பாடல் 921 - திருப்பராய்த்துறை - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தானன தந்தன தாத்த தத்தன தானன தந்தன தாத்த தத்தன தானன தந்தன தாத்த தத்தன ...... தனதான |
வாசனை மங்கையர் போற்று சிற்றடி பூஷண கிண்கிணி யார்ப்ப ரித்திட மாமலை ரண்டென நாட்டு மத்தக ...... முலையானை வாடைம யங்கிட நூற்ற சிற்றிழை நூலிடை நன்கலை தேக்க இக்குவில் மாரன்வி டுங்கணை போற்சி வத்திடு ...... விழியார்கள் நேசிகள் வம்பிக ளாட்ட மிட்டவர் தீயர்வி ரும்புவர் போற்சு ழற்றியெ நீசனெ னும்படி யாக்கி விட்டொரு ...... பிணியான நீரின்மி குந்துழ லாக்கை யிற்றிட யோகமி குந்திட நீக்கி யிப்படி நீயக லந்தனில் வீற்றி ருப்பது ...... மொருநாளே தேசம டங்கலு மேத்து மைப்புய லாயநெ டுந்தகை வாழ்த்த வச்சிர தேகமி லங்கிய தீர்க்க புத்திர ...... முதல்வோனே தீரனெ னும்படி சாற்று விக்ரம சூரன டுங்கிட வாய்த்த வெற்புடல் தேயந டந்திடு கீர்த்தி பெற்றிடு ...... கதிர்வேலா மூசளி பம்பிய நூற்றி தழ்க்கம லாசனன் வந்துல காக்கி வைத்திடு வேதன கந்தையை மாற்றி முக்கண ...... ரறிவாக மூதறி வுந்திய தீ¨க்ஷ செப்பிய ஞானம்வி ளங்கிய மூர்த்தி யற்புத மூவரி லங்குப ராய்த்து றைப்பதி ...... பெருமாளே. |
நறு மணம் கொண்ட விலைமாதர்களின் விரும்பத் தக்க சிற்றடியில் ஆபரணமாய் விளங்கும் பாத சதங்கை ஒலி செய்ய, அழகிய மலைகள் இரண்டு என்று சொல்லும்படியாக நிறுத்தப்பட்டு, மத்தகத்தைக் கொண்ட யானை போன்ற மார்பின் வாசனை கலந்து சேர, நூற்கப்பட்ட மெல்லிய இழை நூலை ஒத்த இடையில் அழகிய ஆடை நிறைந்து விளங்க, கரும்பு வில்லை ஏந்திய மன்மதன் ஏவும் தாமரைப் பூவைப் போல் சிவந்து விளங்கும் கண்களை உடையவர்கள். யாருடனும் நேசம் பாராட்டுபவர்கள். பயனிலிகள். (வந்தவரை) பலவிதமான கூத்தாட்டங்கள் ஆடும்படி ஆட்டுவிப்பவர்கள். பொல்லாதவர்கள். விரும்பி நேசிப்பவர் போல் அலைய வைத்து இழிந்தோன் என்னும்படி என்னை ஆக்கிவிட்டு ஒரு நோயாளன் என்னும்படியான நிலைமையில் விடப்பட்டு நிரம்பவும் சுழன்று வேதனைப்படும் இந்த உடலில், கலங்காத சிவ யோக நிலை மேம்பட்டு எழ, என்னை கெட்ட நெறியின்று விலக்கி, இந்தக் கணமே நீ என்னுடைய மார்பகத்தில் வீற்றிருக்கும் ஒப்பற்ற நாள் எனக்கு விடியுமா? தேசம் எல்லாம் போற்றும் கரிய மேக நிறத்தினனான பெருந்தகையாகிய திருமால் வாழ்த்த, அழியாத திருமேனி விளங்கும் பூரணனாகிய சிவபெருமானின் மகனே, முதல்வனே, வீரன் என்னும்படி பேர் பெற்றிருந்த வலிமையாளனே, சூரன் நடுங்கும்படி, வரத்தினால் கிடைத்த அவனது மலை போன்ற உடல் தேய்ந்து ஒழியும்படி, (போரை) நடத்தி புகழை அடைந்த ஒளி வீசும் வேலனே, மொய்க்கின்ற வண்டுகள் நிறைந்த நூறு இதழ்களைக் கொண்ட தாமரை மலரில் வீற்றிருப்பவனும், தோன்றி உலகங்களைப் படைத்து வைத்துள்ளவனுமாகிய, வேதம் ஓதும் பிரமனுடைய ஆணவத்தை நீக்கி, முக்கண்ணராகிய சிவ பெருமான் தெரிந்து கொள்ளும்படி பேரறிவு விளங்கிய உபதேச மொழியைச் சொன்ன ஞான ஒளி வீசும் மூர்த்தியே, அற்புதக் கடவுளராகிய (பிரமன், திருமால், சிவன் ஆகிய) திரிமூர்த்திகளும் விளங்குகின்ற திருப்பராய்த்துறை* என்னும் பதியில் வீற்றிருக்கும் பெருமாளே.
* திருப்பராய்த்துறை திருச்சிக்கு அருகில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 921 - திருப்பராய்த்துறை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - விளங்கும், கொண்ட, தானன, தத்தன, தந்தன, தாத்த, என்னும்படி, திருமால், வீசும், போல், வீற்றிருக்கும், என்னை, பெருமாளே, வாசனை, னும்படி, நீக்கி, வாழ்த்த, அழகிய