பாடல் 791 - பாகை - திருப்புகழ்

ராகம் - ...; தாளம் -
தனன தனதன தனன தனதன தான தானன ...... தனதான |
குவளை பொருதிரு குழையை முடுகிய கோல வேல்விழி ...... மடவார்தங் கொடிய ம்ருகமத புளக தனகிரி கூடி நாடொறு ...... மயலாகித் துவள வுருகிய சரச விதமது சோர வாரிதி ...... யலையூடே சுழலு மெனதுயிர் மவுன பரமசு கோம கோததி ...... படியாதோ கவள கரதல கரட விகடக போல பூதர ...... முகமான கடவுள் கணபதி பிறகு வருமொரு கார ணாகதிர் ...... வடிவேலா பவள மரகத கநக வயிரக பாட கோபுர ...... அரிதேரின் பரியு மிடறிய புரிசை தழுவிய பாகை மேவிய ...... பெருமாளே. |
குவளை மலரை விட அழகானது என்று அதனுடன் போர் செய்வதாகி, இரு காதுகளிலும் உள்ள குண்டலங்களை விரட்டக் கூடியதாகி, அழகிய வேல் போன்றதாகிய கூரிய கண்களை உடைய விலைமாதர்களின் பொல்லாதனவும், கஸ்தூரி அணிந்தனவும், புளகம் கொண்டனவுமான மலை போன்ற மார்பகங்களை அணைந்து ஒவ்வொரு நாளும் மோகம் கொண்டவனாய், துவளும்படி உருகிய சரச லீலை விதங்களில் தளர்ச்சியுற, காமக் கடல்களின் அலைகளுக்கு உள்ளே சுழல்கின்ற என்னுடைய உயிர் மவுன நிலை என்கின்ற பரம சுகம் ஆகிய பெரிய கடலில் மூழ்கித் திளைக்காதோ? வாயளவு கொண்ட உணவை உட்கொள்ளும் துதிக்கையையும், மதம் பாயும் சுவடு கொண்ட அழகிய கன்னத்தையும், யானையின் முகத்தையும் கொண்ட கடவுளாகிய கணபதிக்குப் பின்னால் தோன்றிய ஒப்பற்ற மூலப் பொருளே, ஒளி வீசும் வடி வேலனே, பவளத்தின் செந்நிறத்தையும், மரகதத்தின் பச்சை நிறத்தையும், பொன்னின் மஞ்சள் நிறத்தையும், வைரத்தின் வெண்மை நிறத்தையும் கொண்ட கதவுகளையும், கோபுரத்தையும் கொண்டு, சூரியனது தேரின் குதிரைகளும் இடறும்படி உயர்ந்துள்ள மதில்கள் சூழ்ந்துள்ள பாகை* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
* பாகை மாயூரத்திற்கு அருகே கடற்கரையை ஒட்டி உள்ள பாகசாலை என்னும் தலம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 791 - பாகை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - கொண்ட, நிறத்தையும், அழகிய, என்னும், உள்ள, பெருமாளே, குவளை, மவுன, பாகை, தனதன