பாடல் 775 - சீகாழி - திருப்புகழ்

ராகம் - பந்துவராளி
தாளம் - திஸ்ர த்ருபுடை - 7
தாளம் - திஸ்ர த்ருபுடை - 7
தானாதன தானன தானன தானாதன தானன தானன தானாதன தானன தானன ...... தந்ததான |
பூமாதுர மேயணி மான்மறை வாய்நாலுடை யோன்மலி வானவர் கோமான்முநி வோர்முதல் யாருமி ...... யம்புவேதம் பூராயம தாய்மொழி நூல்களும் ஆராய்வதி லாதட லாசுரர் போரால்மறை வாயுறு பீதியின் ...... வந்துகூடி நீமாறரு ளாயென ஈசனை பாமாலைக ளால்தொழு தேதிரு நீறார்தரு மேனிய தேனியல் ...... கொன்றையோடு நீரேர்தரு சானவி மாமதி காகோதர மாதுளை கூவிளை நேரோடம் விளாமுத லார்சடை ...... யெம்பிரானே போமாறினி வேறெது வோதென வேயாரரு ளாலவ ¡£தரு போர்வேலவ நீலக லாவியி ...... வர்ந்துநீடு பூலோகமொ டேயறு லோகமு நேரோர் நொடி யேவரு வோய்சுர சேனாபதி யாயவ னேயுனை ...... யன்பினோடுங் காமாவறு சோம ஸமானன தாமாமண மார்தரு நீபசு தாமாவென வேதுதி யாதுழல் ...... வஞ்சனேனைக் காவாயடி நாளசு ரேசரை யேசாடிய கூர்வடி வேலவ காரார்தரு காழியின் மேவிய ...... தம்பிரானே. |
தாமரைமலர் மீது அமரும் லக்ஷ்மிதேவியை மார்பிலே தரித்துள்ள திருமாலும், வேதம் சொல்லும் வாய் நான்கு உடையவனான பிரமனும், கூட்டமான தேவர்களின் தலைவனான இந்திரனும், முநிவர்கள் முதலிய யாவரும், இயம்பப்படும் வேதப்பொருளை ஆராய்ந்து கூறும் நூல்களில் ஆராய்ச்சி செய்யாத வலிய அசுரர்கள் செய்யும் போருக்குப் பயந்து, மறைந்து, அச்சத்துடன் வந்து ஒன்று கூடி, நீ, பகைவர்களை அழிக்கவல்ல, ஒரு மாற்றுப் பகைவனை தந்தருள்வாயாக என்று ஈசுவரனைப் பாமாலைகளால் பாடித்தொழுது, திருநீறால் அழகு விளங்கும் திருமேனியனே, தேன் பொதிந்த கொன்றை மலருடனே நீர் அழகுடன் ததும்பும் கங்கையையும், சிறந்த நிலவையும், பாம்பையும், மாதுளம் பூவையும், வில்வ இலையையும், நாவல் இலை, விளா இலை, முதலியன நிறைந்த சடையணியும் எங்கள் பெருமானே, நாங்கள் உய்ந்து போகும் வழி இனி உன்னையன்றி வேறு எது உள்ளது எனச் சொல்லி அருள்க என்று முறையிடவே, நிறைந்த கருணையினால் அந்தச் சிவபெருமான் தந்தருளிய வேலவனே, நீலத் தோகை மயில் மீது ஏறி நீண்ட இந்தப் பூலோகத்துடனே மீதி ஆறு லோகங்களையும் நேராக ஒரே நொடிப் பொழுதிலே சுற்றி வந்தவனே, தேவர்களின் சேனாதிபதி ஆனவனே, உன்னை அன்போடு, மன்மதனைப் போன்ற அழகனே, ஆறு பூரண சந்திரர்களுக்கு சமமான திருமுகங்களை உடையவனே, மணம் நிறைந்து வீசும் கடப்பமாலைகளை அணிந்தவனே, நல்ல திவ்விய ஒளியை உடையவனே என்றெல்லாம் போற்றித் துதிக்காமல் திரிகின்ற வஞ்சகனாகிய என்னைக் காத்தருள்வாயாக. அந்நாளில் அசுரர்களின் தலைவனான சூரன் முதலியவர்களை சம்ஹரித்த கூரிய வேலாயுதத்தை உடையவனே, மேகங்கள் நிறைந்த சீகாழிப்பதியில்** வீற்றிருக்கும் தம்பிரானே.
இப்பாடலின் முக்கால் பகுதி கந்த புராணச் சுருக்கமாக அமைந்துள்ளது.
* சானவி = ஜானவி, ஜன்னு என்ற முநிவரின் காது வழியே சென்றதனால் கங்கைக்கு ஜானவி என்ற பெயர் உண்டு.
** சீகாழி சிதம்பரத்திற்கு 11 மைல் தெற்கே உள்ளது.சைவக் குறுவர்கள் நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர் பிறந்த தலம்.சீகாழிக்கு உரிய மற்ற பெயர்கள்: சீகாழி - காளி என்னும் நாகம் பூஜித்த தலம், பிரமபுரம் - பிரமன் பூஜித்த தலம், வேணுபுரம் - கஜமுக அசுரனுக்குப் பயந்த வேணு என்னும் இந்திரன் பூஜித்த தலம், தோணிபுரம் - பிரளய காலத்தில் தோணி போல மிதந்த காரணத்தால் இப் பெயர் வந்தது, பூந்தராய் - பூவும் தாரையும் பூஜித்த தலம், சிரபுரம் - அமிர்தம் வழங்கப்பட்டபோது திருமாலால் சிரம் தறிக்கப்பட்ட ராகு கேதுக்கள் தலையைத் திரும்பப் பெற பூஜித்த தலம், புறவம் - புறாவான பிரஜாபதி என்னும் முனிவர் தம் உடல் மாமிசத்தைக் கொடுத்து அரசனைக் காத்துப் பேறு பெற்ற தலம், சண்பை - சண்பை முனி எனப்பட்ட துர்வாசர் பூஜித்த தலம், கொச்சை - பராசர முனிவர் மற்ற ரிஷிகளின் சாபத்தால் துர்க்கந்தம் உடலில் பெற்று, அது நீங்கப் பூசித்த தலம், வெங்குரு - பிரகஸ்பதி பூஜித்த தலம், கழுமலம் - ஆன்மாக்களின் மலம் கழுவப்படுகின்ற தலம், முதுநகர் - , புகலி - என்பன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 775 - சீகாழி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தலம், பூஜித்த, தானன, தானாதன, என்னும், நிறைந்த, உடையவனே, தம்பிரானே, மற்ற, சானவி, முனிவர், சண்பை, மீது, சீகாழி, உள்ளது, தேவர்களின், ஜானவி, பெயர், தலைவனான