பாடல் 811 - கன்னபுரம் - திருப்புகழ்

ராகம் - ....;
தாளம் -
தன்னதனத் தன்னதனத் தன்னதனத் தன்னதனத் தனாதாத்த ...... தந்ததான |
அன்னமிசைச் செந்நளிநச் சென்மிகணக் கந்நியமத் தன்னமயப் புலால்யாக்கை ...... துஞ்சிடாதென் றந்நினைவுற் றன்னினைவுற் றன்னியரிற் றன்னெறிபுக் கன்னியசற் றுலாமூச்ச ...... டங்கயோகம் என்னுமருட் கின்னமுடைப் பன்னவைகற் றின்னவைவிட் டின்னணமெய்த் தடாமார்க்க ...... மின்புறாதென் றின்னதெனக் கென்னுமதப் புன்மைகெடுத் தின்னல்விடுத் தின்னதெனப் படாவாழ்க்கை ...... தந்திடாதோ கன்னல்மொழிப் பின்னளகத் தன்னநடைப் பன்னவுடைக் கண்ணவிரச் சுறாவீட்டு ...... கெண்டையாளைக் கன்னமிடப் பின்னிரவிற் றுன்னுபுரைக் கன்முழையிற் கன்னிலையிற் புகாவேர்த்து ...... நின்றவாழ்வே பொன்னசலப் பின்னசலச் சென்னியினற் கன்னபுரப் பொன்னிநதிக் கராநீர்ப்பு ...... யங்கனாதா பொன்மலையிற் பொன்னினகர்ப் புண்ணியர்பொற் பொன்மவுலிப் பொன்னுலகத் திராசாக்கள் ...... தம்பிரானே. |
அன்னப் பறவையின் மேல் அமர்பவனும், (திருமாலின் உந்தியிலுள்ள) செந்தாமரையில் உதித்தவனுமாகிய பிரமன் விதித்த கணக்கில் உள்ள அந்தக் கெடுகாலம் வரை நியமிக்கப்பட்டு இருந்ததின்படி, சோற்றின் மயமான, மாமிசத்தோடு கூடிய இந்த உடல் அழிந்து போகாது என்ற அந்த நினைவின் காரணமாக பல மயக்க எண்ணங்களைக் கொண்டு, அயலார் மீது ஐம்புலன்களின் வழியே சென்று ஈடுபட்டு, பின்னும் சிறிது சிறிதாக உலாவுகின்ற மூச்சு அடங்கும்படி, யோகம் என்ற மயக்கத்தைத் தரும், துன்பத்தைக் கொடுக்கும், பல விதமான குற்றத்துக்கு இடமான நூல்களைக் கற்று, பின் அங்ஙனம் கற்ற இன் பிற பாடங்களையும் விடுத்து, இவ்வாறாக இளைப்புற்றுச் செல்லும் தகாத வழிகள் இன்பத்தைத் தராது என்று உணர்ந்து, இவ்வழிதான் எனக்குத் தகுந்தது என்கின்ற கொள்கையின் இழிவுத் தன்மையை ஒழித்து, துன்பங்கள் யாவையும் ஓட்டி விலக்கி, இத் தன்மையது என்று விளக்க முடியாத பேரின்ப வாழ்க்கையை உனது திருவருள் தராதோ? கற்கண்டு போன்ற பேச்சையும், பின்னப்பட்ட கூந்தலையும், அன்னம் போன்ற நடையையும், வாழை இலைகளால் ஆகிய ஆடையையும் கொண்டவளாய், அந்தச் சுறா மீனையும் அடக்க வல்ல விளக்கம் கொண்டுள்ள கெண்டை மீன் போன்ற கண்களை உடையவளாகிய வள்ளியை களவு கொண்டு போவதற்காக, பொழுது விடிவதற்கு முன், பொருத்தமான இடமாகிய கல் குகையில், கற்சிலை போல் அசைவற்ற நிலையில் புகுந்து வேர்வையுறக் காத்திருந்த செல்வனே, பொன் மலையாகிய மேருவுக்குப் பின்பு அசைவற்றதான (எதற்கும் கலங்காத) சோழ அரசனின் ஆட்சியில் உள்ள அழகிய கன்னபுரம்* என்னும் தலத்தில் வீற்றிருந்து, முதலைகள் வாழும் காவேரி நதிக்கரையில் உள்ள, பாம்பினைச் சடையில் தரித்த சிவபெருமானுக்குத் தலைவனே, கயிலாய மலையிலும், லக்ஷ்மி வாழும் திரு வைகுண்டத்திலும் உள்ள புண்ணியர்களுக்கும், அழகிய பொன் மகுடங்களை அணிந்த, விண்ணுலகத்தில் உள்ள இந்திரர்களுக்கும் தம்பிரானே.
* கன்னபுரம் தற்போது கண்ணபுரம் என்று வழங்கப்படுகிறது. நன்னிலம் ரயில் நிலையததுக்கு அருகில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 811 - கன்னபுரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - உள்ள, தன்னதனத், வாழும், அழகிய, கொண்டு, தம்பிரானே, பொன்