பாடல் 913 - வயலூர் - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தத்த தனதன தனனா தனனா தத்த தனதன தனனா தனனா தத்த தனதன தனனா தனனா ...... தனதான |
நெய்த்த சுரிகுழ லறலோ முகிலோ பத்ம நறுநுதல் சிலையோ பிறையோ நெட்டை யிணைவிழி கணையோ பிணையோ ...... இனிதூறும் நெக்க அமுதிதழ் கனியோ துவரோ சுத்த மிடறது வளையோ கமுகோ நிற்கு மிளமுலை குடமோ மலையோ ...... அறவேதேய்ந் தெய்த்த இடையது கொடியோ துடியோ மிக்க திருவரை அரவோ ரதமோ இப்பொ னடியிணை மலரோ தளிரோ ...... எனமாலாய் இச்சை விரகுடன் மடவா ருடனே செப்ப மருளுட னவமே திரிவேன் ரத்ந பரிபுர இருகா லொருகால் ...... மறவேனே புத்த ரமணர்கள் மிகவே கெடவே தெற்கு நரபதி திருநீ றிடவே புக்க அனல்வய மிகஏ டுயவே ...... உமையாள்தன் புத்ர னெனஇசை பகர்நூல் மறைநூல் கற்ற தவமுனி பிரமா புரம்வாழ் பொற்ப கவுணியர் பெருமா னுருவாய் ...... வருவோனே சத்த முடையஷண் முகனே குகனே வெற்பி லெறிசுட ரயிலா மயிலா சத்தி கணபதி யிளையா யுளையா ...... யொளிகூருஞ் சக்ர தரஅரி மருகா முருகா உக்ர இறையவர் புதல்வா முதல்வா தட்ப முளதட வயலூ ரியலூர் ...... பெருமாளே. |
எண்ணெய்ப் பசை கொண்டதும் சுருண்டதுமான கூந்தல் கரு மணலோ, மேகமோ? தாமரை மலரின் நறு மணம் வீசும் நெற்றி வில்லோ, பிறைச் சந்திரனோ? நீண்ட இரண்டு கண்களும் அம்போ, மானோ? இனிமையுடன் ஊறி நெகிழ்ந்து வரும் வாயூறலாகிய அமுதத்தைத் தரும் வாயிதழ் பழமோ, பவளமோ? பரிசுத்தமான கழுத்து சங்கோ, கமுக மரமோ? தாழாது நிற்கும் இள மார்பு குடமோ, மலையோ? அடியோடு தேய்ந்து போய் இளைத்த இடுப்பு கொடியோ, உடுக்கையோ? சிறந்த பெண்குறி பாம்போ, ரதமோ? இந்த அழகிய திருவடிகள் இரண்டும் பூவோ, தளிரோ? என்றெல்லாம் மோகம் கொண்டவனாய், காம இச்சையுடன் விலைமாதர்களுடன் பேசுதற்கு அந்த மயக்கமாகவே வீணாகத் திரிகின்ற நான், ரத்தினச் சிலம்பு அணிந்த உன் இரண்டு திருவடிகளையும் ஒரு காலும் மறக்க மாட்டேன். புத்தர்கள், சமணர்கள் மிகவும் அழிவுற, தென் பாண்டிய நாட்டு மன்னன் திரு நீறு இட, மூட்டிய நெருப்பினிடையே நல்ல வண்ணம் ஏடு (எரி படாது பச்சையாய்) ஊறு இல்லாது விளங்க, உமையம்மையின் பிள்ளை என்று சொல்லும்படி இசைத் தமிழால் இயற்றப்பட்ட நூலாகிய வேதம் அனைய தேவாரத்தை உணர்ந்து ஓதிய தவ முனியே, சீகாழியில் வாழ்ந்த புகழ்பெற்ற கவுணியர் குலத்தைச் சேர்ந்த பெருமான் திருவுருவத்துடன், திருஞான சம்பந்தராய் வந்தவனே, சக்தி வாய்ந்த அறுமுகனே, குகனே, மலைகளில் வீற்றிருக்கும் வேலனே, ஒளி வீசும் வேலாயுதனே, மயில் வாகனனே, சக்தி கணபதியின் தம்பியே, என்றும் எங்கும் உள்ளவனே, ஒளி மிக வீசும் சக்ராயுதத்தை ஏந்திய திருமாலின் மருகனே, முருகனே, சினம் மிகுந்த இறையனார் சிவபெருமானின் மகனே, குளிர்ச்சி பொருந்திய நீர் நிலைகள் உள்ள வயலூரில்* தகுதியுடன் வீற்றிருக்கும் பெருமாளே.
* வயலூர் சோழ நாட்டின் ராஜகெம்பீரப் பகுதியின் தலைநகர். இங்குதான் சுவாமிகளுக்கு தினம் ஒரு திருப்புகழ் பாடும் வரத்தை முருகன் தந்தான். வயலூர் திருச்சிராப்பள்ளிக்கு 6 மைல் தொலைவில் தென்மேற்கே உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 913 - வயலூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனனா, வீசும், தனதன, தத்த, இரண்டு, வீற்றிருக்கும், வயலூர், பெருமாளே, சக்தி, தளிரோ, மலையோ, குடமோ, கொடியோ, ரதமோ, கவுணியர், குகனே