பாடல் 772 - சீகாழி - திருப்புகழ்

ராகம் - ....; தாளம்
-
தந்தத்தன தானன தந்தத் ...... தனதான |
சிந்துற்றெழு மாமதி அங்கித் ...... திரளாலே தென்றற்றரு வாசமி குந்துற் ...... றெழலாலே அந்திப்பொழு தாகிய கங்குற் ...... றிரளாலே அன்புற்றெழு பேதைம யங்கித் ...... தனியானாள் நந்துற்றிடு வாரியை மங்கத் ...... திகழாயே நஞ்சொத்தொளிர் வேலினை யுந்திப் ...... பொருவேளே சந்தக்கவி நூலினர் தஞ்சொற் ...... கினியோனே சண்பைப்பதி மேவிய கந்தப் ...... பெருமாளே. |
கடலில் இருந்து எழுகின்ற அழகிய சந்திரன் வீசும் நெருப்புப் பிழம்பாலே, தென்றல் காற்று சந்தனச் சோலையின் நறு மணத்துடன் எழுந்து வருவதாலே, மாலைப் பொழுதாகிய இரவின் நெருக்கத்தாலே, அன்பு மிகுந்து எழும் இப் பேதைப் பெண் மயக்கம் கொண்டு தனித்திருக்கின்றாள். சங்குகள் உள்ள சமுத்திரத்தை, கலங்கிய தோற்றம் ததும்பும்படியாக, விஷம் போன்று விளங்கும் வேலாயுதத்தைச் செலுத்திப் போர் செய்த அரசே, சந்தக் கவி நூல் சொல்லும் புலவர்களுடைய சொல்லில் விருப்பம் உடையவனே, சீகாழியில்* பொருந்தி வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே.
* சீகாழி சிதம்பரத்திற்கு 11 மைல் தெற்கே உள்ளது.சைவக் குறுவர்கள் நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர் பிறந்த தலம்..சீகாழிக்கு உரிய மற்ற பெயர்கள்: சீகாழி - காளி என்னும் நாகம் பூஜித்த தலம், பிரமபுரம் - பிரமன் பூஜித்த தலம், வேணுபுரம் - கஜமுக அசுரனுக்குப் பயந்த வேணு என்னும் இந்திரன் பூஜித்த தலம், தோணிபுரம் - பிரளய காலத்தில் தோணி போல மிதந்த காரணத்தால் இப் பெயர் வந்தது, பூந்தராய் - பூவும் தாரையும் பூஜித்த தலம், சிரபுரம் - அமிர்தம் வழங்கப்பட்டபோது திருமாலால் சிரம் தறிக்கப்பட்ட ராகு கேதுக்கள் தலையைத் திரும்பப் பெற பூஜித்த தலம், புறவம் - புறாவான பிரஜாபதி என்னும் முனிவர் தம் உடல் மாமிசத்தைக் கொடுத்து அரசனைக் காத்துப் பேறு பெற்ற தலம், சண்பை - சண்பை முனி எனப்பட்ட துர்வாசர் பூஜித்த தலம், கொச்சை - பராசர முனிவர் மற்ற ரிஷிகளின் சாபத்தால் துர்க்கந்தம் உடலில் பெற்று, அது நீங்கப் பூசித்த தலம், வெங்குரு - பிரகஸ்பதி பூஜித்த தலம், கழுமலம் - ஆன்மாக்களின் மலம் கழுவப்படுகின்ற தலம், முதுநகர் - , புகலி - என்பன.இப்பாட்டு அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த தலைவிக்காக பாடியது.கடல், சந்திரன், தென்றல், சந்தன மணம், இரவு இவை தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 772 - சீகாழி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தலம், பூஜித்த, என்னும், முனிவர், சண்பை, மற்ற, கந்தப், சந்திரன், தென்றல், சீகாழி, பெருமாளே