பாடல் 882 - காவ்ளுர் - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தான தானன தத்தன தந்தன தான தானன தத்தன தந்தன தான தானன தத்தன தந்தன ...... தனதான |
மானை நேர்விழி யொத்தம டந்தையர் பாலை நேர்மொழி யொத்துவி ளம்பியர் வாச மாமலர் கட்டும ரம்பைய ...... ரிருதோளும் மார்பு மீதினு முத்துவ டம்புரள் காம பூரண பொற்கட கம்பொர வாரி நீலவ ளைக்கைபு லம்பிட ...... அநுராகம் ஆன நேரில்வி தத்திர யங்களும் நாண மாறம யக்கியி யம்பவும் ஆடை சோரநெ கிழ்த்தியி ரங்கவும் ...... உறவாடி ஆர வாரந யத்தகு ணங்களில் வேளி னூல்களை கற்றவி ளம்பவும் ஆகு மோகவி பத்துமொ ழிந்துனை ...... யடைவேனோ சான கீதுய ரத்தில ருஞ்சிறை போன போதுதொ குத்தசி னங்களில் தாப சோபமொ ழிப்பஇ லங்கையு ...... மழிவாகத் தாரை மானொரு சுக்கிரி பன்பெற வாலி வாகுத லத்தில்வி ழுந்திட சாத வாளிதொ டுத்தமு குந்தனன் ...... மருகோனே கான வேடர்சி றுக்குடி லம்புன மீதில் வாழித ணத்திலு றைந்திடு காவல் கூருகு றத்திபு ணர்ந்திடு ...... மணிமார்பா காவு லாவிய பொற்கமு கின்திரள் பாளை வீசம லர்த்தட முஞ்செறி காவ ளூர்தனில் முத்தமி ழுந்தெரி ...... பெருமாளே. |
மானுக்கு ஒப்பான கண்ணோடு கூடிய மங்கையர், பாலுக்கு ஒத்த இனிய மொழியோடு கூடிய பேச்சை உடையவர், நறு மணம் வீசும் பூக்களை அணிந்துள்ள தெய்வ மகளிரை ஒத்த விலைமாதர்களின் இரண்டு தோள்கள் மீதும் மார்பின் மேலும் முத்து மாலை புரள, காம இச்சைக்கு முழு இடம் தரும் தங்கக் கடகம் என்னும் காப்பு பொருந்த, கடல்நீல நிறமுள்ள கை வளையல் ஒலி செய்ய, காமப் பற்று முற்றும் சமயத்தில், பல விதமான மருந்து வகைகளைக் கொண்டு நாணம் ஒழியும்படி (வந்தவர்களை) மயக்கி பேச்சுக்களைப் பேசவும், அணிந்துள்ள ஆடை தளர நெகிழ்த்தி, இரக்கம் காட்டுதல் போல உறவாடியும், ஆடம்பரமான நயத்தோடு கூடிய குணத்துடன் மன்மதனின் காம நூல்களில் கற்றுள்ள நுணுக்கங்களை எடுத்துச் சொல்லவும், ஏற்படுகின்ற காம மோகத்தால் வரும் ஆபத்தும் நீங்கி உன் திருவடிகளைச் சேர்வேனோ? ஜானகி துயரத்துடன் அரிய சிறைக்குச் சென்றபோது (ராமனுக்கு) உண்டான கோபத்துடன் துன்பத்தையும் துக்கத்தையும் நீக்குதல் பொருட்டு இலங்கை அழிந்து போகவும், தாரை என்னும் மாதினை ஒப்பற்ற நண்பன் சுக்கி¡£வன் பெறவும், வாலியின் வெற்றித் தொடர் அழிந்து அவன் பூமியில் விழவும் சாதித்த அம்பைச் செலுத்திய (ராமன்) திருமாலின் மருகனே, காட்டு வேடர்களின் சிறிய குடிசையிலும், அழகிய தினைப் புனத்திலும் (அதன் இடையே இருப்புக்காக அமைந்த) பரணிலும் வீற்றிருந்து காவலை மிக நன்றாகச் செய்த குறத்தியாகிய வள்ளியைத் தழுவிடும் அழகிய மார்பனே, சோலையிலுள்ள அழகிய கமுக மரங்களின் கூட்டங்கள் பாளைகளை வீசுவதும், (தாமரை, அல்லி போன்ற) நீர்மலர்கள் உள்ளவையுமான, குளங்கள் நிறைந்துள்ள காவளூர்* என்னும் தலத்தில் வீற்றிருந்து முத்தமிழும் தெரிந்த பெருமாளே.
* காவளூர் தஞ்சை மாவட்டத்தில் திட்டை ரயில் நிலையத்திலிருந்து 6 மைலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 882 - காவ்ளுர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - என்னும், அழகிய, தானன, கூடிய, தத்தன, தந்தன, அழிந்து, வீற்றிருந்து, அணிந்துள்ள, தாரை, ஒத்த, பெருமாளே