பாடல் 793 - திருவிடைக்கழி - திருப்புகழ்

ராகம் -...;
தாளம் -
தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் ...... தனதான |
அனலப் பரிபுக் ககுணத் ரயம்வைத் தடர்பொய்க் குருதிக் ...... குடில்பேணா அவலக் கவலைச் சவலைக் கலைகற் றதனிற் பொருள்சற் ...... றறியாதே குனகித் தனகிக் கனலொத் துருகிக் குலவிக் கலவிக் ...... கொடியார்தங் கொடுமைக் கடுமைக் குவளைக் கடையிற் குலைபட் டலையக் ...... கடவேனோ தினைவித் தினநற் புனமுற் றகுறத் திருவைப் புணர்பொற் ...... புயவீரா தெளியத் தெளியப் பவளச் சடிலச் சிவனுக் கொருசொற் ...... பகர்வோனே கனகச் சிகரக் குலவெற் புருவக் கறுவிப் பொருகைக் ...... கதிர்வேலா கழியைக் கிழியக் கயல்தத் துமிடைக் கழியிற் குமரப் ...... பெருமாளே. |
நெருப்பு, நீர், காற்று முதலிய பஞ்ச பூதங்கள் சேர்ந்ததும், (சத்துவம், ராஜதம், தாமஸம் என்ற) முக்குணங்கள் வைக்கப்பட்டதும், நிரம்பப் பொய்யானதும், ரத்தம் கூடியதுமான இந்தக் குடிசையாகிய உடலை விரும்பி, பயனற்றதும், கவலைகளுக்கு இடமானதும், மனக் குழப்பம் தருவதுமான பல நூல்களைக் கற்று, அந்நூல்களில் உள்ள பொருளைக் கொஞ்சமும் அறியாமல், கொஞ்சிப் பேசியும், உள்ளம் களித்தும், நெருப்பில் பட்ட மெழுகு போல் உருகியும், நெருங்கி உறவாடிக் கூடியும் பசப்புகின்ற கொடி போன்ற பெண்களின் கொடுமையிலும், கடுமையிலும், குவளை மலர் போன்ற கண்களின் ஓரப்பார்வையிலும் நிலை தடுமாறி நான் அலைச்சல் உறுவேனோ? தினை விதைக்கப்பட்ட நல்ல புனக்கொல்லையில் இருந்த குறப்பெண்ணான வள்ளியை அணைகின்ற அழகிய தோள்களை உடைய வீரனே, தெள்ளத் தெளியும்படி ஒப்பற்ற பிரணவத்தை செந்நிறமான சடையை உடைய சிவ பெருமானுக்கு உபதேசித்தவனே, தங்க மயமான சிகரங்களை உடைய சிறந்த கிரெளஞ்ச மலையை ஊடுருவும்படிக் கோபித்துச் சண்டை செய்த ஒளி வீசும் வேலைக் கையில் ஏந்தியவனே, கடலின் உப்பு நீர்ப் பரப்பு கிழியும்படி கயல் மீன்கள் தாவிக் குதிக்கும் திருவிடைக்கழி* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் குமரப் பெருமாளே.
* திருவிடைக்கழி மாயூரத்திற்கு (மயிலாடுதுறைக்கு) 17 மைல் தென்கிழக்கே திருக்கடையூருக்கு அருகில் உள்ளது.இங்கு முருகன் குராமரத்தடியில் கொலு வீற்றிருக்கிறான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 793 - திருவிடைக்கழி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனனத், உடைய, குமரப், பெருமாளே