பாடல் 926 - கருவூர் - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தத்தத் தனதன தானன தானன தத்தத் தனதன தானன தானன தத்தத் தனதன தானன தானன ...... தனதான |
நித்தப் பிணிகொடு மேவிய காயமி தப்புப் பிருதிவி வாயுவு தேயுவு நிற்பொற் ககனமொ டாமிவை பூதக ...... லவைமேவி நிற்கப் படுமுல காளவு மாகரி டத்தைக் கொளவுமெ நாடிடு மோடிடு நெட்டுப் பணிகலை பூணிடு நானெனு ...... மடவாண்மை எத்தித் திரியுமி தேதுபொ யாதென வுற்றுத் தெளிவுண ராதுமெய் ஞானமொ டிச்சைப் படஅறி யாதுபொய் மாயையி ...... லுழல்வேனை எத்திற் கொடுநின தாரடி யாரொடு முய்த்திட் டுனதரு ளாலுயர் ஞானமு திட்டுத் திருவடி யாமுயர் வாழ்வுற ...... இனிதாள்வாய் தத்தத் தனதன தானன தானன தித்தித் திமிதிமி தீதக தோதக டத்தக் குடகுகு தாகுட தீகுட ...... வெனபேரிச் சத்தத் தொலிதிகை தாவிட வானவர் திக்குக் கெடவரு சூரர்கள் தூள்பட சர்ப்பச் சதமுடி நாணிட வேலதை ...... யெறிவோனே வெற்றிப் பொடியணி மேனியர் கோகுல சத்திக் கிடமருள் தாதகி வேணியர் வெற்புப் புரமது நீறெழ காணிய ...... ரருள்பாலா வெற்புத் தடமுலை யாள்வளி நாயகி சித்தத் தமர்கும ராஎமை யாள்கொள வெற்றிப் புகழ்கரு வூர்தனில் மேவிய ...... பெருமாளே. |
நாள்தோறும் நோய்களுடன் கூடியது இவ்வுடலாகும். இது நீர், மண், காற்றுடன், நெருப்பும், உள்ளதான பொலிவுள்ள ஆகாயம் எனப்படும் ஐம்பூதங்களின் சேர்க்கையால் உண்டாகித் தோன்றி நிற்பதாகும். உலகத்தை எல்லாம் ஆளவேண்டும், விண்ணவர் இருக்கும் இடத்தையும் கொள்ளவேண்டும் என்று ஆசை கொண்டு அதற்காக எங்கும் ஓடி அலையும். செருக்குடன் அணி கலன்களையும் ஆடைகளையும் அணிந்து நான் என்கின்ற முட்டாள்தனமான அகங்காரத்துடன் ஏமாற்றித் திரியும். இது என்ன ஒருபோதும் பொய்யாகாமல் நிலைத்திருக்கும் என்று திடமாக நினைத்து, தெளிவான உண்மையை உணராமல் மெய்ஞ்ஞானத்தை விரும்ப அறியாமல் பொய்யான உலக மாயைகளில் அலைச்சல் உறுகின்ற என்னை, தந்திரமாகவாவது ஆட்கொண்டு, உன் அடியார்களுடன் என்னைக் கொண்டு சேர்ப்பித்து, உன் திருவருளால் சிறந்த ஞான அமுதத்தைத் தந்து திருவடியாகிய சிறந்த வாழ்வை நான் அடையும்படி இனிதே ஆண்டருள்வாயாக. தத்தத் தனதன தானன தானனதித்தித் திமிதிமி தீதக தோதக டத்தக் குடகுகு தாகுட தீகுட என்று ஒலிக்கும் பேரிகையின் பேரொலி திசைகளைக் கடந்து தாவிச் செல்ல, தேவர்கள் வாழும் திசைகள் கலங்கிக் கெட, வந்த அசுரர்கள் தூளாகிப் பொடிபட, (ஆதிசேஷனாகிய) பாம்பின் நூறு பணா முடிகள் அச்சம் கொள்ள, உனது வேலைச் செலுத்தியவனே, வெற்றியைத் தரும் திருநீற்றை அணிந்த திருமேனியர், ஆயர்பாடியாகிய கோகுலத்தில் வளர்ந்த கிருஷ்ணனாகிய திருமாலுக்கு தமது இடது பாகத்தைத் தந்தருளியவர் (சங்கர நாராயணர்), ஆத்தி மாலைச் சடையை உடைய சிவபெருமான் அருளிய குழந்தையே, மலை போன்ற பெரிய மார்பகங்களை உடைய வள்ளி நாயகியின் உள்ளத்தில் வீற்றிருக்கும் குமரனே, எம்மைப் போன்ற அடியார்களை ஆட்கொள்வதற்காக, வெற்றிப் புகழ் விளங்கும் கருவூரில் வீற்றிருக்கும் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 926 - கருவூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானன, தனதன, தத்தத், வெற்றிப், பெருமாளே, கொண்டு, உடைய, வீற்றிருக்கும், சிறந்த, நான், குடகுகு, திமிதிமி, மேவிய, தீதக, தோதக, தாகுட, டத்தக், தீகுட