பாடல் 766 - சீகாழி - திருப்புகழ்

ராகம் - ஜோன்புரி
தாளம் - அங்கதாளம் - 6 1/2
தகதிமி-2, தகதிமி-2, தக-1, தகிட-1 1/2
தாளம் - அங்கதாளம் - 6 1/2
தகதிமி-2, தகதிமி-2, தக-1, தகிட-1 1/2
தானத்தன தான தனந்த தானத்தன தான தனந்த தானத்தன தான தனந்த ...... தனதான |
ஊனத்தசை தோல்கள் சுமந்த காயப்பொதி மாய மிகுந்த ஊசற்சுடு நாறு குரம்பை ...... மறைநாலும் ஓதப்படு நாலு முகன்ற னாலுற்றிடு கோல மெழுந்து ஓடித்தடு மாறி யுழன்று ...... தளர்வாகிக் கூனித்தடி யோடு நடந்து ஈனப்படு கோழை மிகுந்த கூளச்சட மீதை யுகந்து ...... புவிமீதே கூசப்பிர மாண ப்ரபஞ்ச மாயக்கொடு நோய்க ளகன்று கோலக்கழ லேபெற இன்று ...... அருள்வாயே சேனக்குரு கூடலி லன்று ஞானத்தமிழ் நூல்கள் பகர்ந்து சேனைச்சம ணோர்கழு வின்கண் ...... மிசையேறத் தீரத்திரு நீறு புரிந்து மீனக்கொடி யோனுடல் துன்று தீமைப்பிணி தீர வுவந்த ...... குருநாதா கானச்சிறு மானை நினைந்து ஏனற்புன மீது நடந்து காதற்கிளி யோடு மொழிந்து ...... சிலைவேடர் காணக்கணி யாக வளர்ந்து ஞானக்குற மானை மணந்து காழிப்பதி மேவி யுகந்த ...... பெருமாளே. |
அழிந்து போகும் தன்மையுடைய மாமிசம், தோல்கள் (இவைகளைச்) சுமக்கும் உடற்சுமை, மாயம் மிக்கதும், ஊசிப்போவதும், கடைசியில் சுடப்படுவதும், நாறுவதுமான சிறு குடிலாகிய இந்த உடல் நான்கு வேதங்களால் ஓதப்படுகின்ற நான்முகன் பிரமனால் ஏற்படுத்தப்பட்ட அழகுடன் உருப்பெற்று எழுந்து, ஓடியும், தடுமாறியும், திரிந்தும், தளர்ச்சி அடைந்தும், கூனித் தடிகொண்டு நடந்தும், இழிவைத் தரும் கோழை மிக்க குப்பையான இந்த உடலை, மிக விரும்பி, இந்தப் பூமியில், நாணம் உறும்படியாக விதிப் பிரகாரம் செல்வதான இந்த உலக மயக்கத்தில் உண்டாகும் பிணிகள் நீங்கி, உனது அழகிய இரண்டு திருவடிகளை இன்று எனக்கு அருள் புரிவாயாக. சேனன் என்னும் பட்டப் பெயர் வைத்திருந்த சமண குருக்களின் முன்னிலையில், மதுரையில் முன்பு (சம்பந்தராக வந்து) ஞானத் தமிழ் நூல்களாகிய தேவாரப் பாக்களைப் பாடி, கூட்டமான சமணர்கள் கழுவில் ஏறும்படிச் செய்து, திடத்துடன் திரு நீற்றை விநியோகித்து, மீனைக் கொடியாகக் கொண்ட பாண்டியனின் உடலில் பொருந்திய கொடிய சுர நோய் தீரும்படியாக அருள் சுரந்த குரு நாதனே, (வள்ளி மலைக்) காட்டில் மீது இருந்த சிறு மான் போன்ற வள்ளியை நினைந்து, தினைப்புனத்தில் நடந்து சென்று, ஆசைக் கிளியாகிய அவளோடு பேசி, வில் ஏந்திய வேடர்கள் காணும்படியாக வேங்கை மரமாக வளர்ந்து, அந்த ஞானக் குறப்பெண்ணை மணந்து, சீகாழிப்* பதியில் அமர்ந்து மகிழும் பெருமாளே.
* சீகாழி சிதம்பரத்திற்கு 11 மைல் தெற்கே உள்ளது.சைவக் குறுவர்கள் நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர் பிறந்த தலம்.சீகாழிக்கு உரிய மற்ற பெயர்கள்: சீகாழி - காளி என்னும் நாகம் பூஜித்த தலம், பிரமபுரம் - பிரமன் பூஜித்த தலம், வேணுபுரம் - கஜமுக அசுரனுக்குப் பயந்த வேணு என்னும் இந்திரன் பூஜித்த தலம், தோணிபுரம் - பிரளய காலத்தில் தோணி போல மிதந்த காரணத்தால் இப் பெயர் வந்தது, பூந்தராய் - பூவும் தாரையும் பூஜித்த தலம், சிரபுரம் - அமிர்தம் வழங்கப்பட்டபோது திருமாலால் சிரம் தறிக்கப்பட்ட ராகு கேதுக்கள் தலையைத் திரும்பப் பெற பூஜித்த தலம், புறவம் - புறாவான பிரஜாபதி என்னும் முனிவர் தம் உடல் மாமிசத்தைக் கொடுத்து அரசனைக் காத்துப் பேறு பெற்ற தலம், சண்பை - சண்பை முனி எனப்பட்ட துர்வாசர் பூஜித்த தலம், கொச்சை - பராசர முனிவர் மற்ற ரிஷிகளின் சாபத்தால் துர்க்கந்தம் உடலில் பெற்று, அது நீங்கப் பூசித்த தலம், வெங்குரு - பிரகஸ்பதி பூஜித்த தலம், கழுமலம் - ஆன்மாக்களின் மலம் கழுவப்படுகின்ற தலம், முதுநகர் - , புகலி - என்பன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 766 - சீகாழி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தலம், பூஜித்த, என்னும், தனந்த, தானத்தன, நடந்து, பெயர், அருள், உடல், உடலில், மற்ற, சண்பை, முனிவர், சிறு, சீகாழி, மணந்து, கோழை, யோடு, மிகுந்த, தோல்கள், இன்று, மானை, தகதிமி, வளர்ந்து, மீது, நினைந்து, பெருமாளே