பாடல் 979 - திருப்புத்தூர் - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தனத்தத் தான தனன தனதன தனத்தத் தான தனன தனதன தனத்தத் தான தனன தனதன ...... தனதான |
கருப்புச் சாப னனைய இளைஞர்கள் ப்ரமிக்கக் காத லுலவு நெடுகிய கடைக்கட் பார்வை யினிய வனிதையர் ...... தனபாரங் களிற்றுக் கோடு கலச மலிநவ மணிச்செப் போடை வனச நறுமலர் கனத்துப் பாளை முறிய வருநிக ...... ரிளநீர்போற் பொருப்பைச் சாடும் வலியை யுடையன அறச்சற் றான இடையை நலிவன புதுக்கச் சார வடமொ டடர்வன ...... எனநாளும் புகழ்ச்சிப் பாட லடிமை யவரவர் ப்ரியப்பட் டாள வுரைசெ யிழிதொழில் பொகட்டெப் போது சரியை கிரியைசெய் ...... துயிர்வாழ்வேன் இருட்டுப் பாரில் மறலி தனதுடல் பதைக்கக் கால்கொ டுதைசெய் தவன்விழ எயிற்றுப் போவி யமர ருடலவர் ...... தலைமாலை எலுப்புக் கோவை யணியு மவர்மிக அதிர்த்துக் காளி வெருவ நொடியினில் எதிர்த்திட் டாடும் வயிர பயிரவர் ...... நவநீத திருட்டுப் பாணி யிடப முதுகிடை சமுக்கிட் டேறி யதிர வருபவர் செலுத்துப் பூத மலகை யிலகிய ...... படையாளி செடைக்குட் பூளை மதிய மிதழிவெ ளெருக்குச் சூடி குமர வயலியல் திருப்புத் தூரில் மருவி யுறைதரு ...... பெருமாளே. |
(இப்பாடலின் பின்பாதி சிவபெருமானை வர்ணிக்கிறது). கரும்பு வில்லை உடைய மன்மதன் போன்ற இளைஞர்கள் வியந்து மயங்கும்படி, காம இச்சை உலவுகின்றதும் நீண்டதுமான கடைக்கண் பார்வையைக் கொண்ட இனிய விலைமாதர்களின் தனபாரங்கள் யானையின் தந்தம், குடம், நிறைந்த நவரத்தினச் சிமிழ், நீரோடையில் தாமரையின் நறுமண மலர், பாரத்துடன் தென்னம் பாளையும் முறியும்படி எழுந்துள்ள ஒளியுள்ள இள நீரைப் போல, மலையையும் மோதி வெல்லக்கூடிய வலிமையைக் கொண்டவை, மிகவும் இளைத்துள்ள இடையை மெலியும்படி செய்பவை, புதிய கச்சுடனும் முத்து மாலையுடனும் நெருங்குபவை என்றெல்லாம் நாள் தோறும் அம்மாதர்களுக்குப் புகழ்ச்சிப் பாடல்களை அடிமைப்பட்ட அந்த அந்தக் காதலர்கள் ஆசையுடன் எடுத்தாண்டு பேசுகின்ற இழிவான தொழிலைப் போகவிட்டு, நான் எப்பொழுது சரியை, கிரியை ஆகிய மார்க்கங்களில்* நின்று உழைத்து உயிர் வாழ்வேன்? அஞ்ஞானம் என்ற இருட்டு நிறைந்த இப் பூமியில், யமனுடைய உடல் பதைக்கும்படி, காலால் அவன் விழும்படி உதைத்தவர், திரிபுரங்களின் வலிமையை ஒழித்தவர், தேவர்களின் உடல் அவர்களின் தலைகள் மாலை ஆகிய எலும்பு வடத்தை மாலையாக அணிந்தவர், மிகவும் நடுங்கச் செய்து, காளி அஞ்சும்படி ஒரு நொடிப் பொழுதில் எதிர்த்து நடனம் புரிந்த வயிரவ, பயிரவ மூர்த்தி, வெண்ணெயைத் திருடிய கைகளை உடைய திருமாலாகிய ரிஷபத்தின் முதுகின் மேல் சேணம் போட்டு ஏறி முழக்கத்துடன் வருபவர், செலுத்தப்படும் பூதம் பேய்க் கணம் ஆகியவை விளங்குகின்ற படையைக் கொண்டவர், சடையில் பூளை மலர், சந்திரன், கொன்றை, வெள்ளெருக்கு இவைகளைச் சூடியுள்ளவராகிய சிவ பெருமானின் குமரனே. வயல்கள் பொருந்திய திருப்புத்தூரில்** பொருந்தி வீற்றிருக்கும் பெருமாளே.
* 4 பக்தி மார்க்கங்கள் பின்வருமாறு:1. சரியை: திருக்கோயிலில் அலகு இடுதல், மெழுகுதல், விளக்கு இடுதல், நந்தவனம் வைத்தல், பூ எடுத்தல், மாலை அமைத்தல், இறைவனை வாழ்த்துதல், திருவேடம் கண்டு பணிதல். இது 'தாத மார்க்கம் - சாலோகம்'.2. கிரியை: பூஜை உபகரணங்களை அமைத்து நித்தியக் காரியம் செய்தல். இது 'புத்ர மார்க்கம் - சாமீபம்'.3. யோகம்: புலன்களை அடக்கிப் பிராண வாயுவைச் சலனம் அற நிறுத்தி ஆறு ஆதாரங்களின் பொருளை உணர்ந்து, சந்திர மண்டல அமிர்தத்தை உடல் முழுதும் நிரப்பி, முழு ஜோதியை நினைத்திருத்தல். இது 'சக மார்க்கம் (தோழ நெறி) - சாரூபம்'.4. ஞானம்: புறத் தொழில் அகத் தொழில் இன்றி, அறிவு மாத்திரத்தாலே செய்யும் வழிபாடு ஞானம். இது 'சன்மார்க்கம் - சாயுஜ்யம்'. சிவஞான சித்தியார் சூத்திரம்.
** திருப்புத்தூர் குன்றக்குடிக்கு அருகில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 979 - திருப்புத்தூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - உடல், தனத்தத், மார்க்கம், சரியை, தனதன, ஆகிய, கிரியை, தொழில், மாலை, மிகவும், இடுதல், ஞானம், உடைய, புகழ்ச்சிப், இடையை, இளைஞர்கள், காளி, வருபவர், நிறைந்த, பெருமாளே, பூளை, மலர்