பாடல் 808 - திருநள்ளாறு - திருப்புகழ்

ராகம் - யதுகுல
காம்போதி
தாளம் - அங்கதாளம் - 7 1/2
- எடுப்பு - 3/4 தள்ளி
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தாளம் - அங்கதாளம் - 7 1/2
- எடுப்பு - 3/4 தள்ளி
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தத்த தந்தன தானன தானன தத்த தந்தன தானன தானன தத்த தந்தன தானன தானன ...... தனதான |
பச்சை யொண்கிரி போலிரு மாதன முற்றி தம்பொறி சேர்குழல் வாளயில் பற்று புண்டரி காமென ஏய்கயல் ...... விழிஞான பத்தி வெண்டர ளாமெனும் வாணகை வித்ரு மஞ்சிலை போல்நுத லாரிதழ் பத்ம செண்பக மாமநு பூதியி ...... னழகாளென் றிச்சை யந்தரி பார்வதி மோகினி தத்தை பொன்கவி னாலிலை போல்வயி றிற்ப சுங்கிளி யானமி னூலிடை ...... யபிராமி எக்கு லங்குடி லோடுல கியாவையு மிற்ப திந்திரு நாழிநெ லாலற மெப்பொ தும்பகிர் வாள்கும ராஎன ...... வுருகேனோ கச்சை யுந்திரு வாளுமி ராறுடை பொற்பு யங்களும் வேலுமி ராறுள கட்சி வங்கம லாமுக மாறுள ...... முருகோனே கற்ப கந்திரு நாடுயர் வாழ்வுற சித்தர் விஞ்சையர் மாகர்ச பாசென கட்ட வெங்கொடு சூர்கிளை வேரற ...... விடும்வேலா நச்சு வெண்பட மீதணை வார்முகில் பச்சை வண்புய னார்கரு டாசனர் நற்க ரந்தநு கோல்வளை நேமியர் ...... மருகோனே நற்பு னந்தனில் வாழ்வளி நாயகி யிச்சை கொண்டொரு வாரண மாதொடு நத்தி வந்துந ளாறுறை தேவர்கள் ...... பெருமாளே. |
பச்சையானதும், ஒளி பொருந்தியதுமான இரு பெரிய மார்பகங்கள், மொய்த்து இன்பம் துய்க்கும் வண்டுகள் முரலும் கூந்தல், ஒளிகொண்ட வேலையும், தாமரையையும் போன்ற மீனை ஒத்த கண் விழிகள், ஞான ஒளி வரிசையில் உள்ள வெண்முத்துக்களைப் போன்று ஒளிவீசும் பற்கள், வில்லைப் போன்ற நெற்றி, பவளத்தையும், தாமரையையும் செண்பகப்பூவையும் போன்ற இதழ்கள், இவையெல்லாம் கொண்ட, ஞான அநுபவத்தின் அழகியானவள், இச்சையெல்லாம் பூர்த்தி செய்யும் பராகாச வடிவினாள், பேரழகியான பார்வதி, கிளி, பொன்னின் அழகுடைய ஆலிலை போன்ற வயிற்றினள், இல்லறம் நடத்தும் பசுங்கிளி போன்றவள், மின்னலும் நூலும் போன்ற இடையை உடையவள், எல்லாக் குலத்தாருக்கும், எல்லா உடலுக்கும், எல்லா உலகங்களுக்கும், இருந்த இடத்தில் இருந்தே இரண்டு படி நெல் கொண்டு முப்பத்திரண்டு அறங்களையும்* எப்பொழுதும் பங்கிட்டு அளிப்பவளாகிய பார்வதியின் குமரனே என்று கூறி உள்ளம் உருக மாட்டேனோ? அரையில் கச்சை, அழகிய வாள், பன்னிரண்டு அழகிய தோள்கள், வேல், பன்னிரண்டு கண்கள், மங்களமான தாமரை போன்ற ஆறு திருமுகங்கள் - இவை கொண்ட முருகனே, கற்பகமரம் உள்ள செல்வம் நிறைந்த தேவர்களின் நாடு உயர்ந்த வாழ்வைப் பெறவும், சித்தர்களும், விஞ்சையர்களும், தேவர்களும் சபாஷ்** என்று மெச்சவும், துன்பம் தந்துவந்த கொடும் சூரர்களின் சுற்றத்தார் யாவரும் வேரறச் செலுத்திய வேலனே, விஷமுள்ள வெண்ணிறப் படம் உடைய ஆதிசேஷன்மீது படுக்கை கொண்டவர், கருமுகிலின், மரகதப்பச்சையின் நிறம் கொண்டு வளமார்ந்த புயத்தை உடைய கருட வாகனர், நல்ல கரத்தில் வில் (சாரங்கம்), அம்பு, சங்கு (பாஞ்சஜன்யம்), சக்கரம் (சுதர்ஸனம்) இவற்றைக் கொண்ட திருமாலின் மருகனே, நல்ல தினைப்புனத்தில் வாழ்ந்திருந்த வள்ளிநாயகியின் காதலைப் பெற்று, ஒப்பற்ற யானை ஐராவதம் வளர்த்த தேவயானையுடன் விரும்பி வந்து திருநள்ளாறு*** என்ற தலத்தில் உறைகின்றவனே, தேவர்களின் பெருமாளே.
* பெரிய புராணத்தில் கூறிய முப்பத்திரண்டு அறங்கள் பின்வருமாறு:சாலை அமைத்தல், ஓதுவார்க்கு உணவு, அறுசமயத்தாருக்கும் உணவு, பசுவுக்குத் தீனி, சிறைச் சோறு, ஐயம், தின்பண்டம் நல்கல், அநாதைகளுக்கு உணவு, மகப்பெறுவித்தல், மகவு வளர்த்தல், சிசுக்களுக்குப் பால் நல்கல், அநாதைப் பிணம் சுடுதல், அநாதைகளுக்கு உடை, சுண்ணாம்பு பூசல், நோய்க்கு மருந்து, வண்ணார் தொழில், நாவிதத் தொழில், கண்ணாடி அணிவித்தல், காதோலை போடுதல், கண் மருந்து, தலைக்கு எண்ணெய், ஒத்தடம் தருதல், பிறர் துயர் காத்தல், தண்ணீர்ப் பந்தல், மடம் கட்டுதல், தடாகம் அமைத்தல், சோலை வளர்த்தல், தோல் பதனிடல், மிருகங்களுக்கு உணவு, ஏர் உழுதல், உயிர் காத்தல், கன்னிகாதானம்.
** சபாஷ் என்ற அரபு வார்த்தை முகலாயர் ஆட்சி அருணகிரிநாதர் காலத்தில் வந்ததைக் குறிக்கிறது.*** திருநள்ளாறு காரைக்காலுக்கு மேற்கே 3 மைலில் உள்ளது. இந்தத் தலம் நவக்கிரகங்களில் ஒன்றான சனீஸ்வரனின் க்ஷேத்திரம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 808 - திருநள்ளாறு - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானன, உணவு, கொண்ட, தத்த, தந்தன, தகதிமி, அமைத்தல், உடைய, நல்ல, வளர்த்தல், தொழில், காத்தல், மருந்து, தேவர்களின், அநாதைகளுக்கு, நல்கல், கொண்டு, பெருமாளே, கச்சை, பார்வதி, பச்சை, பெரிய, தாமரையையும், அழகிய, முப்பத்திரண்டு, எல்லா, உள்ள, பன்னிரண்டு