பாடல் 973 - இலஞ்சி - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தனந்தன தந்த தனந்தன தந்த தனந்தன தந்த ...... தனதானா |
சுரும்பணி கொண்டல் நெடுங்குழல் கண்டு துரந்தெறி கின்ற ...... விழிவேலால் சுழன்றுசு ழன்று துவண்டுது வண்டு சுருண்டும யங்கி ...... மடவார்தோள் விரும்பிவ ரம்பு கடந்துந டந்து மெலிந்துத ளர்ந்து ...... மடியாதே விளங்குக டம்பு விழைந்தணி தண்டை விதங்கொள்ச தங்கை ...... யடிதாராய் பொருந்தல மைந்து சிதம்பெற நின்ற பொலங்கிரி யொன்றை ...... யெறிவோனே புகழ்ந்தும கிழ்ந்து வணங்குகு ணங்கொள் புரந்தரன் வஞ்சி ...... மணவாளா இரும்புன மங்கை பெரும்புள கஞ்செய் குரும்பைம ணந்த ...... மணிமார்பா இலஞ்சியில் வந்த இலஞ்சிய மென்று இலஞ்சிய மர்ந்த ...... பெருமாளே. |
அணிந்துள்ள மலரின் மேல் வண்டுகள் திகழும் கரு மேகம் போன்ற நீண்ட கூந்தலைப் பார்த்தும், வேகமாக செலுத்தி வீசப்பட்ட வேல் போன்ற கண்ணைப் பார்த்தும், (என் மனம்) சுழற்சி அடைந்து, மிகவும் வாட்டமுற்று, சோர்வுற்று, மயக்கம் உற்று, விலைமாதர்களின் தோள்களை விருப்பம் கொண்டு அளவு கடந்து நடந்தும், மெலிந்தும் தளர்ந்தும் (நான்) இறந்து போகாமல், விளங்குகின்ற உனது கடப்ப மாலையை விரும்பி, அழகிய தண்டையையும், பல இன்னிசை வகைகளை ஒலிக்கும் கிண்கிணியையும் அணிந்த திருவடிகளைத் தருவாயாக. நன்றாகப் பொருந்தி அமைந்து, மேன்மை பெற நின்ற பொன் மலையாகிய கிரெளஞ்சத்தை அழித்தவனே. உன்னைப் புகழ்ந்தும், (உனது ஆற்றலைக்) கண்டு மகிழ்ந்தும், வணங்கியும் வழிபட்ட குணத்தைக் கொண்ட இந்திரனுடைய வஞ்சிக் கொடி போன்ற நங்கையாகிய தேவயானையின் கணவனே, தினைப் புனத்தைக் காத்த மங்கையாகிய வள்ளியின் நிரம்பப் புளகாங்கிதம் கொண்ட தென்னங் குரும்பை போன்ற மார்பை அணைந்து கலந்த அழகிய மார்பனே, (சரவணக்) குளத்தில் வந்த காரணத்தால் குளவன் (குளத்தில் உற்பவித்தவன்) என்று திருப் பெயர் கொண்டு, இலஞ்சி* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
* இலஞ்சி தென்காசி ரயில் நிலையத்துக்கு 4 மைலில் உள்ள தலம். குற்றால அருவிக்கு மிக அருகில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 973 - இலஞ்சி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனந்தன, தந்த, உனது, அழகிய, கொண்ட, குளத்தில், கொண்டு, பெருமாளே, கண்டு, நின்ற, வந்த, இலஞ்சிய, பார்த்தும்