பாடல் 922 - தென்கடம்பந்துறை - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தனதனன தந்தனந் தந்தனந் தந்தனந் தனதனன தந்தனந் தந்தனந் தந்தனந் தனதனன தந்தனந் தந்தனந் தந்தனந் ...... தனதான |
புணரியும னங்கனம் புஞ்சுரும் புங்கருங் கயலினொடு கெண்டையுஞ் சண்டனுங் கஞ்சமும் புதுநிலவ ருந்தியுந் துஞ்சுநஞ் சும்பொருப் ...... பெறிவேலும் பொருவெனஇ கன்றகன் றங்குமிங் குஞ்சுழன் றிடைகடைசி வந்துவஞ் சம்பொதிந் திங்கிதம் புவியிளைஞர் முன்பயின் றம்பொனின் கம்பிதக் ...... குழைமோதிக் குணலையொடு மிந்த்ரியஞ் சஞ்சலங் கண்டிடும் படியமர்பு ரிந்தருஞ் சங்கடஞ் சந்ததங் கொடுமைசெய்து சங்கொடுஞ் சிங்கிதங் குங்கடைக் ...... கணினார்பால் குலவுபல செந்தனந் தந்துதந் தின்புறுந் த்ரிவிதகர ணங்களுங் கந்தநின் செம்பதங் குறுகும்வகை யந்தியுஞ் சந்தியுந் தொந்தமற் ...... றமைவேனோ துணர்விரிக டம்பமென் தொங்கலும் பம்புறும் புழுகுமச லம்பசுஞ் சந்தனங் குங்குமந் தொகுகளப முந்துதைந் தென்றுநன் கொன்றுபத் ...... திருதோளுந் தொலைவில்சண்மு கங்களுந் தந்த்ரமந் த்ரங்களும் பழநிமலை யும்பரங் குன்றமுஞ் செந்திலுந் துதிசெயுமெ யன்பர்தஞ் சிந்தையுஞ் சென்றுசெய்ப் ...... பதிவாழ்வாய் கணபணபு யங்கமுங் கங்கையுந் திங்களுங் குரவுமறு குங்குறுந் தும்பையுங் கொன்றையுங் கமழ்சடில சம்புவுங் கும்பிடும் பண்புடைக் ...... குருநாதா கனகுடகில் நின்றகுன் றந்தருஞ் சங்கரன் குறுமுனிக மண்டலங் கொண்டுமுன் கண்டிடுங் கதிசெய்நதி வந்துறுந் தென்கடம் பந்துறைப் ...... பெருமாளே. |
(முதல் 9 வரிகள் விலைமாதர் கண்களை வர்ணிக்கின்றன). கடலும், மன்மதனுடைய பாணங்களும், வண்டும், கரிய கயல் மீனும், கெண்டை மீனும், யமனும், தாமரையும், புதிய நிலவை (சந்திரிகையை) உண்ணும் (சகோரப்) பட்சியும், விஷமும், கிரவுஞ்ச மலையைத் தூளாக்கிய (உனது) வேலும் ஒப்பாகும் என்னும்படி, பகை பூண்டதாய், அகன்றதாய், பல திசைகளில் சுழல்வதாய், மத்தியிலும், ஓரத்திலும் சிவந்ததாய், வஞ்சகமான எண்ணத்தை அடக்கியதாய், பூமியில் உள்ள இளைஞர்கள் முன்பு இனிமையை (திறமையுடன்) காட்டி, அழகிய பொன்னால் ஆன, அசைகின்ற குண்டலங்கள் மீது மோதி, ஆரவார நடிப்புடன் (காண்பவரின்) ஐம்பொறிகளும் துன்பம் காணும்படி கலகப் போர் செய்து, கொடிய வேதனை உண்டாகும்படி எப்போதும் கொடுமை செய்யும் கொடி ஏந்தி உள்ளதும், விஷம் தங்குவதுமான கடைக் கண் பார்வை கொண்ட விலைமாதர்களிடத்தில், விளங்கும் பல வகையான செவ்விய பொருள்களை மீண்டும் மீண்டும் கொடுத்து மகிழ்ச்சி அடைகின்ற (மனம், வாக்கு, காயம் என்னும்) மூன்று வகையான கருவிகளும், கந்த வேளே, உனது செம்மை நிறைந்த திருவடியை அணுகுதற்கு, காலையும் மாலையும் உலகத் தொடர்பு நீங்கி ஒருமைப்பட்டு இருக்க மாட்டேனோ? பூங்கொத்துக்கள் விரிந்த கடப்ப மரத்தின் மலர்களால் ஆகிய மென்மையான மாலையும், நிறைந்துள்ள புனுகும், மலையில் விளையும் பசுமையான சந்தனமும், குங்குமமும், கூட்டப்பட்ட கலவைச் சாந்தும் ஒன்று கூடி நெருங்கிப் பொதிந்துள்ளனவும், எப்போதும் நன்மையே பாலிக்கும் பன்னிரண்டு தோள்களும், அழிவு இல்லாத உனது ஆறு முகங்களையும், உனது பூஜைக்கு உரிய நூல்களையும், மந்திரங்களையும், பழனி மலையையும், திருப்பரங்குன்றத்தையும், திருச்செந்தூரையும் துதி செய்து போற்றுகின்ற மெய் அன்பர்களுடைய மனத்தில் புகுந்தும், வயலூர் என்னும் தலத்தில் வீற்றிருப்பவனே, கூட்டமான படங்களை உடைய பாம்பும், கங்கை நதியும், சந்திரனும், குரா மலரும், அறுகம் புல்லும், சிறிய தும்பையும், கொன்றை மலரும் நறுமணம் கமழும் சடையை உடைய சிவபெருமானும் வணங்கும் பெருமையைக் கொண்டுள்ள குரு நாதனே, சிறப்பு வாய்ந்த குடகில் உள்ள மலையினின்று வரும் காவிரி, சிவபெருமானை வழிபடும் குட்டை வடிவம் கொண்ட அகத்தியர் கொண்டு வந்த கமண்டலத்திலிருந்து முன்பு தோன்றி வெளி வந்த* காவிரி நதி வந்து பொருந்தும் தென் கடம்பந்துறையில்** வீற்றிருக்கும் பெருமாளே.
* நாரதர் சூழ்ச்சியால் விந்திய மலை மேரு மலைக்குப் போட்டியாக உயர்ந்து வழியை அடைத்தது. தேவர்கள் சிவபெருமானை வேண்ட, சிவபெருமான் காவிரியை அழைத்து ஒரு கமண்டலத்தில் அடங்கச் செய்து அகத்தியருடன் அனுப்பினார். அகத்தியர் தென் தேசத்துக்குச் சென்று காவிரியின் நீரைப் பரப்பினார்.
** திருச்சிக்கு மேற்கே உள்ள குழித்தலைக்கு வடமேற்கே 1 மைலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 922 - தென்கடம்பந்துறை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்தனந், உனது, செய்து, தனதனன, உள்ள, மலரும், உடைய, தென், காவிரி, சிவபெருமானை, அகத்தியர், மாலையும், கொண்ட, மீனும், பெருமாளே, முன்பு, எப்போதும், மீண்டும், வகையான, என்னும்