பாடல் 864 - கும்பகோணம் - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தந்ததனத் தானதனத் தந்ததனத் தானதனத் தந்ததனத் தானதனத் ...... தனதான |
தும்பிமுகத் தானைபணைக் கொம்பதெனத் தாவிமயற் றொந்தமெனப் பாயுமுலைக் ...... கனமாதர் தும்பிமலர்ச் சோலைமுகிற் கங்குலிருட் காரினிறத் தொங்கல்மயிற் சாயலெனக் ...... குழல்மேவிச் செம்பொனுருக் கானமொழிச் சங்கினொளிக் காமநகைச் செங்கயலைப் போலும்விழிக் ...... கணையாலே சிந்தைதகர்த் தாளுமிதச் சந்த்ரமுகப் பாவையர்தித் திந்திமனுற் றாடுமவர்க் ...... குழல்வேனோ தம்பிவரச் சாதிதிருக் கொம்புவரக் கூடவனச் சந்தமயிற் சாய்விலகிச் ...... சிறைபோகச் சண்டர்முடித் தூள்கள்படச் சிந்தியரக் கோர்கள்விழத் தங்கநிறத் தாள்சிறையைத் ...... தவிர்மாயோன் கொம்புகுறிக் காளமடுத் திந்தமெனுற் றாடிநிரைக் கொண்டுவளைத் தேமகிழச் ...... சுதனீண கொஞ்சுசுகப் பாவையிணைக் கொங்கைதனிற் றாவிமகிழ்க் கும்பகொணத் தாறுமுகப் ...... பெருமாளே. |
துதிக்கையை உடைய முகத்தைக் கொண்ட யானையின் பெருத்த தந்தம் போல வெளித்தோன்றி, காம இச்சைக்குச் சம்பந்தம் உடையது என மேலெழுகின்ற மார்பகங்களை உடைய பெருமை வாய்ந்த (விலை) மாதர்கள் வண்டுகளின் கூட்டம், மலர்ச் சோலை, மேகம், இரவின் இருட்டு இவற்றின் கரு நிறம் கொண்ட, தோகை மயிலின் அழகு இது என்று சொல்லும்படியான, கூந்தலை உடையவர்களாய், செம்பொன் இளகி விழுகின்றதோ என்னும்படியான பேச்சுடன், சங்கின் வெள் ஒளி போன்று, காமத்தைத் தூண்டும், பற்கள், சிவந்த கயல் மீனைப் போன்ற கண்களாகிய அம்புகள் கொண்டு, கண்டோர் மனதைச் சிதற வைத்து ஆளும், இன்பத்தைத் தரும் சந்திரனை ஒத்த முகத்தைக் கொண்ட, பதுமை போன்றவர்கள் தித்திம்திம் என்ற தாளங்களுக்கு நடனம் ஆடும் விலைமாதர்களுக்காக நான் வீணாக அலைச்சல் உறுவேனோ? தம்பியாகிய லக்ஷ்மணன் கூட வர, பண்பில் சிறந்த, கொம்பு போல மெலிந்த இடையை உடையவளும், லக்ஷ்மி போன்றவளுமான சீதை (கானகத்தில்) உடன் வர, (அவளைக் கண்டு) அழகிய மயில்கள் இவள் சாயலுக்கு நாம் ஈடாகோம் என்று ஒதுங்கி விலகி ஒரு புறம் போக, கடுங் கோபம் உடையவர்களான அசுரர்களின் முடிகள் தூளாகும்படி சிதறடித்து, அந்த அரக்கர்கள் மாண்டு விழ, பொன் நிறம் உடைய சீதையின் சிறையை நீக்கிய ராமனாகிய திருமால், புல்லாங்குழலை அடையாளமாகக் கொண்டவனும், விஷம் நிரம்பிய மடுவில் (காளிங்கன் மீது) திந்தம் என்று பொருந்தி நடனம் செய்வதவனும், பசுக் கூட்டங்களை ஒன்று கூட்டி வளைத்து மேய்த்து மகிழ்ந்த கண்ணனுமாகிய அந்த திருமால் பெற்ற கொஞ்சும் கிளி போன்ற பதுமையாகிய வள்ளியின் இரு மார்பகங்களைத் தழுவி மகிழ்பவனும், கும்பகோணத்தில் வீற்றிருப்பவனுமாகிய ஆறுமுகப் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 864 - கும்பகோணம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - கொண்ட, தந்ததனத், உடைய, தானதனத், அந்த, திருமால், நடனம், முகத்தைக், பெருமாளே, நிறம்