பாடல் 972 - இலஞ்சி - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தந்தன தான தனந்தன தானத் தந்தன தான தனந்தன தானத் தந்தன தான தனந்தன தானத் ...... தனதான |
கொந்தள வோலை குலுங்கிட வாளிச் சங்குட னாழி கழன்றிட மேகக் கொண்டைகள் மாலை சரிந்திட வாசப் ...... பனிநீர்சேர் கொங்கைகள் மார்பு குழைந்திட வாளிக் கண்கயல் மேனி சிவந்திட கோவைக் கொஞ்சிய வாயி ரசங்கொடு மோகக் ...... கடலூடே சந்திர ஆர மழிந்திட நூலிற் பங்கிடை யாடை துவண்டிட நேசத் தந்திட மாலு ததும்பியு மூழ்குற் ...... றிடுபோதுன் சந்திர மேனி முகங்களு நீலச் சந்த்ரகி மேல்கொ டமர்ந்திடு பாதச் சந்திர வாகு சதங்கையு மோசற் ...... றருள்வாயே சுந்தரர் பாட லுகந்திரு தாளைக் கொண்டுநல் தூது நடந்தவ ராகத் தொந்தமொ டாடி யிருந்தவள் ஞானச் ...... சிவகாமி தொண்டர்க ளாக மமர்ந்தவள் நீலச் சங்கரி மோக சவுந்தரி கோலச் சுந்தரி காளி பயந்தரு ளானைக் ...... கிளையோனே இந்திர வேதர் பயங்கெட சூரைச் சிந்திட வேல்கொ டெறிந்துநல் தோகைக் கின்புற மேவி யிருந்திடு வேதப் ...... பொருளோனே எண்புன மேவி யிருந்தவள் மோகப் பெண்திரு வாளை மணந்திய லார்சொற் கிஞ்சியளாவு மிலஞ்சிவி சாகப் ...... பெருமாளே. |
தலை மயிர்ச் சுருளின் கீழ் உள்ள காதோலைகள் குலுங்கி அசைய, வாளி என்ற காதணியும் சங்கு வளையல்களும், மோதிரமும் கழல, கருமேகம் போன்ற கூந்தலில் உள்ள பூ மாலை சரிய, நறுமணப் பன்னீர் சேர்ந்த மார்பகங்கள் நெஞ்சில் துவள, அம்பு போன்றதும் கயல் மீன் போன்றதுமான கண்ணும் உடலும் சிவக்க, கொவ்வைப் பழம் போலிருந்து கொஞ்சும் வாயிதழ் இனிப்பான ஊறலைக் கொடுக்க, காம இச்சைக் கடலில் சந்திர ஆரம் என்ற பொன் மாலை அலைந்து குலைய, நூல் போன்ற பாகமான இடையில் ஆடை குலைந்து துவண்டுபோக, அன்பு தரும்படி காம இச்சையும் பொங்கி எழுந்து நான் முழுகுகின்ற சமயத்தில், உனது நிலவொளி உடலும், திருமுகங்களும், நீல மயிலின் மேல் ஏறி அமர்ந்திடும் திருவடியில் உள்ளதுமான நிலவொளியையும் கிங்கிணியையுமே சற்று அருள்வாயாக. சுந்தர மூர்த்தி நாயனாருடைய பாடல்களை மகிழ்ந்து ஏற்று தமது இரண்டு திருவடிகளைக் கொண்டு நல்ல தூது நடந்த சிவபெருமானுடைய தேகத்தில் சேர்ந்தவளாக அவனுடன் நடனமாடி இருந்தவள், ஞானவல்லியாகிய சிவகாமி அம்மை, அடியார்களுடைய உடலில் இடம் கொண்டு அமர்ந்தவள், நீலநிறச் சங்கரி, மோக அழகி, எழில்மிகு சுந்தரி, காளி (ஆகிய பார்வதி) பெற்றருளிய யானை முகக் கணபதிக்குத் தம்பியே, இந்திரர்கள், பிரமாதி தேவர்களின் அச்சம் நீங்குமாறு சூரன் அழிந்து அடங்குமாறு வேலைச் செலுத்தி, நல்ல மயிலின் மேல் இன்பகரமாக வீற்றிருக்கும் வேதப் பொருளானவனே, மதிக்கத் தக்க தினைப் புனத்தில் வாழ்பவள், (உனக்கு) மோகம் தந்த மங்கை, லக்ஷ்மிகரம் பொருந்தியவள் ஆகிய வள்ளியை திருமணம் செய்த தகுதி நிறைந்த புகழுக்கு உரியவனே, மதில்கள் ஓங்கி உயர்ந்துள்ள இலஞ்சி* என்னும் பதியில் வீற்றிருக்கும் முருகப் பெருமாளே.
* இலஞ்சி தென்காசி ரயில் நிலையத்துக்கு 4 மைலில் உள்ள தலம். குற்றால அருவிக்கு மிக அருகில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 972 - இலஞ்சி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - சந்திர, தந்தன, மாலை, உள்ள, தனந்தன, தானத், மயிலின், உடலும், மேல், ஆகிய, வீற்றிருக்கும், பெருமாளே, நல்ல, கொண்டு, சுந்தரி, தூது, நீலச், மேனி, யிருந்தவள், சிவகாமி, மேவி, காளி, சங்கரி, வேதப்