பாடல் 831 - எட்டிகுடி - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் ...... தனதான |
உரமுற் றிருசெப் பெனவட் டமுமொத் திளகிப் புளகித் ...... திடமாயே உடைசுற் றுமிடைச் சுமையொக் கஅடுத் தமிதக் கெறுவத் ...... துடன்வீறு தரமொத் துபயக் களபத் தளமிக் கவனத் தருணத் ...... தனமீதே சருவிச் சருவித் தழுவித் தழுவித் தவமற் கவிடுத் ...... துழல்வேனோ அரிபுத் திரசித் தசஅக் கடவுட் கருமைத் திருமைத் ...... துனவேளே அடல்குக் குடநற் கொடிகட் டியனர்த் தசுரப் படையைப் ...... பொருவோனே பரிவுற் றவருக் கருள்வைத் தருள்வித் தகமுத் தமிழைப் ...... பகர்வோனே பழனத் தொளிர்முத் தணியெட் டிகுடிப் பதியிற் குமரப் ...... பெருமாளே. |
மார்பில் பொருந்தி இரண்டு சிமிழ்கள் போல வட்ட வடிவு கொண்டு, குழைந்து புளகாங்கிதம் கொண்டு, வலிமை கொண்டு, ஆடை சுற்றி அணியப்படும் இடைக்குச் சுமையாக நன்கு பொருந்தி, அளவு கடந்த கர்வத்துடன் மேம்பட்டு விளங்கும் தன்மை கொண்ட, இரண்டு கலவைச் சாந்தும் செஞ்சாந்தும் நிரம்பிய அழகான, இளைய மார்பகங்கள் மீது, மிகப் பழகி தழுவித் தழுவி, தவ நிலையை வேரோடு விட்டுத் தள்ளி நான் திரியலாமோ? திருமாலுக்கு மகனான மன்மதன் என்னும் அந்தக் கடவுளுக்கு அருமையான, அழகிய மைத்துனனே*, செவ்வேளே, வலிமை வாய்ந்த சேவல் என்னும் நல்ல கொடியைக் கட்டி, துன்பம் விளைவித்த அசுர சேனையுடன் சண்டை செய்தவனே, அன்பு வைத்த அடியார்களுக்கு கருணை வைத்து திருவருளைப் பாலிக்கும் ஞான மூர்த்தியே, முத்தமிழில் தேவாரப் பாக்களை (திருஞானசம்பந்தராக அவதரித்து) அருளியவனே, வயல்களில் பிரகாசிக்கின்ற முத்துக்களைக் கொண்ட எட்டிகுடி** என்னும் பதியில் குமரப் பெருமாளே.
* மன்மதன் திருமாலின் மகன். முருகன் திருமால் மகளாகிய வள்ளியை மணந்தவன். எனவே முருகன் மன்மதனின் மைத்துனன்.
** எட்டிகுடி நாகப்பட்டினத்துக்கு அருகே கீழ்வேளூர் ரயில் நிலையத்திற்குத் தெற்கே 7 மைல் தொலைவில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 831 - எட்டிகுடி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனனத், கொண்டு, என்னும், தழுவித், முருகன், மன்மதன், கொண்ட, இரண்டு, குமரப், பெருமாளே, பொருந்தி, வலிமை