பாடல் 835 - எண்கண் - திருப்புகழ்

ராகம் - ரஞ்சனி
தாளம் - ஆதி - தி.ர நடை - 12
தந்த தந்த தந்த தந்த, தந்த தந்த தந்த தந்த தந்த தந்த தந்த தந்த ...... தனதான |
சந்த னந்தி மிர்ந்த ணைந்து குங்கு மங்க டம்பி லங்கு சண்ப கஞ்செ றிந்தி லங்கு ...... திரடோளுந் தண்டை யஞ்சி லம்ப லம்ப வெண்டை யஞ்ச லன்ச லென்று சஞ்சி தஞ்ச தங்கை கொஞ்ச ...... மயிலேறித் திந்தி மிந்தி மிந்தி மிந்தி தந்த னந்த னந்த னென்று சென்ற சைந்து கந்து வந்து ...... க்ருபையோடே சிந்தை யங்கு லம்பு குந்து சந்த தம்பு கழ்ந்து ணர்ந்து செம்ப தம்ப ணிந்தி ரென்று ...... மொழிவாயே அந்த மந்தி கொண்டி லங்கை வெந்த ழிந்தி டும்ப கண்டன் அங்க முங்கு லைந்த ரங்கொள் ...... பொடியாக அம்ப கும்ப னுங்க லங்க வெஞ்சி னம்பு ரிந்து நின்று அம்பு கொண்டு வென்ற கொண்டல் ...... மருகோனே இந்து வுங்க ரந்தை தும்பை கொன்றை யுஞ்ச லம்பு னைந்தி டும்ப ரன்ற னன்பில் வந்த ...... குமரேசா இந்தி ரன்ப தம்பெ றண்டர் தம்ப யங்க டிந்த பின்பு எண்க ணங்க மர்ந்தி ருந்த ...... பெருமாளே. |
சந்தனத்தை நிரம்பப் பூசிக் கலந்து, குங்குமமும், கடப்பம்பூவும், விளங்கும் சண்பக மலரும், இவையாவும் நெருங்கி மிளிரும் திரண்ட புயங்களும் துலங்க, தண்டையும், அழகிய சிலம்பும் ஒலி செய்ய, வீரக் காலணி சலன்சல் என்று ஒலிக்க உருவம் இனிதாக அமைந்த கிண்கிணியானது கொஞ்சுவதுபோல ஒலிக்க, மயில் வாகனத்தில் ஏறி (அதே ஓசை) என்ற தாளத்தில் ஆடி அசைந்து ஆனந்தத்துடன் வந்து, அருள் கூர்ந்து என் மனக் கோயிலுக்குள் புகுந்து, எப்போதும் புகழ்ந்து அறிந்து செவ்விய பதங்களை பணிந்து இருப்பாய் என்று என்னிடம் அறிவுரை கூறுவாயாக. அந்தப் புகழ் பெற்ற குரங்காம் அனுமனைக் கொண்டு இலங்கை எரியுண்டு அழியவும், கொடுஞ் செயலையே கொண்ட ராவணன் தனது உடலும் அழிபட்டு ரம்பத்தால் ராவினது போல பொடிப்பொடியாகத் தூளாகவும், அம்பு முதலிய பாணங்களைக் கொண்ட கும்பகர்ணனும் உள்ளம் கலங்குமாறு மிக்க கோபத்துடன் போர்க்களத்தில் நின்று அம்புகளை ஏவி வென்ற மேகவர்ணன் ராமனின் மருகனே, பிறையும், திருநீற்றுப் பச்சை, தும்பைப்பூ, கொன்றை, கங்கை இவற்றை அணியும் சிவபெருமான் தேவர்கள் பால்வைத்த அன்பினால் தோன்றிய குமரேசனே, தேவேந்திரன் தன் பதவியை மீண்டும் பெறும்படியாக, தேவர்களுடைய பயத்தைத் தீர்த்த பின்னர் எண்கண்* என்ற தலத்தில் வந்து வீற்றிருந்த பெருமாளே.
* எண்கண் தலம் திருவாரூரிலிருந்து நீடாமங்கலம் செல்லும் ரயில் பாதையில் திருமதிக்குன்றம் ரயில் நிலையத்துக்கு அருகே உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 835 - எண்கண் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்த, மிந்தி, வந்து, கொன்றை, வென்ற, கொண்டு, பெருமாளே, ரயில், கொண்ட, ஒலிக்க, அம்பு, டும்ப, லங்கு, சந்த, லம்ப, னந்த, தம்ப, லம்பு, நின்று