பாடல் 809 - வழுவூர் - திருப்புகழ்

ராகம் - ....; தாளம்
-
தனனாதன தானன தானன தனனாதன தானன தானன தனனாதன தானன தானன ...... தனதானா |
தருவூரிசை யாரமு தார்நிகர் குயிலார்மொழி தோதக மாதர்கள் தணியாமய லாழியி லாழவு ...... மமிழாதே தழலேபொழி கோரவி லோசன மெறிபாசம காமுனை சூலமுள் சமனார்முகில் மேனிக டாவினி ...... லணுகாதே கருவூறிய நாளுமு நூறெழு மலதேகமு மாவலு மாசைக படமாகிய பாதக தீதற ...... மிடிதீரக் கனிவீறிய போதமெய் ஞானமு மியலார்சிவ நேசமு மேவர கழல்சேரணி நூபுர தாளிணை ...... நிழல்தாராய் புருகூதன்மி னாளொரு பாலுற சிலைவேடுவர் மானொரு பாலுற புதுமாமயில் மீதணை யாவரு ...... மழகோனே புழுகார்பனிர் மூசிய வாசனை யுரகாலணி கோலமென் மாலைய புரிநூலுமு லாவுது வாதச ...... புயவீரா மருவூர்குளிர் வாவிகள் சோலைகள் செழிசாலிகு லாவிய கார்வயல் மகதாபத சீலமு மேபுனை ...... வளமூதூர் மகதேவர்பு ராரிச தாசிவர் சுதராகிய தேவசி காமணி வழுவூரில்நி லாவிய வாழ்வருள் ...... பெருமாளே. |
மூங்கில் மரத்தால் (செய்த புல்லாங்குழலால்) ஏற்படுகின்ற இசையில் வல்லவர், அமுதைப் போல் இனியவர், குயிலைப் போன்ற இனிய குரலை உடையவர், வஞ்சகம் செய்யும் விலைமாதர்கள் (மீதுள்ள) குறைவுபடாத காம இச்சைக் கடலில் விழுந்து அழிந்து போகாமலும், நெருப்பைப் பொழியும் பயங்கரமான கண்கள், (உயிரைப் பறிக்க) எறிந்து வீசப்படும் பாசக் கயிறு, முள் போன்ற மிக்க கூர்மையை உடைய சூலம் ஆகியவைகளை உடையவனும், கரு மேகம் போன்ற நிறம் கொண்டவனுமாகிய யமன் தன் எருமைக் கடா வாகனத்தின் மீது ஏறி வந்து என்னை நெருங்காமலும், கரு உற்பத்தியான பின் முன்னூற்று ஏழு நாட்களும், மும்மலங்களுக்கு இடமான உடலும், மண், பெண், பொன் ஆகிய மூவாசைகளும், வஞ்சகத்தால் ஏற்படும் பாவங்களும் தீமைகளும் அற்றுப் போகவும், என் வறுமை ஒழியவும், முதிர்ந்த அறிவும், மெய்ஞ் ஞானமும், தகுதி மிக்க சிவ நேசமும் எனக்கு உண்டாக, கழல்கள் அணிந்த, சிலம்புகள் கொண்ட உனது இரு திருவடிகளின் நிழலைத் தருவாயாக. இந்திரன் மகளாகிய மின்னலை ஒத்த தேவயானை ஒரு பக்கத்தில் வீற்றிருக்க, வில் ஏந்திய வேடர்களுடைய மான் போன்ற வள்ளி மற்றொரு பக்கத்தில் வீற்றிருக்க, அதிசயிக்கத்தக்க சிறந்த மயிலின் மீது அமர்ந்து அவர்களை அணைந்தவண்ணம் ஏறிவரும் அழகனே, புனுகு சட்டம் நிறைந்த பன்னீர் இவை நெருங்கிக் கூடிய, வாசனை உள்ள மார்பில் அணிந்துள்ள மெல்லிய மாலையை உடையவனே, பூணூலும் அசைகின்ற பன்னிரண்டு தோள்களை உடைய வீரனே, வாசனை உலாவும் குளிர்ந்த குளங்களும், சோலைகளும், செழிப்பான நெல் தழைத்துள்ள அழகிய வயல்கள் சேர்ந்துள்ளதும், சிறந்த தவச் சீலர்கள் வாழ்வதுமான வளப்பம் பொருந்திய பழைய ஊராகியது இந்த வழுவூர். மகாதேவர், திரி புரங்களை அழித்தவர், சதாசிவர் ஆகிய சிவபெருமானின் மகனாகிய தேவ சிகாமணியே, வழுவூரில்* வீற்றிருந்து அடியார்களுக்கு வாழ்வு அருளும் பெருமாளே.
* வழுவூர் மயிலாடுதுறைக்குத் தெற்கே இலந்தங்குடி ரயில் நிலையத்துக்கு மேற்கே கால் மைலில் உள்ள தலம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 809 - வழுவூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானன, தனனாதன, வாசனை, பக்கத்தில், வீற்றிருக்க, உள்ள, வழுவூர், ஆகிய, சிறந்த, உடைய, பாலுற, லாவிய, பெருமாளே, மிக்க, மீது