பாடல் 881 - திருக்குரங்காடுதுறை - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தனந்த தனத்தான தனந்த தனத்தான தனந்த தனத்தான ...... தனதான |
குடங்கள் நிரைத்தேறு தடங்கள் குறித்தார வடங்கள் அசைத்தார ...... செயநீலங் குதம்பை யிடத்தேறு வடிந்த குழைக்காது குளிர்ந்த முகப்பார்வை ...... வலையாலே உடம்பு மறக்கூனி நடந்து மிகச்சாறி யுலந்து மிகக்கோலு ...... மகலாதே உறங்கி விழிப்பாய பிறந்த பிறப்பேனு முரங்கொள பொற்பாத ...... மருள்வாயே விடங்கள் கதுப்பேறு படங்க ணடித்தாட விதங்கொள் முதற்பாய ...... லுறைமாயன் விலங்கை முறித்தோடி யிடங்கள் வளைத்தேறு விளங்கு முகிற்கான ...... மருகோனே தடங்கொள் வரைச்சாரல் நளுங்கு மயிற்பேடை தழங்கு மியற்பாடி ...... யளிசூழத் தயங்கு வயற்சாரல் குரங்கு குதித்தாடு தலங்க ளிசைப்பான ...... பெருமாளே. |
குடங்கள் வரிசையாக அமையப் பெற்றது போல விளங்கும் மார்பகங்களைக் கருத்தில் வைத்து, (ஆங்கே) முத்து மாலைகள் பொருந்த அசைத்த விலைமகளிருடைய செவிகள் இருக்கும் இடத்திலே விளக்கமுற்று நீண்ட குண்டலங்களை வெட்டுவது போலப் பாய்கின்ற, வெற்றி விளங்கும் நீலோற்பலம் போன்ற விழிப் பார்வை உடைய முகத் தோற்றம் என்னும் வலையாலே, உடல் கெட்டுப் போய் மிகவும் கூன் அடைந்து, நடையும் ஒரேயடியாகச் சரிந்து, தோலும் மிகவும் வற்றி, கையில் கோலும் நீங்காமல், தூங்கி விழித்துக் கொண்டது போன்ற, (இப்போது) பிறந்துள்ள இந்தப் பிறப்பிலாவது திண்மை (ஞானம்) பெறும்படியாக அழகிய திருவடியை அருள்வாயாக. நஞ்சு கன்னத்தில் ஏற காளிங்கனது படத்தின் மீது ஆடி நடித்தவனும், அத்தகைமை கொண்ட சிறந்த (ஆதிசேஷன் என்ற) பாம்புப் படுக்கையில் பள்ளி கொள்பவனுமான திருமால், சிவதனுசை அழகிய கையால் முறித்து, காட்டுக்குச் சென்று, தான் சென்ற இடங்கள் எல்லாம் சிறப்பாக்கி வைத்து விளங்கின மேக நிறமுடைய ராமனாகிய திருமாலுக்கு மருகனே, நீர் நிலைகளைக் கொண்ட மலைச் சாரல்களில் நடுங்குகின்ற மயிலும் அதன் பேடையும் ஒலி செய்யும்படியாக பாடி முரலும் வண்டுகள் சூழ, விளங்கும் வயல் பக்கங்களைக் கொண்ட மலைச்சாரலில் குரங்குகள் குதித்து விளையாடும் (திருக்குரங்காடுதுறை* போன்ற) தலங்களில் மனம் உவந்து வீற்றிருக்கும் பெருமாளே.
* வட குரங்காடுதுறை கும்பகோணத்தை அடுத்த ஐயம்பேட்டைக்கு 4 மைலில் உள்ளது.தென் குரங்காடுதுறை இப்போது ஆடுதுறை எனப்படும் ஊர்.திருவிடைமருதூருக்கு கிழக்கே 2 மைலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 881 - திருக்குரங்காடுதுறை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனந்த, கொண்ட, தனத்தான, விளங்கும், மைலில், உள்ளது, அழகிய, குரங்காடுதுறை, வைத்து, குடங்கள், வலையாலே, பெருமாளே, மிகவும், இப்போது