பாடல் 734 - தேவனூர் - திருப்புகழ்

ராகம் -
நாட்டகுறிஞ்சி
தாளம் - ஆதி - திஸ்ரநடை - 12
தாளம் - ஆதி - திஸ்ரநடை - 12
தான தான தந்த தந்த, தான தான தந்த தந்த தான தான தந்த தந்த ...... தனதான |
ஆறு மாறு மஞ்சு மஞ்சும் ஆறு மாறு மஞ்சு மஞ்சும் ஆறு மாறு மஞ்சு மஞ்சும் ...... அறுநாலும் ஆறு மாய சஞ்ச லங்கள் வேற தாவி ளங்கு கின்ற ஆரணாக மங்க டந்த ...... கலையான ஈறு கூற ரும்பெ ருஞ்சு வாமி யாயி ருந்த நன்றி யேது வேறி யம்ப லின்றி ...... யொருதானாய் யாவு மாய்ம னங்க டந்த மோன வீட டைந்தொ ருங்கி யான வாவ டங்க என்று ...... பெறுவேனோ மாறு கூறி வந்தெ திர்ந்த சூரர் சேனை மங்க வங்க வாரி மேல்வெ குண்ட சண்ட ...... விததாரை வாகை வேல கொன்றை தும்பை மாலை கூவி ளங்கொ ழுந்து வால சோம னஞ்சு பொங்கு ...... பகுவாய சீறு மாசு ணங்க ரந்தை ஆறு வேணி கொண்ட நம்பர் தேசி காக டம்ப லங்கல் ...... புனைவோனே தேவர் யாவ ருந்தி ரண்டு பாரின் மீது வந்தி றைஞ்சு தேவ னூர்வி ளங்க வந்த ...... பெருமாளே. |
மொத்தம் தொண்ணூற்றாறு (6+6+5+5+6+6+5+5+6+6+5+5+24+6= 96) ஆகிய துன்பங்களுக்கு காரணமான தத்துவங்களுக்கும் % வேறுபட்டதாக விளங்குகின்றதும், வேதாகமங்களைக் கடந்ததும், உபதேசக் கலையாகிய சித்தாந்தத்தால் கூட கூறுதற்கு ஒண்ணாததும், பெரும் தெய்வநிலையிலிருக்கும் நற்பொருளை ஏது (காரணம்) வேறு சொல்வதற்கு இல்லாமல் ஒப்பற்ற தானேயாக நின்று, மற்ற எல்லாமாகவும் விளங்கி, மனம் கடந்ததான மெளன இன்ப முக்தியை அடைந்து, சிந்தை ஒருமைப்பட்டு ஒடுக்கமுற்று யான் ஆசைகள் யாவும் அடங்கும் நிலையை என்று பெறுவேனோ? பகைமை பேசி வந்து எதிர்த்த சூரர் சேனை அழிய, கப்பல்கள் செல்லும் கடலினைக் கோபித்ததும், வேகமும் கோபமும் கொண்டதும், வெற்றி வாகையைச் சூடியதுமான வேலினை ஏந்தியவனே, கொன்றைமாலை, தும்பைமாலை, வில்வக் கொழுந்து, இளம் பிறைச் சந்திரன், விஷம் நிறைந்த, வாய் பிளந்த, கோபம் மிகுந்த பாம்பு, திருநீறு, கங்கை, யாவையும் சடையில் வைத்த நம் தலைவர் சிவபிரானின் குருநாதனே, கடப்ப மாலையை அணிந்தவனே, அனைத்துத் தேவர்களும் ஒன்று சேர்ந்து பூமியிலே வந்து வணங்கும் தேவனூர்** சிறக்க வந்த பெருமாளே.
* 96 தத்துவங்கள் பின்வருமாறு:36 பரதத்துவங்கள் (அகநிலை): ஆத்ம தத்துவம் 24, வித்யா தத்துவம் 7, சிவ தத்துவம் 5.ஐம்பூதங்கள், அவற்றின் தன்மைகளோடு, ஐயைந்து - 25 (புறநிலை): மண், தீ, நீர், காற்று, வெளி.ஏனைய தத்துவங்கள் 35 (புறநிலை): வாயுக்கள் 10, நாடிகள் 10, கன்மங்கள் 5, அகங்காரம் 3, குணம் 3, வாக்குகள் 4.
** தேவனூர் தென்னாற்காடு மாவட்டத்தில் செஞ்சிக்கு வடகிழக்கில் 5 மைல் தொலைவில் திருக்கோவிலூருக்கு 2 மைலில் உள்ள தலமாகும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 734 - தேவனூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்த, மாறு, தத்துவம், மஞ்சு, மஞ்சும், வந்து, புறநிலை, பெருமாளே, தத்துவங்கள், சூரர், மங்க, டந்த, பெறுவேனோ, சேனை, வந்த