் இருமல், இவை எல்லாம் சூழ்ந்து, அடிக்காரணமாகிய இந்தக் கூளம் போன்ற உடல் துர் நாற்றம் அடைந்து நான் மடிந்து போவேனோ? நான்கு முகங்களைக் கொண்டவனும், யாவற்றுக்கும் ஆதாரமான பிரணவத்தின் பொருளைச் சொல்லத் தெரியாதவனுமாகிய பிரமனை, விழும்படியாகத் தாக்கி, சரியான பொருளைச் சொல்லுக என்று அவனுடைய நான்கு முகங்களுடன் குடுமியும் சிதறுண்டு அலைய தாளமிடுவது போல் குட்டிய இளையவனே, நறுமணம் வீசும் கொன்றையை அணிந்த ஜடையை உடைய சிவபெருமானுடைய பாகத்தில் அமைந்துள்ள தேவி பார்வதி முதலில் ஈன்ற குழந்தையாகிய கணபதி மகிழும் சகோதர நண்பனே, வள்ளி மலைக் காட்டில் பொருந்தி இருந்த ஞானக் குறப் பெண் வள்ளியை, தினைப் புனச்சோலையில் திருமணம் செய்துகொண்ட புகழை உடைய மயில் வீரனே, கூச்சலிட்டு வந்த தாடகை, சுபாகு, வளர்ந்திருந்த மரா மரங்கள் ஏழு, வாலி மற்றும் நீலி, பகன், ஒப்பற்ற விராதன், அலைகள் எழுந்து வீசும் கடல், இவைகளுடன் வலிமை வாய்ந்த ராவணனுடைய கூட்டம் யாவும் போரில் இறந்து பொடிபட்டழிய, களிப்புடன் நெருப்பு அம்பை வீசும் வலிமை வாய்ந்த வில், சக்கரம், சங்கு ஆகிய ஆயுதங்களைக் கையில் ஏந்தியவனும், லக்ஷ்மியை மார்பில் தரித்தவனுமான ஹரி, கேசவன் ஆகிய திருமாலின் மருகனே என்று வேதங்கள் ஓதிப் புகழும் இராமேசுரத்தில் வீற்றிருக்கும் குமரனே, தேவர்களின் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 983 - இராமேசுரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானதன, வீசும், அடைந்து, பொருளைச், உடைய, வலிமை, ஆகிய, வாய்ந்த, நான்கு, வரும், பெருமாளே, நீரிழிவு, போல், யாவும், நோய், கையில், இவைகளுடன்