பாடல் 891 - பெரும்புலியூர் - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தனந்தனன தானத் தனந்தனன தானத் தனந்தனன தானத் ...... தனதான |
சதங்கைமணி வீரச் சிலம்பினிசை பாடச் சரங்களொளி வீசப் ...... புயமீதே தனங்கள்குவ டாடப் படர்ந்தபொறி மால்பொற் சரங்கண்மறி காதிற் ...... குழையாட இதங்கொள்மயி லேரொத் துகந்தநகை பேசுற் றிரம்பையழ கார்மைக் ...... குழலாரோ டிழைந்தமளி யோடுற் றழுந்துமெனை நீசற் றிரங்கியிரு தாளைத் ...... தருவாயே சிதம்பரகு மாரக் கடம்புதொடை யாடச் சிறந்தமயில் மேலுற் ...... றிடுவோனே சிவந்தகழு காடப் பிணங்கள்மலை சாயச் சினந்தசுரர் வேரைக் ...... களைவோனே பெதும்பையெழு கோலச் செயங்கொள்சிவ காமிப் ப்ரசண்டஅபி ராமிக் ...... கொருபாலா பெரும்புனம தேகிக் குறம்பெணொடு கூடிப் பெரும்புலியுர் வாழ்பொற் ...... பெருமாளே. |
கிண்கிணி, ரத்தினம் அமைக்கப் பெற்ற வீரச் சிலம்பு இனிய இசை பாட, மணி வடங்கள் ஒளியைப் பரப்ப, தோள் மேல் மார்பகங்களாகிய மலைகள் அசைந்தாட, தேமல் படர்ந்த மார்பகங்கள் ஆசையை விளைவிக்க, அழகிய அம்பு போன்ற கண்கள் தடுத்துத் தாக்குகின்ற காதுகளில் குண்டலங்கள் ஆட, இனிமை வாய்ந்த மயிலின் அழகைக் கொண்டு மகிழ்ச்சியைக் காட்டும் சிரிப்புடன் பேசி, ரம்பை போன்ற அழகை உடையவர்களும் கரிய கூந்தலை உடையவர்களும் ஆகிய விலைமாதர்களுடன் நெருங்கிப் பழகி படுக்கையே இடமாகப் பொருந்தி அதில் அழுந்திக் கிடக்கும் என் மீது, நீ கொஞ்சம் இரக்கம் கொண்டு உனது இரண்டு திருவடிகளைத் தந்து அருள்வாயாக. சிதம்பரத்தில் உறையும் சிவ பெருமானுடைய குமாரனே, கடப்ப மாலை ஆட சிறப்புற்ற மயிலின் மேல் வீற்றிருப்பவனே, சிவந்த கழுகு களிப்புடன் ஆட, பிணங்கள் மலை மலையாகச் சாய்ந்து (போர்க்களத்தில்) குவியும்படி கோபித்து, அசுரர்களை வேரோடு களைந்து எறிந்தவனே, பெதும்பைப் பருவத்தின் இளமை அழகு தன்னிடத்தே வெற்றியுடன் விளங்கும் சிவகாமி (என்னும்) வீரம் மிக்க அபிராமிக்கு ஒப்பற்ற பாலனே. பெரிய வள்ளி மலைத் தினைப் புனத்துக்குச் சென்று, குறப்பெண்ணாகிய வள்ளியுடன் சேர்ந்து, பெரும் புலியூரில்* வீற்றிருக்கும் அழகிய பெருமாளே.
* பெரும்புலியூர் திருவையாற்றுக்கு மேற்கே 3 மைலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 891 - பெரும்புலியூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனந்தனன, தானத், கொண்டு, உடையவர்களும், மயிலின், மேல், வீரச், பெருமாளே, அழகிய