பாடல் 793 - திருவிடைக்கழி - திருப்புகழ்

ராகம் -...;
தாளம் -
தனத்தனதத் தனத்தனதத் தனத்தனதத் தனத்தனதத் தனத்தனதத் தனத்தனதத் ...... தனதான |
இரக்குமவர்க் கிரக்கமிகுத் தளிப்பனசொப் பனத்திலுமற் றெனக்கியலுக் கிசைக்கெதிரெப் ...... புலவோரென் றெடுத்துமுடித் தடக்கைமுடித் திரட்டையுடுத் திலச்சினையிட் டடைப்பையிடப் ப்ரபுத்துவமுற் ...... றியல்மாதர் குரக்குமுகத் தினைக்குழலைப் பனிப்பிறையொப் பெனப்புயலொப் பெனக்குறுகிக் கலைக்குள்மறைத் ...... திடுமானின் குளப்படியிற் சளப்படுமிப் பவக்கடலைக் கடக்கஇனிக் குறித்திருபொற் கழற்புணையைத் ...... தருவாயே அரக்கரடற் கடக்கஅமர்க் களத்தடையப் புடைத்துலகுக் கலக்கணறக் குலக்கிரிபொட் ...... டெழவாரி அனைத்தும்வறப் புறச்சுரர்கற் பகப்புரியிற் புகக்கமலத் தனைச்சிறையிட் டிடைக்கழியிற் ...... பயில்வோனே கரக்கரடக் களிற்றுமருப் புலக்கையினிற் கொழித்தமணிக் கழைத்தரளத் தினைத்தினையிற் ...... குறுவாளைக் கணிக்குறவக் குறிச்சியினிற் சிலைக்குறவர்க் கிலச்சைவரக் கயத்தொடுகைப் பிடித்தமணப் ...... பெருமாளே. |
யாசிப்பவர்களுக்கு மிக்க இரக்கம் கொண்டு கொடுப்பன என்பது கனவிலும் இல்லை என்று சொல்லும்படியான எனக்கு, இயற்றமிழிலோ, இசைத்தமிழிலோ எதிர் நிற்கக் கூடிய எந்தப் புலவர் உள்ளார் என்று மமதையுடன் பாடல்கள் அமைத்து, தலையையும் பெரிய கைகளையும் அலங்கரித்து, ஆடம்பரமான அரை ஆடை, மேல் ஆடைகளை உடுத்து, முத்திரை மோதிரம் அணிந்து, ஒருவர் வெற்றிலைப் பை ஏந்தி வர, பெரிய தலைவனின் ஆடம்பரங்களை மேற்கொண்டு, அங்கு வந்து பொருந்திய மாதர்களின் குரங்கு போன்ற முகத்தை குளிர்ந்த நிலவுக்கு ஒப்பென்றும், கூந்தலை மேகத்துக்கு ஒப்பென்றும் சொல்லி, அணைந்து, ஆடைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் மானின் குளம்படி போன்ற பெண்குறியில் துன்பப்படும் பிறப்பு என்ற கடலை நான் தாண்டி உய்ய, இனி அடியேனாகிய என்னைக் கண் பார்தது, உனது அழகிய திருவடி என்னும் தெப்பத்தைத் தந்தருளுக. அசுரர்களின் வலிமையைத் தொலைக்க, போர்க் களத்தில் நன்றாக அலைத்து அடித்து உலகின் துன்பம் நீங்க, உயரிய கிரெளஞ்ச மலை பொடிபட்டு உதிர, எல்லாக் கடல்களும் வற்றிப் போக, தேவர்கள் கற்பக லோகமாகிய பொன்னுலகில் குடியேற, தாமரையில் வீற்றிருக்கும் பிரமனைச் சிறையில் அடைத்து, திருவிடைக்கழி* என்னும் தலத்தில் பொருந்தி இருப்பவனே, துதிக்கையையும், மதநீர் பாய்ந்த சுவட்டையும் உடைய யானையின் தந்தமாகிய உலக்கையைக் கொண்டு, தேர்ந்து எடுக்கப்பட்ட ரத்தினங்களையும் மூங்கில் முத்தையும் தினை குத்துவது போல இடித்து விளையாடுபவளான வள்ளியை, வேங்கை மரங்கள் உள்ள குறிஞ்சி மலை நில ஊரில் வில்லை ஏந்தும் குறவர்களுக்கு வெட்கம் உண்டாகும்படி, கணபதியாகிய யானையின் உதவியோடு கைப்பிடித்த மணவாளப் பெருமாளே.
* திருவிடைக்கழி மாயூரத்திற்கு (மயிலாடுதுறைக்கு) 17 மைல் தென்கிழக்கே திருக்கடையூருக்கு அருகில் உள்ளது.இங்கு முருகன் குராமரத்தடியில் கொலு வீற்றிருக்கிறான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 793 - திருவிடைக்கழி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனத்தனதத், என்னும், யானையின், ஒப்பென்றும், பெரிய, பெருமாளே, கொண்டு