பாடல் 804 - திலதைப்பதி - திருப்புகழ்

ராகம் - ....;
தாளம் -
தனனத் தனத்த தந்த தனனத் தனத்த தந்த தனனத் தனத்த தந்த ...... தனதான |
மகரக் குழைக்கு ளுந்து நயனக் கடைக்கி லங்கு வசியச் சரத்தி யைந்த ...... குறியாலே வடவெற் பதைத்து ரந்து களபக் குடத்தை வென்று மதர்விற் பணைத்தெ ழுந்த ...... முலைமீதே உகமெய்ப் பதைத்து நெஞ்சும் விரகக் கடற்பொ திந்த வுலைபட் டலர்ச்ச ரங்கள் ...... நலியாமல் உலகப் புகழ்ப்பு லம்பு கலியற் றுணர்ச்சி கொண்டு னுரிமைப் புகழ்ப்ப கர்ந்து ...... திரிவேனோ புகர்கைக் கரிப்பொ திந்த முளரிக் குளத்தி ழிந்த பொழுதிற் கரத்தொ டர்ந்து ...... பிடிநாளிற் பொருமித் திகைத்து நின்று வரதற் கடைக்க லங்கள் புகுதக் கணத்து வந்து ...... கையிலாருந் திகிரிப் படைத்து ரந்த வரதற் குடற்பி றந்த சிவைதற் பரைக்கி சைந்த ...... புதல்வோனே சிவபத் தர்முத்த ரும்பர் தவசித் தர்சித்த மொன்று திலதைப் பதிக்கு கந்த ...... பெருமாளே. |
மீன் போல் அமைந்த குண்டலங்கள் மீது தாவிப் பாயும் கடைக்கண்களில் விளங்கும் கூர்மை வாய்ந்த அந்த அம்பால் ஏற்பட்ட வடுவாலும், மேரு மலையை வடக்கே (வெட்கப்பட்டு) ஓட வைத்து, சந்தனக் கலவை அணிந்த குடத்தை வெற்றி கொண்டு, செழிப்புடன் பெருத்து எழுந்த மார்பின் மேலும், உடல் நடுங்கிப் பதைப்புற என் மனம் காம மோகக் கடலில் ஏற்பட்ட (விரகாக்கினி) உலையில் அவதிப்பட்டு, (மன்மதனின்) மலர்ப் பாணங்கள் என்னை வேதனைப் படுத்தாமல், உலகத்தோரின் புகழ்க் கூச்சல் என்னும் செருக்கு நீங்க, ஞான உணர்ச்சி கொண்டு உனக்கு உரித்தான திருப்புகழைச் சொல்லி நான் திரிய மாட்டேனோ? புள்ளியை உடைய துதிக்கையைக் கொண்ட யானையாகிய கஜேந்திரன் தாமரை நிறைந்திருந்த குளத்தில் இறங்கிய போது முதலை தொடர்ந்து பிடித்த அந்த நாளில், துன்புற்று திகைத்து நின்று வரதராகிய திருமாலுக்கு அடைக்கல முறையீடுகள் செய்ய, ஒரு நொடிப் பொழுதில் வந்து அவருடைய திருக் கையில் விளங்கும் சக்கரப் படையை ஏவிய திருமாலுக்கு உடன் பிறந்தவளாகிய சிவை, பராசக்திக்கு இனிய மகனே, சிவனடியார்கள், முக்தி நிலை பெற்றவர்கள், தேவர்கள், தவம் நிறை சித்தர்கள் இவர்களுடைய மனம் பொருந்தி வணங்கும் திலதைப்பதி* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே.
* திலதைப்பதிக்கு தற்போதைய பெயர் கோயிற்பத்து. தஞ்சை மாவட்டத்தில் பேரளம் என்ற ஊரின் தென்மேற்கே 3 மைலில் இருக்கிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 804 - திலதைப்பதி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - கொண்டு, தந்த, தனத்த, தனனத், விளங்கும், ஏற்பட்ட, அந்த, மனம், திருமாலுக்கு, என்னும், பெருமாளே, நின்று, குடத்தை, பதைத்து, திந்த, திகைத்து, வரதற், வந்து