பாடல் 900 - வயலூர் - திருப்புகழ்

ராகம் - கேதாரம்
தாளம் - சது.ர ரூபகம் - 6
- எடுப்பு - 1/2 இடம்
தனதன தானான தானந் தனதன தானான தானந் தனதன தானான தானந் ...... தனதான |
அரிமரு கோனே நமோவென் றறுதியி லானே நமோவென் றறுமுக வேளே நமோவென் ...... றுனபாதம் அரகர சேயே நமோவென் றிமையவர் வாழ்வே நமோவென் றருண சொரூபா நமோவென் ...... றுளதாசை பரிபுர பாதா சுரேசன் றருமக ணாதா வராவின் பகைமயில் வேலா யுதாடம் ...... பரநாளும் பகர்தலி லாதாளை யேதுஞ் சிலதறி யாவேழை நானுன் பதிபசு பாசோப தேசம் ...... பெறவேணும் கரதல சூலாயு தாமுன் சலபதி போலார வாரங் கடினசு ராபான சாமுண் ...... டியுமாடக் கரிபரி மேலேறு வானுஞ் செயசெய சேனா பதீயென் களமிசை தானேறி யேயஞ் ...... சியசூரன் குரல்விட நாய்பேய்கள் பூதங் கழுகுகள் கோமாயு காகங் குடல்கொள வேபூச லாடும் ...... பலதோளா குடதிசை வாராழி போலும் படர்நதி காவேரி சூழுங் குளிர்வய லூரார மேவும் ...... பெருமாளே. |
திருமாலின் மருமகனே போற்றி என்றும், முடிவு என்பது அற்றவனே போற்றி என்றும், ஆறுமுகக் கடவுளே போற்றி என்றும், உனது பாதத்தில், பாவம் தீர்க்கும் சிவன் மகனே போற்றி என்றும், தேவர்களின் செல்வமே போற்றி என்றும், செந்நிறத்துச் சொரூபனே போற்றி என்றும், பலவிதமாக உன்னைத் துதித்து வணங்க எனக்கு ஆசை இருக்கிறது. வெற்றிச் சிலம்பு அணிந்த பாதனே, தேவேந்திரன் பெற்ற மகள் தேவயானையின் நாதனே, பாம்பின் பகையான மயிலையும் வேலாயுதத்தையும் கொண்ட ஆடம்பரக் கோலாகலனே, ஒரு நாளேனும் நினைத்துச் சொல்லாத உன் திருவடிகளைப் பற்றி சிறிதளவு கூட எதுவும் அறியாத ஏழை நான் உன் திருவாயால் பதி, பசு, பாசம்* ஆகியவற்றைப் பற்றிய உபதேசம் பெறவேண்டும். கையிலே சூலாயுதத்தை ஏந்தியவனே, முன்னொரு நாள், கடல் போலப் பேரோலியும் கொடிய கள்ளைக் குடித்தலும் உடைய துர்க்கை ஆடவும், யானையை (ஐராவதம்) வாகனமாகக் கொண்ட இந்திரனும் ஜெய ஜெய சேனாபதியே என்று ஆரவாரம் செய்யவும், போர்க்களத்தின் மேல் நீ புகுந்ததால் பயந்து நடுங்கிய சூரன் கூக்குரலிடவும், நாயும், பேயும், பூதங்களும், கழுகுகளும், நரிகளும், காகங்களும் அவனது குடலைக் கீறித் தின்னவும், சண்டை செய்த பல தோள்களை உடையவனே, மேற்குத் திசையில் பெரிய சமுத்திரம் போன்று பரவி வரும் காவேரி ஆறு சூழ்ந்த குளிர்ந்த வயலூரில்* உள்ளம் நிறைந்து வீற்றிருக்கும் பெருமாளே.
* பதி - கடவுள், பசு - ஜீவாத்மா, பாசம் - மும்மலம் ஆகிய ஆணவம், கன்மம், மாயை.
** வயலூர் சோழ நாட்டின் ராஜகெம்பீரப் பகுதியின் தலைநகர். இங்குதான் சுவாமிகளுக்கு தினம் ஒரு திருப்புகழ் பாடும் வரத்தை முருகன் தந்தான்.வயலூர் திருச்சிராப்பள்ளிக்கு 6 மைல் தொலைவில் தென்மேற்கே உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 900 - வயலூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - என்றும், போற்றி, நமோவென், தானான, தனதன, தானந், வயலூர், கொண்ட, காவேரி, பெருமாளே