பாடல் 769 - சீகாழி - திருப்புகழ்

ராகம் - ...; தாளம் -
தந்த தானன தனதன தனதன தந்த தானன தனதன தனதன தந்த தானன தனதன தனதன ...... தனதான |
கொங்கு லாவிய குழலினு நிழலினு நஞ்ச ளாவிய விழியினு மிரணிய குன்று போல்வளர் முலையினு நிலையினு ...... மடமாதர் கொம்பு சேர்வன இடையினு நடையினு மன்பு கூர்வன மொழியினு மெழில்குடி கொண்ட சேயித ழமுதினு நகையினு ...... மனதாய சங்கை யாளியை அணுவிடை பிளவள வின்சொல் வாசக மொழிவன இவையில சம்ப்ர தாயனை அவலனை ஒளிதிக ...... ழிசைகூருந் தண்டை நூபுர மணுகிய இருகழல் கண்டு நாளவ மிகையற விழியருள் தந்த பேரருள் கனவிலு நனவிலு ...... மறவேனே வங்க வாரிதி முறையிட நிசிசரர் துங்க மாமுடி பொடிபட வடவனல் மங்கி நீறெழ அலகைகள் நடமிட ...... மயிலேறி வஞ்ச வேல்கொடு முனிபவ அழகிய சண்பை மாநக ருறையுமொ ரறுமுக வந்த வானவர் மனதினி லிடர்கெட ...... நினைவோனே பங்க வீரியர் பறிதலை விரகினர் மிஞ்சு பாதக ரறநெறி பயனிலர் பந்த மேவிய பகடிகள் கபடிகள் ...... நிலைகேடர் பண்பி லாதவர் கொலைசெயு மனதின ரிங்கெ ணாயிர ருயரிய கழுமிசை பஞ்ச பாதகர் முனைகெட அருளிய ...... பெருமாளே. |
வாசனை வீசும் கூந்தலிலும் அதன் ஒளியிலும், விஷம் கலந்த கண்களிலும், பொன் மலை போல வளர்ந்துள்ள மார்பினிலும் அதன் உறுதியான தன்மையிலும், அழகிய விலைமாதர்களின் கொடி போன்ற மெல்லிய இடுப்பிலும், நடையிலும், அன்பு மிக்கெழும் பேச்சிலும், அழகு குடி கொண்ட சிவந்த வாயிதழ் அமுதத்திலும் அவர்களுடைய சிரிப்பிலும் மனது பாய்கின்ற எண்ணம் கொண்டவனாகிய எனக்கு, அணு அளவேனும் அதன் பிளவளவேனும் இனிய சொற்களைப் பேசுவதே இல்லாததான வழக்கம் உள்ளவனும், வீணனும் ஆகிய எனக்கு, ஒளி விளங்குவதும் இசை மிகுந்ததும் ஆகிய தண்டையும் சிலம்பும் அணிந்துள்ள இரண்டு கழலடிகளைப் பார்த்து எனது வாழ் நாள் வீணாகப் பெருகுதல் இல்லாமல் (உனது) கண்ணோக்க அருளை (நீ) தந்த பெரும் கிருபையை கனவிலும் நனவிலும் நான் மறக்க மாட்டேன். கப்பல்கள் உலவும் கடல் முறையிட, அசுரர்களின் உயர்ந்த பெரிய முடிகள் பொடியாக, வடமுகாக்கினி அடங்கி சாம்பலாக, பேய்கள் நடனமாட மயிலின் மீது ஏறி துஷ்டர்களை வஞ்சித்து அழிக்கும் வேலைக் கொண்டு கோபித்தவனே, அழகிய சண்பை எனப்படும் சீகாழி நகரில் எழுந்தருளி இருக்கும் ஆறு முகப் பெருமானே, உன்னிடம் அடைக்கலம் புக வந்த தேவர்களின் மன வருத்தம் நீங்கும்படியாக நினைத்தவனே, சமணர்கள் வலிமை இருந்தும் தோல்வி அடைந்தவர், தலைவன் மயிர் பறிக்கும் உற்சாகத்தினர், மிகுதியான பாவம் செய்தவர்கள், தரும நெறியின் பயனை அடையாதவர்கள், பாசத்தில் கட்டுண்ட வேடதாரிகள், வஞ்சகர்கள், தன்மை கெட்டவர்கள், நல்லொழுக்கம் இல்லாதவர்கள், கொலை செய்ய இசையும் மனதை உடையவர்கள், இங்கு (மதுரையில்) அவர்கள் எண்ணாயிரம் பேர்களும் உயர்ந்த கழு மரத்தின் மேல் ஏறி, ஐந்து பெரிய பாவச் செயல்களைப் புரிந்ததால், முதன்மை நிலை கெட்டு ஒழியும்படி (திருஞானசம்பந்தராக வந்து) அருளிய பெருமாளே.
சீகாழிக்கு உரிய மற்ற பெயர்கள்: சீகாழி - காளி என்னும் நாகம் பூஜித்த தலம், பிரமபுரம் - பிரமன் பூஜித்த தலம், வேணுபுரம் - கஜமுக அசுரனுக்குப் பயந்த வேணு என்னும் இந்திரன் பூஜித்த தலம், தோணிபுரம் - பிரளய காலத்தில் தோணி போல மிதந்த காரணத்தால் இப் பெயர் வந்தது, பூந்தராய் - பூவும் தாரையும் பூஜித்த தலம், சிரபுரம் - அமிர்தம் வழங்கப்பட்டபோது திருமாலால் சிரம் தறிக்கப்பட்ட ராகு கேதுக்கள் தலையைத் திரும்பப் பெற பூஜித்த தலம், புறவம் - புறாவான பிரஜாபதி என்னும் முனிவர் தம் உடல் மாமிசத்தைக் கொடுத்து அரசனைக் காத்துப் பேறு பெற்ற தலம், சண்பை - சண்பை முனி எனப்பட்ட துர்வாசர் பூஜித்த தலம், கொச்சை - பராசர முனிவர் மற்ற ரிஷிகளின் சாபத்தால் துர்க்கந்தம் உடலில் பெற்று, அது நீங்கப் பூசித்த தலம், வெங்குரு - பிரகஸ்பதி பூஜித்த தலம், கழுமலம் - ஆன்மாக்களின் மலம் கழுவப்படுகின்ற தலம், முதுநகர் - , புகலி - என்பன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 769 - சீகாழி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தலம், பூஜித்த, தனதன, தந்த, சண்பை, என்னும், அழகிய, தானன, சீகாழி, மற்ற, பெரிய, முனிவர், பெருமாளே, முறையிட, கொண்ட, வந்த, அருளிய, ஆகிய, எனக்கு, உயர்ந்த