பாடல் 796 - திருவிடைக்கழி - திருப்புகழ்

ராகம் -
கல்யாணி
தாளம் - கண்டசாபு - 2 1/2
தாளம் - கண்டசாபு - 2 1/2
தனதனனத் தனதான தனதனனத் தனதான தனதனனத் தனதான ...... தனதான |
பழியுறுசட் டகமான குடிலையெடுத் திழிவான பகரும்வினைச் செயல்மாதர் ...... தருமாயப் படுகுழிபுக் கினிதேறும் வழிதடவித் தெரியாது பழமைபிதற் றிடுலொக ...... முழுமூடர் உழலும்விருப் புடனோது பலசவலைக் கலைதேடி யொருபயனைத் தெளியாது ...... விளியாமுன் உனகமலப் பதநாடி யுருகியுளத் தமுதூற உனதுதிருப் புகழோத ...... அருள்வாயே தெழியுவரிச் சலராசி மொகுமொகெனப் பெருமேரு திடுதிடெனப் பலபூதர் ...... விதமாகத் திமிதிமெனப் பொருசூர னெறுநெறெனப் பலதேவர் ஜெயஜெயெனக் கொதிவேலை ...... விடுவோனே அழகுதரித் திடுநீப சரவணவுற் பவவேல அடல்தருகெற் சிதநீல ...... மயில்வீரா அருணைதிருத் தணிநாக மலைபழநிப் பதிகோடை அதிபஇடைக் கழிமேவு ...... பெருமாளே. |
பழி பாவங்களுக்கு இருப்பிடமான உடலாகிய இந்தக் குடிசையை எடுத்து இழிவான சொற்களை சொல்லும் செயல்களை உடைய மாதர்கள் தருகின்ற மாயமான படுகுழியில் வீழ்ந்து நல்லபடியாக கரையேறும் வழி உண்டோ என்று தடவிப் பார்த்தும் தெரியாமல், பழங்கொள்கைகளையே ஆராயாமல் பிதற்றும் இவ்வுலக முழுமூடர்கள் திருந்து விருப்பமுடன் ஓதும் பல குழப்பம்தரும் நூல்களைத் தேடி ஒரு பயனையும் தெளிந்து அறியாமல் இறப்பதன்முன்பு, உன் தாமரைப் பாதங்களை விரும்பி உருகி, உள்ளத்தில் பக்திரசம் அமுதமாக ஊற உன் திருப்புகழை ஓதுவதற்கு அருள்வாயாக. முழங்கும் உப்புக் கடல் மொகு மொகு என்று கொந்தளிக்கவும், பெரிய மேருமலை திடு திடு என்று பொடிபட்டு இடிபடவும், பலவகை பூதகணங்கள் விதவிதமாக திமிதிமி என்று கூத்தாடவும், சண்டையிட்ட சூரன் மாமர உருவில் இருந்து நெறுநெறு என்று முறிந்து விழவும், பல தேவர்களும் ஜெய ஜெய என்று வெற்றி கோஷம் இடவும், கோபித்து எழுந்த வேலாயுதத்தைச் செலுத்தியவனே, அழகு நிறைந்திட்ட கடப்பமாலையை அணிந்தவனே, சரவணப்பொய்கையில் தோன்றியவனே, வேலனே, வெற்றியைத் தருவதும், முழங்கி ஒலிப்பதும் நீல நிறமானதுமான மயில் வாகனத்தில் ஏறும் வீரனே, திருவண்ணாமலை, திருத்தணிகை, திருச்செங்கோடு, பழநிநகர், வல்லக்கோட்டை ஆகிய தலங்களில் வாழும் தலைவனே, திருவிடைக்கழித் தலத்தில்* வீற்றிருக்கும் பெருமாளே.
* திருவிடைக்கழி மாயூரத்திற்கு (மயிலாடுதுறைக்கு) 17 மைல் தென்கிழக்கே திருக்கடையூருக்கு அருகில் உள்ளது.இங்கு முருகன் குராமரத்தடியில் கொலு வீற்றிருக்கிறான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 796 - திருவிடைக்கழி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதான, தனதனனத், திடு, பெருமாளே, மொகு