பாடல் 880 - திருக்குரங்காடுதுறை - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தனத்தனந் தான தனதன தனத்தனந் தான தனதன தனத்தனந் தான தனதன ...... தனதான |
குறித்தநெஞ் சாசை விரகிகள் நவிற்றுசங் கீத மிடறிகள் குதித்தரங் கேறு நடனிகள் ...... எவரோடுங் குறைப்படுங் காதல் குனகிகள் அரைப்பணங் கூறு விலையினர் கொலைக்கொடும் பார்வை நயனிகள் ...... நகரேகை பொறித்தசிங் கார முலையினர் வடுப்படுங் கோவை யிதழிகள் பொருட்டினந் தேடு கபடிகள் ...... தவர்சோரப் புரித்திடும் பாவ சொருபிகள் உருக்குசம் போக சரசிகள் புணர்ச்சிகொண் டாடு மருளது ...... தவிர்வேனோ நெறித்திருண் டாறு பதமலர் மணத்தபைங் கோதை வகைவகை நெகிழ்க்குமஞ் சோதி வனசரி ...... மணவாளா நெருக்குமிந்த் ராதி யமரர்கள் வளப்பெருஞ் சேனை யுடையவர் நினைக்குமென் போலு மடியவர் ...... பெருவாழ்வே செறித்தமந் தாரை மகிழ்புனை மிகுத்ததண் சோலை வகைவகை தியக்கியம் பேறு நதியது ...... பலவாறுந் திரைக்கரங் கோலி நவமணி கொழித்திடுஞ் சாரல் வயலணி திருக்குரங் காடு துறையுறை ...... பெருமாளே. |
பொருளைக் குறித்த விருப்பம் மனதில் கொண்ட காமிகள். பாடும் இசை அமைந்த குரலை உடையவர்கள். குதித்து நாடக மேடையில் ஏறி நடனம் செய்பவர்கள். யாரோடும் தங்கள் குறைகளை எடுத்துச் சொல்லி காதலை ஊட்டிக் கொஞ்சிப் பேசுபவர்கள். அரையில் உள்ள பெண்குறியை விலை பேசி விற்பவர்கள். கொலைத் தொழிலைக் காட்டும் கண் பார்வையை உடையவர்கள். நகத்தின் குறிகள் பதியப் பெற்ற அழகிய மார்பகத்தை உடையவர்கள். காயத் தழும்புள்ள கோவைப் பழம் போன்று சிவந்த வாய் இதழை உடையவர்கள். பொருளைத் தினந்தோறும் தேடுகின்ற வஞ்சக மனத்தினர். தவசிகளும் சோர்ந்து போகும்படி செய்கின்ற பாவ உருவத்தினர். (உடலை) உருக்க வல்ல புணர்ச்சி லீலை செய்பவர்கள். அத்தகையோர்களின் சேர்க்கையைக் கொண்டு மகிழும் மயக்கத்தை நான் ஒழிக்க மாட்டேனோ? சுருண்டும், கரு நிறம் கொண்டும், ஆறு கால்கள் கொண்ட வண்டுகள் மொய்க்கும் பூக்களின் நறு மணம் கொண்டு விளங்கும் புதிய மாலைகள் பல வகையாக கட்டு தளரும், கரு மேகம் போன்ற கூந்தலை உடைய வேடப் பெண்ணாகிய வள்ளியின் கணவனே, கூட்டமாக உள்ள இந்திரன் முதலிய தேவர்களுக்கும், வளப்பம் கொண்ட சேனையை உடைய மன்னர்களுக்கும், நினைத்துத் துதிக்கும் என்னைப் போன்ற அடியார்களுக்கும் பெரிய செல்வமாக விளங்குபவனே, நிறைந்துள்ள மந்தாரை மலர், மகிழம்பூ இவைகளைக் கொண்டு நிரம்பி விளங்கும் குளிர்ந்த சோலைகள் பல வகையானவையும் கலக்கி, நீர் நிறைந்து வருவதுமான ஆறு, பல துறைகளிலும் அலைகளாகிய கைகளை வளைத்து, புதிய மணி வகைகளைக் கொண்டு தள்ளுகின்ற பக்கங்களையும் வயல்களையும் அணிந்துள்ள திருக்குரங்காடுதுறை* என்ற தலத்தில் வீற்றிருக்கும பெருமாளே.
* வட குரங்காடுதுறை கும்பகோணத்தை அடுத்த ஐயம்பேட்டைக்கு 4 மைலில் உள்ளது.தென் குரங்காடுதுறை இப்போது ஆடுதுறை எனப்படும் ஊர்.திருவிடைமருதூருக்கு கிழக்கே 2 மைலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 880 - திருக்குரங்காடுதுறை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - உடையவர்கள், கொண்டு, தனத்தனந், கொண்ட, தனதன, குரங்காடுதுறை, உள்ளது, மைலில், உடைய, செய்பவர்கள், வகைவகை, பெருமாளே, உள்ள, விளங்கும்