பாடல் 743 - திருநாவலூர் - திருப்புகழ்

ராகம் - ....;
தாளம் -
தானதன தத்த தானதன தத்த தானதன தத்த ...... தனதான |
கோல மறை யொத்த மாலைதனி லுற்ற கோரமதன் விட்ட ...... கணையாலே கோதிலத ருக்கள் மேவுபொழி லுற்ற கோகிலமி குத்த ...... குரலாலே ஆலமென விட்டு வீசுகலை பற்றி ஆரழலி றைக்கு ...... நிலவாலே ஆவிதளர் வுற்று வாடுமெனை நித்த மாசைகொட ணைக்க ...... வரவேணும் நாலுமறை கற்ற நான்முகனு தித்த நாரணனு மெச்சு ...... மருகோனே நாவலர்ம திக்க வேல்தனையெ டுத்து நாகமற விட்ட ...... மயில்வீரா சேலெனும் விழிச்சி வேடுவர் சிறுக்கி சீரணி தனத்தி ...... லணைவோனே சீதவயல் சுற்று நாவல்தனி லுற்ற தேவர்சிறை விட்ட ...... பெருமாளே. |
அழகியவனும், அனங்கனாக உருவத்தை மறைத்து வைத்திருப்பவனும், மாலைப் பொழுதில் வந்து சேர்ந்துள்ளவனும், கொடியவனும் ஆன மன்மதன் செலுத்தும் புஷ்ப பாணங்களினாலும், குற்றமற்ற நல்ல செழிப்பான மரங்கள் நிறைந்த சோலையில் உள்ள குயிலின் பலமான ஓசையினாலும், விஷக் கதிர்களை எறிந்து வீசும் ஒளி மூலமாக மிகுத்த நெருப்பை எங்கும் அள்ளி இறைக்கும் நிலவினாலும், ஆவியானது தளர்ச்சியுற்று வாடுகின்ற என்னை நாள்தோறும் ஆசையுடனே அணைக்க நீ வரவேண்டும். நான்கு வேதங்களையும் கற்ற பிரமனைத் தோற்றுவித்த நாரணனாகிய திருமால் மெச்சிடும் மருகனே, புலவர்கள் மதிக்கும்படியாக வேலாயுதத்தை எடுத்து கிரெளஞ்ச மலையைப் பொடிபடச் செலுத்திய மயில் வீரனே, சேல் மீன் போன்ற கண்ணை உடைய வேடுவப் பெண் வள்ளியின் சீரும் அழகும் கொண்ட மார்பை அணைவோனே, குளிர்ந்த வயல்கள் சூழ்ந்துள்ள திருநாவலூரில்* வீற்றிருக்கும், தேவர்களைச் சிறையினின்றும் மீட்ட பெருமாளே.
* திருநாவலூர் இப்போது திருநாமநல்லூர் என்று வழங்கப்படுகிறது. பண்ருட்டிக்கு 11 மைல் மேற்கே உள்ளது.இப்பாட்டு அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த தலைவியாக தன்னைக் கற்பனை செய்து பாடியது.மன்மதன், மலர்க் கணைகள், சோலைக் குயில், நெருப்பை வீசும் நிலவு - வை தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 743 - திருநாவலூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானதன, விட்ட, லுற்ற, தத்த, நெருப்பை, வீசும், கற்ற, பெருமாளே, மன்மதன்