பாடல் 733 - திருக்கோவலூர் - திருப்புகழ்

ராகம் -
....; தாளம் -
தான தானன தானன, தான தானன தானன தான தானன தானன ...... தனதான |
பாவ நாரிகள் மாமட மாதர் வீணிக ளாணவ பாவை யாரிள நீரன ...... முலையாலும் பார்வை யாமிகு கூரயி லாலு மாமணி யார்குழை பார காரன வார்குழ ...... லதனாலுஞ் சாவ தாரவி தாரமு தார்த ராவித ழாலித சாத மூரலி தாமதி ...... முகமாலுஞ் சார்வ தாவடி யேனிடர் வீற மாலறி வேமிகு சார மாயதி லேயுற ...... லொழிவேனோ ஆவ ஆர்வன நான்மறை யாதி மூல பராவரி யாதி காணரி தாகிய ...... பரமேச ஆதி யாரருள் மாமுரு கேச மால்மரு கேசுர னாதி தேவர்க ளியாவர்கள் ...... பணிபாத கோவ தாமறை யோர்மறை யோது மோதம்வி ழாவொலி கோடி யாகம மாவொலி ...... மிகவீறும் கோவை மாநகர் மேவிய வீர வேலயி லாயுத கோதை யானையி னோடமர் ...... பெருமாளே. |
பாவச் செயல் செய்கின்ற விலைமாதர்கள், வீண் பொழுது போக்குபவர்கள், செருக்கு உடைய மாதர்களின் இளநீர் போன்ற மார்பகத்தாலும், கண் என்னும் மிகுந்த கூர்மையான வேலாலும், சிறந்த ரத்தினம் நிறைந்த குண்டலங்களாலும், அடர்ந்த மேகத்துக்கு ஒப்பான நீண்ட கூந்தலாலும், கொல்லுங் குணம் கொண்டுள்ளதும், செவ்விய இலவு போன்றதும் ஆன, அமுதம் நிறைந்துள்ள வாயிதழாலும், இனிமை தோன்றும் புன்சிரிப்பாலும், இதம் தரும் நிலவு போன்ற முகத்தாலும், எப்போதும் அடியேனுடைய துன்பங்கள் மிக அதிகமாக, காம மயக்கப் புத்தியே மிகுந்த இனிமை தருவதாய் நம்பி, அத்தகைய புத்தியின் வழியிலே பொருந்துதலை நான் விலக்க மாட்டேனோ? ஆக வேண்டியவற்றை நிரம்பக் கூறும் நான்கு வேதங்களின் முதல்வரும், மூலப் பரமரும், திருமால் முதலிய தேவர்களும் காண்பதற்கு அரியவருமான பரமேஸ்வரருமாகிய ஆதி மூர்த்தியார் பெற்றருளிய முருகேசனே, திருமாலுக்கு மருகனாகிய ஈசனே, ஆதி இல்லாதவனே, தேவர்கள் யாவரும் பணிகின்ற பாதனே, சிறப்பாக மறையோர் வேதங்கள் ஓதும் ஓசை வெள்ளமும், திருவிழாக்களின் ஒலியும், கோடிக் கணக்கான ஆகமங்களின் பேரொலியும் மிக்கு எழுகின்ற திருக்கோவலூர்* என்னும் பெரிய நகரில் வீற்றிருக்கும் வீரனே, வேல் என்னும் கூரிய ஆயுதத்தை உடையவனே, வள்ளி தேவயானையோடு வீற்றிருக்கும் பெருமாளே.
* திருக்கோவலூர் தென்னாற்காடு மாவட்டத்தில் செஞ்சிக்கோட்டைக்கு வடகிழக்கில் 5 மைலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 733 - திருக்கோவலூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானன, என்னும், வீற்றிருக்கும், இனிமை, மிகுந்த, யாதி, பெருமாளே