பாடல் 853 - திருப்பந்தணை நல்லூர் - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தந்தன தனத்த தந்தன தனத்த தந்தன தனத்த ...... தனதான |
கும்பமு நிகர்த்த கொங்கையை வளர்த்த கொஞ்சுகி ளியொத்த ...... மொழிமானார் குங்கும பணிக்குள் வண்புழு குவிட்ட கொந்தள கம்வைத்த ...... மடவார்பால் வம்புகள் விளைத்து நண்புகள் கொடுத்து மங்கிந ரகத்தில் ...... மெலியாமல் வண்கயி லைசுற்றி வந்திடு பதத்தை வந்தனை செய்புத்தி ...... தருவாயே பம்புந தியுற்ற பங்கொரு சமர்த்தி பண்டுள தவத்தி ...... லருள்சேயே பைம்புய லுடுத்த தண்டலை மிகுத்த பந்தணை நகர்க்கு ...... ளுறைவோனே சம்புநி ழலுக்குள் வந்தவ தரித்த சங்கரர் தமக்கு ...... மிறையோனே சங்கணி கரத்த ரும்பர்ப யமுற்ற சஞ்சல மறுத்த ...... பெருமாளே. |
குடத்தை ஒத்த மார்பகங்களை வளர்த்துள்ளவர்களும், கொஞ்சுகின்ற கிளியைப் போன்ற பேச்சுக்களை உடையவர்களும் ஆகிய மான் போன்ற விலைமாதர்கள், குங்குமம் ஆகிய அலங்காரத்துடன், நல்ல புனுகை விட்டு (வாரப்பட்ட), பூங்கொத்துக்களை உள்ள கூந்தலை உடைய விலைமாதர்களிடத்தில், வீண் செயல்களைச் செய்து, நட்புச் செயல்களைக் காட்டி, அழிந்து, நரகத்தில் மெலியாதவாறு, வளப்பமுள்ள கயிலை மலையைச் சுற்றி வந்த உன் திருவடியை வணங்குகின்ற புத்தியைக் கொடுத்து அருளுக. செறிந்துள்ள கங்கை நதியும், (சிவனார்) பாகத்தில் பொருந்தியுள்ள ஒப்பற்ற சாமர்த்தியம் உள்ள பார்வதி தேவியும் (தத்தமது) பழைமையானத் தவப்பேற்றால் அருளிய குழந்தையே, பசுமையான மேகங்கள் படியும் சோலைகள் மிக்குள்ள திருப்பந்தணை நல்லூர்* என்னும் தலத்தில் வீற்றிருப்பவனே, நாவல் மரத்தடியில் (திருவானைக்காவில்) வந்து தோன்றிய சிவபெருமானுக்கும் தலைவனே, சங்கை ஏந்திய திருமாலும், தேவர்களும் (சூரனிடம்) கொண்ட பயத்தினால் ஏற்பட்ட துன்பத்தை நீக்கி ஒழித்த பெருமாளே.
* இத்தலம் திருவிடைமருதூர் ரயில் நிலையத்துக்கு வடகிழக்கில் 8 மைல் தொலைவில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 853 - திருப்பந்தணை நல்லூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்தன, தனத்த, உள்ள, ஆகிய, கொடுத்து, பெருமாளே