பாடல் 852 - திருப்பந்தணை நல்லூர் - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தனன தந்தன தானன தானன தனன தந்தன தானன தானன தனன தந்தன தானன தானன ...... தனதான |
எகினி னம்பழி நாடக மாடிகள் மயிலெ னுஞ்செய லாரகி நேரல்குல் இசையி டுங்குர லார்கட னாளிகள் ...... வெகுமோகம் எனவி ழுந்திடு வார்முலை மேல்துகில் அலைய வுந்திரி வாரெவ ராயினும் இளகு கண்சுழல் வார்விலை வேசியர் ...... வலைவீசும் அகித வஞ்சக பாவனை யால்மயல் கொடுவி ழுந்திட ராகமு நோய்பிணி யதிக முங்கொடு நாயடி யேனினி ...... யுழலாமல் அமுத மந்திர ஞானொப தேசமும் அருளி யன்புற வேமுரு காவென அருள்பு குந்திட வேகழ லார்கழல் ...... அருள்வாயே ககன விஞ்சையர் கோவென வேகுவ டவுணர் சிந்திட வேகடல் தீவுகள் கமற வெந்தழல் வேல்விடு சேவக ...... முருகோனே கரிநெ டும்புலி தோலுடை யாரெனை யடிமை கொண்டசு வாமிச தாசிவ கடவு ளெந்தையர் பாகம்வி டாவுமை ...... யருள்பாலா செகமு மண்டமு மோருரு வாய்நிறை நெடிய அம்புயல் மேனிய னாரரி திருவு றைந்துள மார்பக னார்திரு ...... மருகோனே தினைவ னந்தனில் வாழ்வளி நாயகி வளர்த னம்புதை மார்பழ காமிகு திலக பந்தணை மாநகர் மேவிய ...... பெருமாளே. |
அன்னப் பறவைகள் கூட்டத்தை பழிக்கவல்ல நாடகம் நடிப்பவர்கள். மயில் என்று சொல்லத்தக்க செயலினை உடையவர்கள். பாம்புக்கு ஒப்பான பெண்குறியை உடையவர்கள். பண்களைக் காட்டும் குரலை உடையவர். (திரும்பிவாரா) கடன் கொள்ளுபவர்கள். மிக்க மோகம் கொண்டுள்ளோம் என்பவர் போல் மேலே விழுபவர்கள். கச்சு அணிந்த மார்பகத்தின் மீதுள்ள மேல் ஆடை அசையும்படி திரிபவர்கள். யாராக இருந்தாலும் இரங்குபவர் போல நெகிழ்ச்சியைக் காட்டும் கண்களைச் சுற்றுபவர்கள். விலைக்கு உடலை விற்கும் வேசியர். காம வலை வீசும் தீமையைத் தருவதான வஞ்சக நினைப்புள்ள நடத்தையால் மயங்கி, நான் மோகம் கொண்டு அவர்கள் வலையில் விழுந்திட, ஆசையும், நோய், பிணி இவைகளை நிரம்பக் கொண்டு நாய் போன்ற அடியேன் இனிமேல் அலைச்சல் உறாமல், அமுதம் போன்ற (சரவணபவ என்னும்) ஆறு எழுத்து மந்திரத்தையும் ஞான உபதேசத்தையும் எனக்கு அருளி, நான் அன்பு கூடிய மனத்துடன் முருகா என்று சொல்லும்படியான கழல் அணிந்த உனது திருவடியை அருள்வாயாக. விண்ணிலுள்ள கல்வி மிக்கோர் கோ என்று அலறி இரங்க, கிரெளஞ்சமும், ஏழு மலைகளும், அசுரர்களும் அழியுமாறு, கடலும், தீவுகளும் மிக வேகுதல் உற, கொடிய நெருப்பை வீசும் வேலாயுதத்தைச் செலுத்திய வலிமை வாய்ந்தவனே, முருகனே, யானை, பெரிய புலி ஆகியவற்றின் தோலைப் புனைந்தவர், என்னை அடிமையாகக் கொண்ட சுவாமி சதாசிவ மூர்த்திக் கடவுள், எனது தந்தை ஆகிய சிவபெருமானது (இடது) பாகத்தை விட்டுப் பிரியாத உமா தேவி அருளிய பாலகனே, உலகங்கள், அண்டங்கள் இவை முழுதிலும் ஓர் உருவாய் நிறைந்து விளங்கும் பெரிய அழகிய மேக நிறத்து மேனியராகிய திருமால், லக்ஷ்மி வாசம் செய்யும் மார்பை உடையவர் ஆகியவரின் அழகிய மருகனே, தினைப் புனத்தில் வாழ்ந்த வள்ளி நாயகியின் வளர்ச்சி மிகும் தனத்தில் படிந்த மார்பனே, அழகனே, மிகுந்த சிறப்பு வாய்ந்த திருப்பந்தணை நல்லூரில்* வீற்றிருக்கும் பெருமாளே.
* இத்தலம் திருவிடைமருதூர் ரயில் நிலையத்துக்கு வடகிழக்கில் 8 மைல் தொலைவில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 852 - திருப்பந்தணை நல்லூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானன, தந்தன, வீசும், அணிந்த, நான், கொண்டு, அழகிய, பெரிய, மோகம், காட்டும், வஞ்சக, வேசியர், அருளி, பெருமாளே, உடையவர்கள், உடையவர்