பாடல் 925 - கருவூர் - திருப்புகழ்

ராகம் - கீரவாணி
தாளம் - ஆதி
தனனா தனனத் தனனா தனனத் தனனா தனனத் ...... தனதான |
தசையா கியகற் றையினால் முடியத் தலைகா லளவொப் ...... பனையாயே தடுமா றுதல்சற் றொருநா ளுலகிற் றவிரா வுடலத் ...... தினைநாயேன் பசுபா சமும்விட் டறிவா லறியப் படுபூ ரணநிட் ...... களமான பதிபா வனையுற் றநுபூ தியிலப் படியே யடைவித் ...... தருள்வாயே அசலே சுரர்புத் திரனே குணதிக் கருணோ தயமுத் ...... தமிழோனே அகிலா கமவித் தகனே துகளற் றவர்வாழ் வயலித் ...... திருநாடா கசிவா ரிதயத் தமிர்தே மதுபக் கமலா லயன்மைத் ...... துனவேளே கருணா கரசற் குருவே குடகிற் கருவூ ரழகப் ...... பெருமாளே. |
சதையின் திரளால் முழுமையும் தலை முதல் கால் வரை அலங்காரமாகவே அமையப்பெற்று, சஞ்சலம் என்பது கொஞ்சமேனும் ஒருநாள் கூட இந்த உலகைவிட்டு நீங்காத (எப்போதும் தடுமாறும்) உடம்பை உடைய அடி நாயேன் அகங்காரத்தையும், பந்தங்களையும் விட்டு ஞானத்தால் அறியப் பெறுகின்ற பூரணமானதும், உருவம் இல்லாததும் ஆகிய பரம்பொருளாம் கடவுள் தியானத்தை மேற்கொண்டு, அந்த அனுபவ ஞானத்தில் என் சிந்தனை மாறாத வண்ணம் அப்படியே சேர்ப்பித்து அருள் புரிவாயாக. அசைவே இல்லாத கயிலைமலைக் கடவுள் சிவனார் (அசலேசுரர்*) பெற்ற புத்திரனே, கிழக்குத் திசையில் தோன்றுகின்ற உதயசூரியனின் செம்மை ஒளி உடையவனே, இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழ்க் கடவுளே, சகல வேதாகமங்களிலும் வல்லவனே, குற்றமற்றவர்கள் வாழும் வயலூர் என்ற திருத்தலத்தில் வாழ்வோனே, உள்ளம் கசிபவர்களது மனத்தில் ஊறுகின்ற அமிர்தமே, வண்டுகள் மொய்க்கும் தாமரை மலரை ஆசனமாக உடைய பிரமனின் மைத்துனன்** முறையில் உள்ள கந்த வேளே, கருணை நிறைந்தவனே, சற்குரு மூர்த்தியே, மேற்குத் திசையில் உள்ள கருவூரில்*** வீற்றிருக்கும் அழகுப் பெருமாளே.
* திருவாரூரில் உள்ள சிவன் கோயிலின் மூலவருக்கு அசலேசுரர் என்று பெயர் - திருவாரூர்ப் புராணம்.
** பிரமன் திருமாலின் மகன். முருகன் திருமாலின் மருமகன். எனவே பிரமனுக்கு முருகன் மைத்துனன்.
*** கருவூர் திருச்சிக்கு மேற்கே 45 மைலில் உள்ள கரூர் ஆகும்.சோழநாட்டின் தலைநகரான வஞ்சியும் இதுவே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 925 - கருவூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - உள்ள, தனனத், தனனா, முருகன், திருமாலின், கடவுள், பெருமாளே, உடைய, திசையில்