பாடல் 807 - இஞ்சிகுடி - திருப்புகழ்

ராகம் - ....;
தாளம் -
தந்ததனத் தான தான தனதன தந்ததனத் தான தான தனதன தந்ததனத் தான தான தனதன ...... தனதான |
குங்குமகற் பூர நாவி யிமசல சந்தனகத் தூரி லேப பரிமள கொங்கைதனைக் கோலி நீடு முகபட ...... நகரேகை கொண்டைதனைக் கோதி வாரி வகைவகை துங்கமுடித் தால கால மெனவடல் கொண்டவிடப் பார்வை காதி னெதிர்பொரு ...... மமுதேயாம் அங்குளநிட் டூர மாய விழிகொடு வஞ்சமனத் தாசை கூறி யெவரையு மன்புடைமெய்க் கோல ராக விரகினி ...... லுறவாடி அன்றளவுக் கான காசு பொருள்கவர் மங்கையர்பொய்க் காதல் மோக வலைவிழ லன்றியுனைப் பாடி வீடு புகுவது ...... மொருநாளே சங்கதசக் ¡£வ னோடு சொலவள மிண்டுசெயப் போன வாயு சுதனொடு சம்பவசுக் ¡£வ னாதி யெழுபது ...... வெளமாகச் சண்டகவிச் சேனை யால்மு னலைகடல் குன்றிலடைத் தேறி மோச நிசிசரர் தங்கிளைகெட் டோட ஏவு சரபதி ...... மருகோனே எங்குநினைப் போர்கள் நேச சரவண சிந்துரகர்ப் பூர ஆறு முககுக எந்தனுடைச் சாமி நாத வயலியி ...... லுறைவேலா இன்புறுபொற் கூட மாட நவமணி மண்டபவித் தார வீதி புடைவளர் இஞ்சிகுடிப் பார்வ தீச ரருளிய ...... பெருமாளே. |
குங்குமம், பச்சைக் கற்பூரம், புனுகுச் சட்டம், பன்னீர், சந்தனம், கஸ்தூரி (இவைகளின்) பூசுகையால் நறுமணம் கொண்டதும், நகரேகை கொண்டவையுமான மார்பகங்கள் வளையும்படி பெரிய ரவிக்கை, மேலாடை முதலியவற்றை அணிந்து, கூந்தலைச் சீவி வாரி வித விதமாக அழகிய வகையில் முடித்து, ஆலகால விஷத்தைப்போல வலிமை கொண்ட நஞ்சை ஒத்த (கண்) காதின் எதிரில் போய் சண்டை இடும் அமுதம் போன்றதும், அங்கு உள்ள கொடுமை வாய்ந்ததுமான மாய சக்தி வாய்ந்த கண்ணைக் கொண்டு, (உள்ளே) வஞ்சக மனத்துடனும், (புறத்தே) அன்பு மொழிகளைப் பேசியும் (சந்தித்த) எத்தகையவருடனும் அன்பு காட்டி, மெய்யே உருவெடுத்ததோ என்னும்படி ஆசை கூடிய சாமர்த்தியத்துடன் மொழிகளைப் பேசிச் சல்லாபித்து, அன்றைய பொழுதுக்கான கைக்காசை அபகரிக்கும் விலைமாதர்களின பொய்யன்பாகிய காம வலையில் விழுதல் இல்லாமல், உன்னைப் பாடி மோட்ச வீட்டில் புகும்படியான ஒரு நாள் எனக்குக் கிட்டாதோ? கொத்தான பத்துத் தலைகளை உடைய ராவணனுடன் தூது செல்வதற்கு வேண்டிய சொல் வளம் முதலிய ஆற்றல் கொண்டு வீரச் செயல்கள் செய்வதற்குச் சென்ற வாயுவின் மகனான அனுமனோடு, ஜாம்பவான், சுக்¡£வன் முதலான எழுபது வெள்ளம் சேனைகளுடன் வலிமை வாய்ந்த குரங்குப் படையால் முன்பு, அலைகின்ற கடலை சிறு மலைகள் கொண்டு அணைகட்டி (அக்கரையில் உள்ள இலங்கையில்) ஏறி, மோச எண்ணமுடைய அரக்கர்களுடைய சுற்றம் அழிந்து ஓடும்படி செலுத்திய அம்பினைக் கொண்ட ராமனின் மருகனே, எங்கு வாழ்பவர்களுக்கும் நினைப்பவர்களுக்கும் நேசனே, சரவணனே, செம்பொடி பச்சைக் கற்புரம் (இவை அணிந்துள்ள) ஆறுமுகனே, குகனே, அடியேனுக்கு உரிய சாமிநாதப் பெருமானே, வயலூரில் வாழும் வேலனே, இன்பம் தரத் தக்க அழகிய கூடங்கள், மாடங்கள், புதிது புதிதான நவரத்தினங்கள், மண்டபங்கள், அகண்ட தெருக்களில் பக்கத்திலே வளர்கின்ற இஞ்சிகுடி என்னும் தலத்தில் பார்வதி பாகர் ஆகிய சிவபெருமான் பெற்றருளிய பெருமாளே. * இஞ்சிகுடி மயிலாடுதுறைக்கு 10 மைல் தெற்கேயுள்ள பேரளத்தின் அருகில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 807 - இஞ்சிகுடி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்ததனத், கொண்டு, தனதன, வாய்ந்த, உள்ள, அன்பு, இஞ்சிகுடி, மொழிகளைப், கொண்ட, அழகிய, வாரி, நகரேகை, பாடி, பெருமாளே, பச்சைக், வலிமை