பாடல் 898 - வாலிகொண்டபுரம் - திருப்புகழ்

ராகம் - மத்யமாவதி
தாளம் - சது.ரத்ருபுடை - 4 களை - 32
தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1
தான தந்ததன தான தந்ததன தான தந்ததன தான தந்ததன தான தந்ததன தான தந்ததன ...... தந்ததான |
ஈயெ றும்புநரி நாய்க ணங்கழுகு காக முண்பவுட லேசு மந்துஇது ஏல்வ தென்றுமத மேமொ ழிந்துமத ...... வும்பல்போலே ஏது மென்றனிட கோலெ னும்பரிவு மேவி நம்பியிது போது மென்கசில ரேய்த னங்கள்தனி வாகு சிந்தைவச ...... னங்கள்பேசிச் சீத தொங்கலழ காவ ணிந்துமணம் வீச மங்கையர்க ளாட வெண்கவரி சீற கொம்புகுழ லூத தண்டிகையி ...... லந்தமாகச் சேர்க னம்பெரிய வாழ்வு கொண்டுழலு மாசை வெந்திடவு னாசை மிஞ்சிசிவ சேவை கண்டுனது பாத தொண்டனென ...... அன்புதாராய் சூதி ருந்தவிடர் மேயி ருண்டகிரி சூரர் வெந்துபொடி யாகி மங்கிவிழ சூரி யன்புரவி தேர்ந டந்துநடு ...... பங்கினோடச் சோதி யந்தபிர மாபு ரந்தரனு மாதி யந்தமுதல் தேவ ருந்தொழுது சூழ மன்றில்நட மாடு மெந்தைமுத ...... லன்புகூர வாது கொண்டவுணர் மாள செங்கையயி லேவி யண்டர்குடி யேற விஞ்சையர்கள் மாதர் சிந்தைகளி கூர நின்றுநட ...... னங்கொள்வோனே வாச கும்பதன மானை வந்துதினை காவல் கொண்டமுரு காஎ ணும்பெரிய வாலி கொண்டபுர மர்ந்துவளர் ...... தம்பிரானே. |
ஈ, எறும்பு, நரி, நாய், பேய், கழுகு, காகம் இவைகள் கடைசியில் உண்ணப்போகும் இந்த உடலை நான் சுமந்து, இது தக்கது என நினைத்து ஆணவ மொழிகளையே பேசி, மதயானை போலே எல்லாமே என்னுடைய ஆட்சியில் அடங்கியவை என்னும்படியான சுகநிலையை அடைந்து, இது நிலைத்திருக்கும் என நம்பி, சிலர் இந்த ஆடம்பரங்கள் இவனுக்குப் போதுமோ என்று கூறும்படியாக, பொருட் செல்வங்களால், ஒப்பற்ற கர்வம் மிக்க எண்ணங்களுடன் பேச்சுக்கள் பேசி, குளிர்ந்த மாலைகளை அழகாக அணிந்துகொண்டு அவற்றின் நறுமணம் வீச, மங்கையர்கள் நடனமாட, வெண்சாமரங்கள் வீச, ஊதுகொம்பு, புல்லாங்குழல் முதலியவை ஊதிவர, பல்லக்கில் அழகாக நான் வீற்றிருக்கும் பகட்டான பெரிய வாழ்வைத் தேடிக்கொண்டு திரியும் ஆசையானது வெந்தழிய, உன்மீது ஆசை மிகுந்து, மங்களகரமான உனது தரிசனத்தைக் கண்டு அனுபவித்து, உன் திருவடித் தொண்டன் என்னும்படியான அன்பை எனக்குத் தருவாயாக. வஞ்சத் தொழில்களுக்கு இடமான மலைப்பிளவுகளைக் கொண்டு மிக இருண்ட மலையான கிரெளஞ்சகிரியும், அசுர சூரர்களும் வெந்து பொடியாகி அழிந்து விழ, சூரியனது குதிரைகள் பூட்டிய தேர் (சூரனது ஆட்சிக்கு முன்பு போல) சென்று நேர்வழியில் வானின் நடுப்பாகத்தில் ஓட*, ஒளி பொருந்திய அந்தப் பிரமனும், இந்திரனும், முதல் தேவரிலிருந்து கடைசித் தேவர்வரை எல்லாத் தேவர்களும் வணங்கிச் சூழ்ந்து நிற்க, கனகசபையில் நடனமாடும் எந்தை, முழுமுதல் கடவுள், சிவபிரான் மகிழ்ந்து அன்புகூர்ந்து நிற்க, போருக்கு என்று வாதுசெய்து வந்த அசுரர்கள் மாண்டு அழிய, உனது செவ்விய கையில் உள்ள வேலாயுதத்தைச் செலுத்தி, தேவர்கள் தம்நாட்டில் குடியேற, வித்தியாதரர்களின் மாதர்கள் மனம் மிக மகிழ, போர்க்களத்திலே நின்று நடனம் புரிந்தவனே, மணம் வீசும் குடம் போன்ற மார்புடைய, மான் சாயல் உள்ள, வள்ளியிடம் வந்து, தினைப்புனத்தைக் காவல் காக்கும் தொழிலை மேற்கொண்ட முருகனே, மதிக்கத்தக்க பெருமைவாய்ந்த வாலிகொண்டபுரம்** என்ற தலத்தில் வீற்றிருந்து விளங்கும் தம்பிரானே.
* சூரனது ஆட்சியில் சூரியன் வானின் நடுவில் செல்லத் தடை இருந்தது.சூர சம்ஹாரம் ஆனபிறகே சூரியன் நடுவானில் செல்ல முடிந்தது - கந்த புராணம்.
** வாலிகொண்டபுரம் திருச்சிக்கு வடக்கே 40 மைலில் பெரம்பலூருக்கு அருகில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 898 - வாலிகொண்டபுரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்ததன, சூரனது, உனது, வானின், உள்ள, சூரியன், அழகாக, நிற்க, என்னும்படியான, தம்பிரானே, காவல், நான், பேசி, ஆட்சியில், தகிட