பாடல் 967 - மதுரை - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தத்ததன தத்ததன தத்ததன தத்ததன தத்ததன தத்ததன ...... தனதான |
முத்துநவ ரத்நமணி பத்திநிறை சத்தியிட மொய்த்தகிரி முத்திதரு ...... வெனவோதும் முக்கணிறை வர்க்குமருள் வைத்தமுரு கக்கடவுள் முப்பதுமு வர்க்கசுர ...... ரடிபேணி பத்துமுடி தத்தும்வகை யுற்றகணி விட்டஅரி பற்குனனை வெற்றிபெற ...... ரதமூரும் பச்சைநிற முற்றபுய லச்சமற வைத்தபொருள் பத்தர்மன துற்றசிவம் ...... அருள்வாயே தித்திமிதி தித்திமிதி திக்குகுகு திக்குகுகு தெய்த்ததென தெய்தததென ...... தெனனான திக்குவென மத்தளமி டக்கைதுடி தத்ததகு செச்சரிகை செச்சரிகை ...... யெனஆடும் அத்தனுட னொத்தநட நித்ரிபுவ னத்திநவ சித்தியருள் சத்தியருள் ...... புரிபாலா அற்பவிடை தற்பமது முற்றுநிலை பெற்றுவள ரற்கனக பத்மபுரி ...... பெருமாளே. |
முத்தும் நவரத்ன மணிகளும் வரிசையாக விளங்கும் பார்வதி (தமது) இடப் பாகத்தில் நெருங்கி இணைந்துள்ள மலை போன்றவரும், முக்திக் கனியை அளிக்கும் மரம் என்றெல்லாம் ஓதப்படும் முக்கண்களை உடையவருமான சிவபெருமானுக்கும் அருள் பாலித்து உபதேசித்த முருகக் கடவுள், முப்பத்து மூன்று* வகையான தேவர்களும் (தமது) திருவடியைப் போற்றி விரும்ப, (இராவணனுடைய) பத்துத் தலைகளும் சிதறும்படி அம்பைச் செலுத்திய (ராமனாகிய) திருமால், அருச்சுனன் (மகாபாரதப்) போரில் வெற்றி பெறும் வகையில் (கண்ணனாக வந்து) தேரைச் செலுத்திய, பச்சை நிறம் கொண்ட மேக நிறப் பெருமான் ஆகிய திருமால் (சூரபத்மன், சிங்கமுகன், தாரகன் ஆகிய அசுரர்களிடத்தில் கொண்ட) பயத்தை நீங்க வைத்த முருகக் கடவுளே, பக்தர்கள் மனத்தில் பொருந்தி விளங்கும் மங்கலத்தை எனக்கும் அருள் புரிவாயாக. தித்திமிதி தித்திமிதி திக்குகுகு திக்குகுகு தெய்த்ததென தெய்தததென தெனனான தித்திமிதி தித்திமிதி திக்குகுகு திக்குகுகு தெய்த்ததென தெய்தததென தெனனான திக்குவென்ற ஒலிகளுடன் மத்தளம், இடது கையால் அடிக்கப்படும் ஒரு தோல் கருவி, உடுக்கை ஆகியவை ஒலிக்க, தத்ததகு செச்சரிகை செச்சரிகை என்ற ஜதிக்கு நடனம் ஆடும் தந்தை சிவபெருமானுடன் ஒத்ததான நடனம் புரிபவள், மூன்று லோகங்களுக்கும் முதல்வி, புதுமையான வரப்ரசாதங்களை அடியார்களுக்கு அருளும் பார்வதி ஈன்றருளிய குழந்தையே, நுண்ணிய இடையை உடைய மாதர்களின் மெத்தை வீடுகள் எல்லாம் நிலை பெற்றனவாய் உயர்ந்த மதில்களுடன் விளங்கும், பொற்றாமரைக் குளம் அமைந்த பட்டணமாகிய மதுரையில் வீற்றிருக்கும் பெருமாளே.
* முப்பத்து மூன்று வகைத் தேவர்கள் பின்வருமாறு:ஆதித்தர் 12, ருத்திரர் 11, வசுக்கள் 8, மருத்தவர் 2 - ஆக 33 வகையின.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 967 - மதுரை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்ததன, திக்குகுகு, தித்திமிதி, செச்சரிகை, விளங்கும், தெனனான, தெய்த்ததென, தெய்தததென, கொண்ட, ஆகிய, திருமால், மூன்று, செலுத்திய, நடனம், பார்வதி, பெருமாளே, தத்ததகு, தமது, அருள், முருகக், முப்பத்து