பாடல் 830 - நாகப்பட்டினம் - திருப்புகழ்

ராகம் - யமுனாகல்யாணி
தாளம் - ஆதி
தனனா தனனா தனனா தனனா தனனா தனனா ...... தனதான |
விழுதா தெனவே கருதா துடலை வினைசேர் வதுவே ...... புரிதாக விருதா வினிலே யுலகா யதமே லிடவே மடவார் ...... மயலாலே அழுதா கெடவே அவமா கிடநா ளடைவே கழியா ...... துனையோதி அலர்தா ளடியே னுறவாய் மருவோ ரழியா வரமே ...... தருவாயே தொழுதார் வினைவே ரடியோ டறவே துகள்தீர் பரமே ...... தருதேவா சுரர்பூபதியே கருணா லயனே சுகிர்தா வடியார் ...... பெருவாழ்வே எழுதா மறைமா முடிவே வடிவே லிறைவா எனையா ...... ளுடையோனே இறைவா எதுதா வதுதா தனையே இணைநா கையில்வாழ் ...... பெருமாளே. |
(இறைவனருளால்) விழுகின்ற தாது (சுக்கிலம்)தான் இந்த உடல் என்று புரிந்து கொள்ளாமல், வினைகளை மேலும் மேலும் சேர்ப்பதையே விரும்புவதாக, வாழ்நாளை வீணாக்கி, (தேகமே ஆத்மா, போகமே மோட்சம் என்ற) உலக வழக்கில் புத்தி மேலிட, பெண்களின் மேல் ஆசை மயக்கம் மிகுந்து, அழுதும், கெட்டுப்போயும், கேவலமாகி வாழ்க்கை முழுவதும் கழிந்து போகாமல், உன்னைப் புகழ்ந்து துதித்து, மலர்ந்த தாமரை போன்ற உன் திருவடிகளே எனக்கு உறவாக பொருந்திய ஒப்பற்ற அழியாத வரம் நீ தந்தருள்வாயாக. தொழுகின்ற அடியார்கள்தம் வினையின் வேர் அடியோடு அற்றுப்போகும்படியாக குற்றமற்ற பரமபதத்தைத் தரும் தேவனே, தேவர்களுக்கு அரசனே, கருணைக்கு இருப்பிடமானவனே, புண்ணியனே, அடியார்களின் பெருவாழ்வே, எழுதப்படாத மறையாம் வேதத்தின் முடிவானவனே, கூரிய வேலை ஏந்திய இறைவனே, என்னை ஆட்கொண்டுள்ளவனே, இறைவனே, நீ எது தரவேண்டுமோ அதைத் தந்தருள். தனக்குத் தானே இணையாகும் நாகப்பட்டினத்தில் வீற்றிருக்கின்ற பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 830 - நாகப்பட்டினம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனனா, இறைவனே, மேலும், பெருமாளே, பெருவாழ்வே