பாடல் 820 - திருவாருர் - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தனதன தனன தனதன தனன தானான தந்த ...... தனதான |
மகரம துகெட இருகுமி ழடைசி வாரார்ச ரங்க ...... ளெனநீளும் மதர்விழி வலைகொ டுலகினில் மனிதர் வாணாள டங்க ...... வருவார்தம் பகர்தரு மொழியில் ம்ருகமத களப பாடீர கும்ப ...... மிசைவாவிப் படிமன துனது பரிபுர சரண பாதார விந்த ...... நினையாதோ நகமுக சமுக நிருதரு மடிய நானாவி லங்கல் ...... பொடியாக நதிபதி கதற வொருகணை தெரியு நாராய ணன்றன் ...... மருகோனே அகனக கனக சிவதல முழுது மாராம பந்தி ...... யவைதோறும் அரியளி விததி முறைமுறை கருது மாரூர மர்ந்த ...... பெருமாளே. |
மகர மீனும் தன் முன்னே நிலை கலங்கிட, குமிழம் பூப் போன்ற மூக்கை நெருங்கிச் சேர்ந்து, நீளம் மிக்க அம்புகள் என்று சொல்லும்படி நீண்டுள்ளதாய், துறுதுறுப்பு மிக்க இரு கண்கள் (என்னும்) வலையைக் கொண்டு, உலகில் ஆண் மக்களின் வாழ்நாள் சுருங்கும்படி எதிர் தோன்றி வரும் விலைமாதர்களின் பேசும் பேச்சிலும், கஸ்தூரி, கலவைச் சந்தனம் ஆகியவைகளை அணிந்த குடம் போன்ற மார்பகம் மீதிலும் தாவிப் படியும் என் மனம் உன்னுடைய சிலம்பு அணிந்த தாமரைத் திருவடிகளை நினைக்க மாட்டாதோ? மலை இடங்களின் முன்புள்ள அசுரர்கள் இறந்து பட, பலவிதமான மலைகளும் பொடியாக, கடல் கதற, ஒப்பற்ற அம்பைச் செலுத்திய (ராமராம்) திருமாலின் மருகனே, அகன்ற மலை இடங்களுக்கு உரியவனே, செம் பொன் வடிவினனே, சிவ தலங்கள் எல்லாவற்றிலும் அமர்ந்தவனே, சோலைகளின் வரிசைகள் தோறும் அழகிய வண்டுகளின் கூட்டம் வரிசை வரிசையாக (மலர்த் தேனை) முரலி விரும்பும் திருவாரூரில்* அமர்ந்த பெருமாளே.
* திருவாரூர் நாகப்பட்டினத்துக்கு மேற்கே 14 மைலில் உள்ளது. மூவரின் தேவாரமும் போற்றும் முதுநகர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 820 - திருவாருர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - அணிந்த, மிக்க, பெருமாளே, பொடியாக, தனதன