பாடல் 920 - பூவர்ளுர் - திருப்புகழ்

ராகம் - ...; தாளம் -
தான தாத்தன தானா தானன தான தாத்தன தானா தானன தான தாத்தன தானா தானன ...... தனதான |
காலன் வேற்கணை யீர்வா ளாலமு நேர்க ணாற்கொலை சூழ்மா பாவிகள் காம சாத்திர வாய்ப்பா டேணிக ...... ளெவரேனுங் காத லார்க்கும்வி னாவாய் கூறிகள் போக பாத்திர மாமூ தேவிகள் காசு கேட்டிடு மாயா ரூபிக ...... ளதிமோக மாலை மூட்டிகள் வானூ டேநிமிர் ஆனை போற்பொர நேரே போர்முலை மார்பு காட்டிகள் நானா பேதக ...... மெனமாயா மாப ராக்கிக ளோடே சீரிய போது போக்குத லாமோ நீயினி வாவெ னாப்பரி வாலே யாள்வது ...... மொருநாளே பால றாத்திரு வாயா லோதிய ஏடு நீர்க்கெதிர் போயே வாதுசெய் பாடல் தோற்றிரு நாலா மாயிர ...... சமண்மூடர் பாரின் மேற்கழு மீதே யேறிட நீறி டாத்தமிழ் நாடீ டேறிட பாது காத்தரு ளாலே கூனிமி ...... ரிறையோனும் ஞால மேத்திய தோர்மா தேவியும் ஆல வாய்ப்பதி வாழ்வா மாறெணு ஞான பாக்கிய பாலா வேலவ ...... மயில்வீரா ஞான தீக்ஷித சேயே காவிரி யாறு தேக்கிய கால்வாய் மாமழ நாடு போற்றிய பூவா ளுருறை ...... பெருமாளே. |
யமன், வேல், அம்பு, அறுக்கும் வாள், விஷம் இவைகளுக்கு ஒப்பான கண்களைக் கொண்டு கொலைத் தொழிலையே செய்யச் சூழ்ச்சி செய்கின்ற மகா பாவிகள், காம சாஸ்திரத்தை வாய்ப்பாடாகக் கொண்டவர்கள், ஏணியை வைத்து ஏறவிட்டு வரவழைக்கும் தன்மை கொண்டவர்கள், யாராக இருந்தாலும் பாராட்டாமல் காம இச்சை நிறைந்த சொற்களை வாயாரப் பேசுபவர்கள், காம இன்பத்துக்கு இருப்பிடமான மகா மூதேவிகள், பொருள் தா என்று கேட்கின்ற மாயச் சொரூபிகள், அதிக ஆசை மயக்கத்தை மூட்டுபவர்கள், ஆகாயத்தை நிமிர்ந்து நோக்கும் யானையைப் போலச் சண்டை செய்ய நேராகப் போருக்கு எழும் மார்பகங்களைக் காட்டுபவர்கள், இப்படி வேறுபாடுகளை உடைய மாயைகளைச் செய்ய வல்ல பெரிய பராக்குக்காரிகளாகிய வேசையருடன் என் நற்பொழுதைப் போக்குதல் தகுமோ? நீ இனி என்னை வா என்று அன்புடன் அழைத்து ஆள்வதான ஒரு நாள் என்று கிடைக்கும்? (பார்வதி தேவியின்) முலைப்பால் மணம் நீங்காத திருவாயால் நீ (திருஞானசம்பந்தராக வந்து) பாடிய பாடல் உள்ள ஏடு (வைகையாற்றின்) நீரை எதிர்த்துப் போகவும், வாது செய்த பாடலுக்குத் தோற்ற எண்ணாயிரம் சமண மூடர்கள் இப்பூமியில் கழு மேல் ஏறவும், திருநீற்றை இடாதிருந்த தமிழ் நாடு ஈடேற (திரு நீறு அனைவருக்கும் தந்து) பாதுகாத்து, உனது திருவருளால் கூன் நிமிர்ந்த பாண்டியன் நெடுமாறனும், உலகெலாம் போற்ற நின்ற ஒப்பற்ற மாதேவியான (பாண்டியன் மனைவி) மங்கையர்க்கரசியும், திருஆலவாய் என்ற மதுரையில் உள்ளவர்களும் நல் வாழ்வு அடையும்படி திருவுள்ளத்தில் நினைந்தருளிய ஞான பாக்கிய பாலனே, வேலனே, மயில் வீரனே, ஞான அறிவுரைகளைச் செய்த குழந்தையே, காவிரி ஆறு நிறைந்து வரும் கால்வாய்கள் உள்ள சிறந்த மழ நாட்டுப் பகுதியில் சிறப்புடன் உள்ள பூவாளூரில்* வீற்றிருக்கும் பெருமாளே.
* பூவாளூர் லால்குடிக்கு அருகில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 920 - பூவர்ளுர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தாத்தன, உள்ள, தானன, தானா, செய்ய, பாண்டியன், கொண்டவர்கள், செய்த, காவிரி, பாவிகள், பாடல், பாக்கிய, நாடு, பெருமாளே