பாடல் 912 - வயலூர் - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தனன தான தானான தனன தான தானான தனன தான தானான ...... தனதான |
திருவு ரூப நேராக அழக தான மாமாய திமிர மோக மானார்கள் ...... கலைமூடுஞ் சிகரி யூடு தேமாலை யடவி யூடு போயாவி செருகு மால னாசார ...... வினையேனைக் கருவி ழாது சீரோதி யடிமை பூண லாமாறு கனவி லாள்சு வாமீநின் ...... மயில்வாழ்வுங் கருணை வாரி கூரேக முகமும் வீர மாறாத கழலு நீப வேல்வாகு ...... மறவேனே சருவ தேவ தேவாதி நமசி வாய நாமாதி சயில நாரி பாகாதி ...... புதல்வோனே சதம கீவல் போர்மேவு குலிச பாணி மால்யானை சகச மான சா¡£செ ...... யிளையோனே மருவு லோக மீரேழு மளவி டாவொ ணாவான வரையில் வீசு தாள்மாயன் ...... மருகோனே மநுநி யாய சோணாடு தலைமை யாக வேமேலை வயலி மீது வாழ்தேவர் ...... பெருமாளே. |
லக்ஷ்மியினுடைய உருவத்துக்கு நிகரான அழகைக் கொண்டவர்களும், மகா மாய, இருளான காம இச்சையை ஊட்டும் மான் போன்ற விலைமாதர்களின் ஆடை மறைக்கும் மார்பகங்களிலும், இனிய பூ மாலை அணிந்துள்ள காடு போன்ற கூந்தலிலும் உயிரே போய்ச் சிக்கிக் கொள்ளும் காம மயக்கம் உள்ள, ஒழுக்கம் இல்லாத தொழிலனாகிய என்னை, பிறப்பில் மீண்டும் விழாத வண்ணம், உனது திருப்புகழை நான் ஓதி, உனக்கு அடிமை பூணும் வகை வரும்படி, எனது கனவில் வந்து ஆண்டருளிய சுவாமியே, மயில் மேல் வீற்றிருக்கும் உனது வாழ்வையும், கருணைக் கடல் போல மிக்க ஒளி வீசும் உனது திருமுகத்தையும்*, வீரம் என்றும் மாறுதல் இல்லாத திருவடியையும், கடம்பையும், வேல் ஏந்திய திருப்புயத்தையும் நான் என்றும் மறவேன். எல்லாத் தேவர்களுக்கும் தேவனாக விளங்குபவனும், ஆதிப்பிரானும், நமசிவாய என்னும் திருநாமத்தை உடையவனும், (இமய) மலைப் பெண்ணாகிய பார்வதியின் பாகனும், முதல்வனுமாகிய சிவபெருமானின் மகனே, நூறு யாகங்களை முடித்தவனும், வலிய போரில் ஈடுபட்டவனும், வஜ்ராயுதத்தைக் கையில் ஏந்தியவனுமாகிய இந்திரனுடைய பெரிய ஐராவதம் என்னும் யானை மீது வழக்கமான உலாவுதலைச் செய்யும் இளைஞனே, பொருந்திய பதினான்கு உலகங்களிலும் உள்ளவர்கள் அளவிட முடியாத எல்லை அளவுக்கு, தனது திருவடியை நீட்டிய திருமாலின் மருகனே, மனு நீதிச் சோழன் நீதியோடு ஆண்ட சோழ நாடு சிறந்த நிலையை அடையும் பொருட்டு, மேலை வயலூர்** என்னும் தலத்தில் வந்து வாழ்பவனும், தேவர்களின் தலைவன் ஆனவனுமான, பெருமாளே.
* இப்பாடல் அருணகிரிநாதருக்கு முருகவேள் ஒரு முகத்துடன் வயலூரில் தரிசனம் கொடுத்ததைக் குறிக்கும்.
** வயலூர் சோழ நாட்டின் ராஜகெம்பீரப் பகுதியின் தலைநகர். இங்குதான் சுவாமிகளுக்கு தினம் ஒரு திருப்புகழ் பாடும் வரத்தை முருகன் தந்தான்.வயலூர் திருச்சிராப்பள்ளிக்கு 6 மைல் தொலைவில் தென்மேற்கே உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 912 - வயலூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - என்னும், தானான, உனது, என்றும், யூடு, வயலூர், வந்து, நான், இல்லாத, மீது, பெருமாளே