பாடல் 899 - திருமாந்துறை - திருப்புகழ்

ராகம் - ஆசிரி
தாளம் - ஆதி
தாந்தன தனந்த தாந்தன தனந்த தாந்தன தனந்த ...... தனதான |
ஆங்குடல் வளைந்து நீங்குபல் நெகிழ்ந்து ஆய்ஞ்சுதளர் சிந்தை ...... தடுமாறி ஆர்ந்துள கடன்கள் வாங்கவு மறிந்து ஆண்டுபல சென்று ...... கிடையோடே ஊங்கிருமல் வந்து வீங்குகுடல் நொந்து ஓய்ந்துணர் வழிந்து ...... உயிர்போமுன் ஓங்குமயில் வந்து சேண்பெறஇ சைந்து ஊன்றிய பதங்கள் ...... தருவாயே வேங்கையு முயர்ந்த தீம்புன மிருந்த வேந்திழையி னின்ப ...... மணவாளா வேண்டுமவர் தங்கள் பூண்டபத மிஞ்ச வேண்டிய பதங்கள் ...... புரிவோனே மாங்கனி யுடைந்து தேங்கவயல் வந்து மாண்புநெல் விளைந்த ...... வளநாடா மாந்தர்தவ ரும்பர் கோன்பரவி நின்ற மாந்துறை யமர்ந்த ...... பெருமாளே. |
நன்றாக இருந்த குடல் வளைவுற்று கூன்விழுந்து, விழவேண்டிய பற்கள் தளர்ச்சி அடைந்து, ஆய்ந்து ஓய்ந்து மனம் தடுமாற்றம் அடைந்து, வரவேண்டிய கடன்களை வாங்கவேண்டிய இடங்களில் வாங்கி, இவ்வாறே பல ஆண்டுகள் செல்ல, படுத்த படுக்கையாகி, மிகுந்த இருமல் நோய் ஏற்பட்டு, வீங்கும் குடலும் நோவுற்று, சோர்வடைந்து, உணர்ச்சியும் அடங்கி, உயிர் போவதற்கு முன்பு, விளங்கி நிற்கும் மயில் மீது நீ வந்து யான் விண்ணுலகை அடைவதற்கு நீ மனம் இணங்கி, நிலைபெற்ற உன் திருவடிகளைத் தந்தருள்வாயாக. வேங்கை மரங்களும் உயரமான, இனிய தினைப்பயிர்களும் மிகுந்த வயலிலே இருந்த அழகிய தேவி வள்ளியின் இனிய மணவாளனே, வேண்டிக்கொள்ளும் அடியார்கள் கொண்டுள்ள பதவி மேம்பட்டு விளங்க, அவர்கள் விரும்பிய திருவடிகளை அருள் புரிபவனே, மாம்பழம் உடைந்து அதன் சாறு வயலில் நிறைந்து, சிறந்த நெற்பயிர் விளையும் வளமான சோழ நாடனே, மனிதர்களும், தவசிகளும், தேவேந்திரனும் பரவிப் போற்ற நின்ற திருமாந்துறைத்* தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
* திருமாந்துறை திருச்சியை அடுத்த திருவானைக்காவுக்கு வடகிழக்கில் 10 மைலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 899 - திருமாந்துறை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - வந்து, தனந்த, தாந்தன, மனம், இனிய, அடைந்து, மிகுந்த, பெருமாளே, பதங்கள், நின்ற, இருந்த