பாடல் 805 - திருவம்பர் - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தான தந்தனந் தான தந்ததன தான தந்தனந் தான தந்ததன தான தந்தனந் தான தந்ததன ...... தந்ததான |
சோதி மந்திரம் போத கம்பரவு ஞான கம்பரந் தேயி ருந்தவெளி தோட லர்ந்தபொன் பூவி ருந்தஇட ...... முங்கொளாமல் சூது பந்தயம் பேசி யஞ்சுவகை சாதி விண்பறிந் தோடு கண்டர்மிகு தோத கம்பரிந் தாடு சிந்துபரி ...... கந்துபாயும் வீதி மண்டலம் பூண மர்ந்துகழி கோல மண்டிநின் றாடி யின்பவகை வேணு மென்றுகண் சோர ஐம்புலனொ ...... டுங்குபோதில் வேதி யன்புரிந் தேடு கண்டளவி லோடி வெஞ்சுடுங் காட ணைந்துசுட வீழ்கி வெந்துகுந் தீடு மிந்தஇட ...... ரென்றுபோமோ ஆதி மண்டலஞ் சேர வும்பரம சோம மண்டலங் கூட வும்பதும வாளன் மண்டலஞ் சார வுஞ்சுழிப ...... டர்ந்ததோகை ஆழி மண்டலந் தாவி யண்டமுத லான மண்டலந் தேடி யொன்றதொழு கான மண்டலஞ் சேட னங்கணயில் ...... கொண்டுலாவிச் சூதர் மண்டலந் தூளெ ழுந்துபொடி யாகி விண்பறந் தோட மண்டியொரு சூரி யன்திரண் டோட கண்டுநகை ...... கொண்டவேலா சோடை கொண்டுளங் கான மங்கைமய லாடி இந்திரன் தேவர் வந்துதொழ சோழ மண்டலஞ் சாரு மம்பர்வளர் ...... தம்பிரானே. |
(யோகத்தால் அடையப்படும்) ஜோதி ஒளி மண்டபம், ஞான உபதேசத்தால் அடையக்கூடிய ஞானாகாசமாகிய பரந்த பெரு வெளி, இதழ் அவிழ்ந்த (கற்பகப்) பொன் மலர் மணக்கும் தேவலோகம் (இத்தகைய மேலான பதங்களை அடையும் முயற்சியைக்) கொள்ளாமல், சூதாட்டப் பந்தயங்கள் பேசி, ஐந்து வகைப்பட்ட இனத்தினரான ஐம்புலன்கள், விண்ணையும் நிலை பெயர்த்து ஓட வல்ல வீரர்கள், மிக்க வஞ்சகச் செயல்களை அன்பு காட்டுவது போல காட்டி, கடல் குதிரை முழுப் பாய்ச்சல் பாய்வது போலப் பாய்ந்து செல்லும் வீதிவட்டத்தில் சிக்கிக் கொண்டு, மிக்க அலங்காரங்கள் நிறையும்படி நின்று அனுபவித்து, இன்ப வகையே வேண்டும் என்று இருந்தும், கண் பார்வை தளர்ந்து, ஐம்புலன்களும் ஒடுங்குகின்ற சமயத்தில், பிரமன் தெரிந்து அனுப்பிய சீட்டைப் பார்த்த அளவில், உயிர் பிரிந்து ஓட, கொடிய சுடுகாட்டைச் சேர்ந்து (என் உற்றார்) உடலைச் சுட்டு எரிக்க, கழிந்து போய் சாம்பலாகிச் சிதறிப் போகின்ற இந்த துன்பம் என்று ஒழியுமோ? சூரிய மண்டலங்கள் யாவும் ஒன்று சேரவும், சிறந்த சந்திர மண்டலங்கள் அதனுடன் சேரவும், தாமரையில் வீற்றிருக்கும் பிரமனது உலகம் அங்கு கூடவும், (கண் போன்ற) பீலிகள் படர்ந்துள்ள தோகையைக் கொண்ட உனது மயில் கடல் வட்டத்தைக் கடந்து, ஆங்காங்கே உள்ள பற்பல அண்டங்களைத் தேடிப் பொருந்தியும், கீழே உள்ள பாதாள லோகத்தில் உள்ள ஆதி சேஷனை அங்கு கொத்தவும், கையில் நீ வேல் கொண்டு உலாவி, சூரியர்களின் மண்டலங்கள் தூளாகி எழுந்து பொடியாகி வானில் பறந்தோடவும், அங்ஙனம் தூசுப்புயல் நெருங்கி வருவதைக் கண்டு ஒவ்வொரு சூரியனும் (உருண்டு புரண்டு) ஓடுவதைக் கண்டு சிரித்து விளையாடிய வேலனே, உள்ளத்தில் விருப்பம் கொண்டு காட்டில் வாழும் மங்கையாகிய வள்ளியின் மீது எழுந்த மோகத்தில் அவளுடன் விளையாடி, இந்திரனும் மற்ற தேவர்களும் வந்து வணங்க, சோழ மண்டலத்தைச் சார்ந்த திருவம்பர்* என்னும் தலத்தில் வாழ்ந்து வீற்றிருக்கும் தம்பிரானே.
* திருவம்பர் தஞ்சை மாவட்டத்தில் பேரளத்துக்கு அருகில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 805 - திருவம்பர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - மண்டலஞ், தந்தனந், கொண்டு, மண்டலங்கள், உள்ள, மண்டலந், தந்ததன, கண்டு, வீற்றிருக்கும், அங்கு, கடல், பேசி, தம்பிரானே, மிக்க, சேரவும்