பாடல் 776 - சீகாழி - திருப்புகழ்

ராகம் - ...; தாளம் -
தனனத்தத் தானத் தானன தனனத்தத் தானத் தானன தனனத்தத் தானத் தானன ...... தனதான |
மதனச்சொற் காரக் காரிகள் பவளக்கொப் பாடச் சீறிகள் மருளப்பட் டாடைக் காரிக ...... ளழகாக மவுனச்சுட் டாடிச் சோலிகள் இசலிப்பித் தாசைக் காரிகள் வகைமுத்துச் சாரச் சூடிகள் ...... விலைமாதர் குதலைச்சொற் சாரப் பேசிகள் நரகச்சிற் சாடிப் பீடிகள் குசலைக்கொட் சூலைக் காலிகள் ...... மயல்மேலாய்க் கொளுவிக்கட் டாசைப் பாசனை பவதுக்கக் காரச் சூதனை குமுதப்பொற் பாதச் சேவையி ...... லருள்வாயே கதறக்கற் சூரைக் கார்கட லெரியத்திக் கூறிற் பாழ்பட ககனக்கட் டாரிக் காயிரை ...... யிடும்வேலா கதிர்சுற்றிட் டாசைப் பால்கிரி யுறைபச்சைப் பாசக் கோகில கவுரிப்பொற் சேர்வைச் சேகர ...... முருகோனே திதலைப்பொற் பாணிக் கார்குயி லழகிற்பொற் றோகைப் பாவையை தினமுற்றுச் சாரத் தோள்மிசை ...... யணைவோனே திலதப்பொட் டாசைச் சேர்முக மயிலுற்றிட் டேறிக் காழியில் சிவன்மெச்சக் காதுக் கோதிய ...... பெருமாளே. |
மன்மதன் சம்பந்தமான காமச் சொற்களை உற்சாகத்துடன் பேசுபவர்கள். (காதில் உள்ள) பவளத் தோடு ஆடும்படி சீறிக் கோபிப்பவர்கள். கண்டோர் மருளும்படி பட்டு ஆடைகளை அணிபவர்கள். அழகாக, மவுனத்தாலேயே (தங்களுக்கு வேண்டியதைச்) சுட்டிக் காட்டி காரியத்தைச் சாதிப்பவர்கள். பிணங்குதல் மூலமாக தங்கள் ஆசையை வெளியிடுபவர்கள். பல வகையான முத்து மலைகளைச் சூடுபவர்கள். உடலை விலைக்கு விற்பவர்கள். மழலைப் பேச்சுக்களை சரசமாகப் பேசுபவர்கள். நரகமாகிய அச்சில் ஆடவரைச் சாய்வித்துத் துன்பப்படுத்துவர். தமது செய்கைக்குத் தடையாக வந்த கர்ப்பத்தைக் கலைப்பவர்கள். இத்தகைய வேசியர்பால் மோகம் மேற்பட்டு, (அதனால்) கொள்ளப்பட்டுக் கட்டுண்டு, அந்த ஆசையில் பற்று கொண்ட என்னை, பிறப்பால் வரும் துக்க நிகழ்ச்சிகளில் வீழ்ந்த வஞ்சகனாகிய என்னை, ஆம்பல் மலர் அணிந்த அழகிய திருவடிச் சேவையைத் தந்து அருள்வாயாக. ஏழு கிரியும் அவை காவலாக இருந்த சூரனும் கதறி அழவும், கரிய கடல் எரியவும், (எட்டு) திசைகளும் இடையூறு பட்டுப் பாழாகவும், (அசுர) சேனைகளை வாளுக்கு உணவாகும்படிச் செய்த வேலனே, சூரியன் வலம் வரும் பொன் மலையாகிய மேருவின் பக்கத்தில் உள்ள கயிலையில் வீற்றிருக்கின்ற பச்சை நிறமுள்ள குயில் போன்ற பார்வதியின் மார்பகத்திலுள்ள அழகிய சந்தனக் கலவை உன் சிரத்தின் மேற்படும்படிக் கட்டிக் கொள்ளும் குழந்தை முருகோனே, தேமல் உடையவளும், அழகிய அன்பை இதயத்தில் உடையவளும், கரிய குயில் போன்று அழகுடையவளும், பொலிவு நிறைந்த மயில் போன்ற, பதுமை போன்றவளுமாய் விளங்கும் வள்ளியை நாள்தோறும் அவளைத் தழுவும் பொருட்டு அவள் தோளை அணைந்தவனே, சிறந்த திலகப் பொட்டு விருப்பமுடன் நெற்றியில் அணியும் திரு முகத்தை உடையவனே, மயிலின் மேல் பொருந்தி ஏறி சீகாழியில் அமர்ந்து, அத்தலத்தில் சிவபெருமான் புகழும்படியாக அவர் காதைச் சிறப்பித்துத் (தோடுடைய செவியன்* என்ற) தேவாரப் பாவை ஓதிய (திருஞானசம்பந்தப்) பெருமாளே.
* திருஞானசம்பந்தர் பாடிய முதல் தேவாரம் சிவனாரின் செவியிலுள்ள தோடைப் புகழ்ந்தது.சீகாழி சிதம்பரத்திற்கு 11 மைல் தெற்கே உள்ளது.சைவக் குறுவர்கள் நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர் பிறந்த தலம்.சீகாழிக்கு உரிய மற்ற பெயர்கள்: சீகாழி - காளி என்னும் நாகம் பூஜித்த தலம், பிரமபுரம் - பிரமன் பூஜித்த தலம், வேணுபுரம் - கஜமுக அசுரனுக்குப் பயந்த வேணு என்னும் இந்திரன் பூஜித்த தலம், தோணிபுரம் - பிரளய காலத்தில் தோணி போல மிதந்த காரணத்தால் இப் பெயர் வந்தது, பூந்தராய் - பூவும் தாரையும் பூஜித்த தலம், சிரபுரம் - அமிர்தம் வழங்கப்பட்டபோது திருமாலால் சிரம் தறிக்கப்பட்ட ராகு கேதுக்கள் தலையைத் திரும்பப் பெற பூஜித்த தலம், புறவம் - புறாவான பிரஜாபதி என்னும் முனிவர் தம் உடல் மாமிசத்தைக் கொடுத்து அரசனைக் காத்துப் பேறு பெற்ற தலம், சண்பை - சண்பை முனி எனப்பட்ட துர்வாசர் பூஜித்த தலம், கொச்சை - பராசர முனிவர் மற்ற ரிஷிகளின் சாபத்தால் துர்க்கந்தம் உடலில் பெற்று, அது நீங்கப் பூசித்த தலம், வெங்குரு - பிரகஸ்பதி பூஜித்த தலம், கழுமலம் - ஆன்மாக்களின் மலம் கழுவப்படுகின்ற தலம், முதுநகர் - , புகலி - என்பன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 776 - சீகாழி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தலம், பூஜித்த, தனனத்தத், என்னும், அழகிய, தானத், தானன, சீகாழி, திருஞானசம்பந்தர், காரிகள், மற்ற, சண்பை, உடையவளும், முனிவர், குயில், உள்ள, பேசுபவர்கள், பெருமாளே, என்னை, வரும், கரிய, டாசைப், முருகோனே