பாடல் 890 - திருப்பழுவூர் - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தனன தந்தன தாத்த தானன தனன தந்தன தாத்த தானன தனன தந்தன தாத்த தானன ...... தனதான |
விகட சங்கட வார்த்தை பேசிகள் அவல மங்கைய ரூத்தை நாறிகள் விரிவ டங்கிட மாற்றும் வாறென ...... வருவார்தம் விதம்வி தங்களை நோக்கி யாசையி லுபரி தங்களை மூட்டி யேதம இடும ருந்தொடு சோற்றை யேயிடு ...... விலைமாதர் சகல மஞ்சன மாட்டி யேமுலை படவ ளைந்திசை மூட்டி யேவரு சரச இங்கித நேத்தி யாகிய ...... சுழலாலே சதிமு ழங்கிட வாய்ப்ப ணானது மலர வுந்தியை வாட்டி யேயிடை தளர வுங்கணை யாட்டும் வேசிய ...... ருறவாமோ திகிரி கொண்டிரு ளாக்கி யேயிரு தமையர் தம்பியர் மூத்த தாதையர் திலக மைந்தரை யேற்ற சூரரை ...... வெகுவான செனம டங்கலு மாற்றி யேயுடல் தகர அங்கவர் கூட்டை யேநரி திருகி யுண்டிட ஆர்த்த கூளிக ...... ளடர்பூமி அகடு துஞ்சிட மூட்டு பாரத முடிய அன்பர்க ளேத்த வேயரி யருளு மைந்தர்கள் வாழ்த்து மாயவன் ...... மருகோனே அமர ரந்தணர் போற்ற வேகிரி கடல திர்ந்திட நோக்கு மாமயில் அழகொ டும்பழு வூர்க்குள் மேவிய ...... பெருமாளே. |
பரிகாசமானதும் துன்பம் தரக் கூடியதுமான வார்த்தைகளைப் பேசுபவர்கள். துன்பத்துக்கு காரணமான விலைமாதர்கள். அழுக்கு நாற்றம் வீசுபவர்கள். செல்வப் பெருக்கு ஒடுங்கி நிலை மாறுவதற்கு வாய்ப்பு இதுதான் என்று, வருவோர்களுடைய அப்போதைக்கு அப்போது உள்ள நிலைமையைக் கவனித்து, ஆசை காரணமாக, காம இச்சைகளை எழுப்பி தாங்கள் இடுகின்ற மருந்தோடு சோற்றைக் கலந்து கொடுக்கின்றவர்களாகிய விலைமாதர்கள். எல்லா வித நீராடல்களையும் ஆட்டி, மார்பகங்கள் படும்படி குனிந்து, இசை ஞானத்தைக் காட்டி, அதனால் வருகின்ற காம சேட்டை முதலிய இனிமையான முறைப்பட்ட சுழற்சியான ஆடலாலே, தாள ஒத்து முழங்க, வாயில் இசைப் பாடல்கள் பிறக்க, வயிற்றை ஒழுங்காக அசைத்து, இடை தளரவும், கண்களை ஆட்டி அசைக்கும் விலைமாதர்களின் உறவு நல்லதாகுமோ? சக்கரத்தைக் கொண்டு பகலை இருளாகச் செய்து*, (கர்ணன், துரியோதனன் ஆகிய) இரண்டு தமையன்களையும் மற்ற தம்பிமார்களையும், துரோணர், பீஷ்மர் ஆகிய பெரியோர்களையும், துரியோதனன் பிள்ளை லக்ஷண குமரன் முதலிய சிறந்த பிள்ளைகளையும், போரை ஏற்று வந்த சூரர்களான பகைவர்களையும், நிறைந்த பகைவராகிய மக்கள் எல்லாரையும் அழிவு செய்து, அவர்களுடைய உடல் பொடியாக, அங்கே அவற்றை நரிகள் திருகி உண்டிட, பேரொலி செய்த பேய்கள் நிறைந்த போர்க் களத்தில் நடுப்பாகம் சேதப்பட, மூள்வித்த பாரதப் போர் முடிய, அன்பர்கள் துதி செய்ய யமன், வாயு, இந்திரன் ஈன்ற தருமன், வீமன், அருசுனன் ஆகியவர்கள் வாழ்த்தித் துதிக்கும் திருமாலின் மருகனே, தேவர்களும் அந்தணர்களும் போற்ற, மலைகளும் கடலும் அதிரும்படிச் செய்ய வல்ல சிறந்த மயிலின் மேல் அழகுடனேஅமர்ந்து பழுவூரில்** எழுந்தருளி இருக்கும் பெருமாளே.
* பாரதப் போரில் 13-ம் நாள் ஜயத்ரதன் அர்ச்சுனனுடைய பிள்ளை அபிமன்யுவைக் கொன்று விட்டான். உடனே அர்ச்சுனன் நாளை சூரியன் அஸ்தமிப்பதற்குள் ஜயத்ரதனைக் கொல்வேன் இல்லையேல் தீக்குளிப்பேன் என்று சபதம் செய்தான். சூரியன் அஸ்தமிக்கு முன் கண்ணன் தமது சக்கரத்தால் சூரியனை மறைத்தார். சூரியன் அஸ்தமித்து விட்டது என்று ஜயத்ரதன் வெளியே வர, அர்ச்சுனன் பாசுபதாஸ்திரத்தை விட்டு அவனைக் கொன்றான்.
** திருப்பழுவூர் திருவையாற்றுக்கு அருகில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 890 - திருப்பழுவூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்தன, தானன, சூரியன், தாத்த, சிறந்த, பிள்ளை, நிறைந்த, ஜயத்ரதன், அர்ச்சுனன், ஆகிய, செய்ய, பாரதப், ஆட்டி, திருகி, மூட்டி, தங்களை, முடிய, போற்ற, முதலிய, விலைமாதர்கள், பெருமாளே, துரியோதனன்