பாடல் 907 - வயலூர் - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தனத்தத தானான தனதத்த தானான தனதத்த தானனா ...... தந்ததான |
கமையற்ற சீர்கேடர் வெகுதர்க்க கோலாலர் களையுற்று மாயாது ...... மந்த்ரவாதக் கடைகெட்ட ஆபாத முறுசித்ர கோமாளர் கருமத்தின் மாயாது ...... கொண்டுபூணுஞ் சமயத்த ராசார நியமத்தின் மாயாது சகளத்து ளேநாளு ...... நண்புளோர்செய் சரியைக்ரி யாயோக நியமத்தின் மாயாது சலனப்ப டாஞானம் ...... வந்துதாராய் அமரிற்சு ராபான திதிபுத்ர ராலோக மதுதுக்க மேயாக ...... மிஞ்சிடாமல் அடமிட்ட வேல்வீர திருவொற்றி யூர்நாதர் அருணச்சி காநீல ...... கண்டபார மமபட்ச மாதேவ ரருமைச்சு வாமீநி மலநிட்க ளாமாயை ...... விந்துநாதம் வரசத்தி மேலான பரவத்து வேமேலை வயலிக்குள் வாழ்தேவர் ...... தம்பிரானே. |
பொறுமை இல்லாத ஒழுங்கீனர்களும், மிகுந்த தர்க்கம் பேசுகிற ஆடம்பர வாதிகளுமான மனிதர்களால் சோர்வு அடைந்து மடியாமலும், மந்திர வாதம் செய்யும் மிக இழிவு நிலையில் உள்ள தாழ்மை வாய்ந்த சித்திரப் பேச்சு பேசி கொண்டாட்டம் போடுபவர்களின் செய்கைகளில் சிக்கி மடியாமலும், தங்கள் சமய நெறியை மேற் கொண்டு ஒழுகும் வெவ்வேறு சமயங்களைச் சேர்ந்தோரின் கட்டுப்பாடுகளில் மடியாமலும், உருவ வழிபாடு செய்து நாள் தோறும் பக்தி வைத்துள்ளோர் புரியும் சரியை, கிரியை, யோகம்* எனப்படும் ஒழுக்கங்களை மேற் கொண்டு மடியாமலும், (அதனால்,) எவ்விதமான சஞ்சலங்களுக்கும் உட்படாத ஞானத்தை நீ எனக்குத் தந்தருளுக. போரில் கள் குடிக்கும் (திதியின் மக்களாகிய) அசுரர்களின் அறியாமையானது உலகத்துக்குத் துக்கத்தையே தர, அந்தத் துக்கத்தை ஒழிக்க, எப்போதும் துடித்துக் கொண்டிருக்கும் வேலினைச் செலுத்திய வீரனே, திருவொற்றியூர் நாதரும், சிவந்த ஜடை, நீல கண்டம், பெருமை ஆகியவற்றைக் கொண்டவரும், என் மீது அன்புள்ளவருமான மகாதேவர் சிவபெருமானுக்கு அருமையாக வாய்ந்த சுவாமியே, மாசில்லாதவனே, உருவம் இல்லாதவனே, மாயை, விந்து, நாதம், வரங்களைத் தரும் சக்தி இவைகளுக்கு மேம்பட்ட பரம் பொருளே**, மேலை வயலூர்*** என்னும் தலத்தில் வாழ்கின்ற, தேவர்களின் தம்பிரானே.
* 4 பக்தி மார்க்கங்கள் பின்வருமாறு:1. சரியை: திருக்கோயிலில் அலகு இடுதல், மெழுகுதல், விளக்கு இடுதல், நந்தவனம் வைத்தல், பூ எடுத்தல், மாலை அமைத்தல், இறைவனை வாழ்த்துதல், திருவேடம் கண்டு பணிதல். இது 'தாத மார்க்கம் - சாலோகம்'.2. கிரியை: பூஜை உபகரணங்களை அமைத்து நித்தியக் காரியம் செய்தல். இது 'புத்ர மார்க்கம் - சாமீபம்'.3. யோகம்: புலன்களை அடக்கிப் பிராண வாயுவைச் சலனம் அற நிறுத்தி ஆறு ஆதாரங்களின் பொருளை உணர்ந்து, சந்திர மண்டல அமிர்தத்தை உடல் முழுதும் நிரப்பி, முழு ஜோதியை நினைத்திருத்தல். இது 'சக மார்க்கம் (தோழ நெறி) - சாரூபம்'.4. ஞானம்: புறத் தொழில் அகத் தொழில் இன்றி, அறிவு மாத்திரத்தாலே செய்யும் வழிபாடு ஞானம். இது 'சன்மார்க்கம் - சாயுஜ்யம்'. சிவஞான சித்தியார் சூத்திரம்.
** இறைவன் ஏக நாதன் என்பதைக் குறிக்கும்.அருவத் திருமேனி நான்கு = சிவம், சக்தி, நாதம், விந்து.உருவத் திருமேனி நான்கு = மகேசன், ருத்திரன், மால், அயன்.அருவுருவத் திருமேனி ஒன்று = சதாசிவம்.
*** வயலூர் சோழ நாட்டின் ராஜகெம்பீரப் பகுதியின் தலைநகர். இங்குதான் சுவாமிகளுக்கு தினம் ஒரு திருப்புகழ் பாடும் வரத்தை முருகன் தந்தான்.வயலூர் திருச்சிராப்பள்ளிக்கு 6 மைல் தொலைவில் தென்மேற்கே உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 907 - வயலூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - மடியாமலும், மாயாது, திருமேனி, மார்க்கம், இடுதல், சக்தி, நாதம், விந்து, தொழில், வயலூர், நான்கு, கிரியை, ஞானம், பக்தி, செய்யும், தம்பிரானே, நியமத்தின், தனதத்த, வாய்ந்த, மேற், தானான, வழிபாடு, கொண்டு, சரியை