பாடல் 778 - கரியவனகர் - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தனதன தனனத் தான தாத்தன தனதன தனனத் தான தாத்தன தனதன தனனத் தான தாத்தன ...... தனதான |
அளிசுழ லளகக் காடு காட்டவும் விழிகொடு கலவித் தீயை மூட்டவும் அமளியில் முடியப் போது போக்கவும் ...... இளைஞோர்கள் அவர்வச மொழுகிக் காசு கேட்கவும் அழகிய மயிலிற் சாயல் காட்டவும் அளவிய தெருவிற் போயு லாத்தவும் ...... அதிபார இளமுலை மிசையிற் றூசு நீக்கவும் முகமொடு முகம்வைத் தாசை யாக்கவும் இருநிதி யிலரைத் தூர நீக்கவும் ...... இனிதாக எவரையு மளவிப் போய ணாப்பவும் நினைபவ ரளவிற் காதல் நீக்கியென் இடரது தொலையத் தாள்கள் காட்டிநின் ...... அருள்தாராய் நெளிபடு களமுற் றாறு போற்சுழல் குருதியில் முழுகிப் பேய்கள் கூப்பிட நிணமது பருகிப் பாறு காக்கைகள் ...... கழுகாட நிரைநிரை யணியிட் டோரி யார்த்திட அதிர்தரு சமரிற் சேனை கூட்டிய நிசிசரர் மடியச் சாடு வேற்கொடு ...... பொரும்வீரா களிமயில் தனில்புக் கேறு தாட்டிக அழகிய கனகத் தாம மார்த்தொளிர் கனகிரி புயமுத் தார மேற்றருள் ...... திருமார்பா கரியவ னகரிற் றேவ பார்ப்பதி யருள்சுத குறநற் பாவை தாட்பணி கருணைய தமிழிற் பாடல் கேட்டருள் ...... பெருமாளே. |
வண்டுகள் மொய்க்கும் கூந்தலாகிய காட்டைக் காட்டுதற்கும், கண்களால் காமத் தீயை மூட்டுதற்கும், படுக்கையில் எப்பொழுதும் பொழுது போக்கவும், இள வயது உள்ளவர்களின் வசத்தில் பழகி பொருள் கேட்பதற்கும், அழகிய தங்கள் மயில் போன்ற சாயலைக் காட்டவும், சந்திக்கும் பொருட்டு வீதியில் போய் உலாத்துதற்கும், மிகவும் கனத்த இளமையான மார்பின் மேலுள்ள ஆடையை (வேண்டுமென்றே) நீக்குதற்கும், முகமொடு முகம் வைத்து காம ஆசையை உண்டு பண்ணவும், நிறைய பணம் இல்லாதவர்களை தூரத்தே விரட்டி நீக்குதற்கும், இனிய சொற்களுடன் எல்லாருடனும் கலந்துபோய் ஏமாற்றவும், நினைக்கின்றவர்களாகிய விலை மகளிர் சம்பந்தப்பட்ட வரையில் என் ஆசையை நீக்க, என் வருத்தமெல்லாம் தொலைய, திருவடிகளைக் காட்டி உன் திருவருளைத் தந்து அருளுக. சுழற்சி உறும் போர்க்களத்தில் ஆறு போலச் சுழன்று ஓடும் ரத்தத்தில் முழுகி பேய்கள் கூச்சலிட, மாமிசத்தை உண்டு பருந்துகளும், காகங்களும், கழுகுகளும் விளையாட, கூட்டம் கூட்டமாக வரிசையாக நின்று நரிகள் ஆரவாரம் செய்ய, அதிர்ச்சி உறும் போரில் சேனைகளைக் கூட்டி வந்த அசுரர்கள் இறக்கும்படி சம்காரம் செய்யும் வேலைக் கொண்டு போர் புரியும் வீரனே, செருக்கைக் கொண்டிருந்த மயிலின் மேல் புகுந்து ஏறும் பலவானே, அழகிய பொன் மாலை நிறைந்து விளங்கும் பொன் மலை போன்ற புயங்களை உடையவனே, முத்து மாலை ஏற்று அணிந்துள்ள அழகிய மார்பனே, கரியவனகர்* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் தேவனே, பார்வதி அருளிய மகனே, குறப் பெண்ணாகிய வள்ளியின் தாள்களைப் பணிகின்ற கருணா மூர்த்தியே, தமிழ்ப் பாடல் கேட்டு அன்பர்க்கு அருளும் பெருமாளே.
* கரியவனகர் சீகாழிக்கு மேற்கே 4 மைலில் உள்ள கொண்டல் வண்ணக்குடி என்ற தலம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 778 - கரியவனகர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - அழகிய, தனதன, காட்டவும், தாத்தன, தனனத், ஆசையை, உண்டு, பொன், மாலை, நீக்குதற்கும், உறும், முகமொடு, போக்கவும், தீயை, நீக்கவும், பேய்கள், பாடல், பெருமாளே